பாத்திமா திருத்தலத்தில் புலம்பெயர்ந்தோர் திருப்பலி
நாடு விட்டு நாடு புலம் பெயரும் மக்களோடு இறைவனும் பயணம் செய்கிறார், அவர்களைக் காக்கிறார்; ஏனெனில், நலிவுற்ற சமுதாயம் எப்போதும் இறைவனின் இதயத்திற்கு நெருங்கிய ஒரு சமுதாயம் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பாத்திமா அன்னை திருத்தலத்தில் வழங்கிய மறையுரையில் கூறினார்.
ஆயர்கள் பேராயத்தின் தலைவர், கர்தினால் Marc Ouellet அவர்கள், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலத்தில், ஆகஸ்ட் 12, இத்திங்களன்று, புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோருக்கென திருப்பலியாற்றிய வேளையில், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோரை மையப்படுத்தி, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 18ம் தேதி முடிய பாத்திமா திருத்தலத்தில் நடைபெறும் திருப்பயணங்களின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 12ம் தேதி, கர்தினால் Ouellet அவர்கள் சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்தினார்.
உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் பயணிகள் என்ற உண்மையை, மக்களுக்கு உணர்த்தும் திருத்தூதுப் பணியை, புலம்பெயர்ந்தோரும், குடிபெயர்ந்தோரும் ஆற்றிவருகின்றனர் என்று கர்தினால் Ouellet அவர்கள் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
மனுவுருவெடுத்த இயேசு, இவ்வுலகில் ஒரு புலம்பெயர்ந்தோராக வாழ்ந்தார் என்பதையும் தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் Ouellet அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக, இத்திருப்பயணத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பக்தர்களை பாராட்டினார்.
Comments are closed.