ஆகஸ்ட் 15 : வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்

வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அந்நாள்களில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.”

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

மரியன்னையின் விண்ணேற்பைக் குறித்து சொல்லப்படும் தொன்மம். மரியா தன்னுடைய கடைசி காலத்தை சியோன் மலையருகிலே இருந்த ஓர் இல்லத்தில் செலவழித்தார். அவருக்கு 60 வயது நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் வானதூதர் அவருக்குக் காட்சி கொடுத்து, அவர் எப்படி இறப்பார், இறந்த பிறகு என்ன ஆவார் என்பது குறித்து சொல்லிவிட்டுச் சென்றார். அதுபோன்று ஒரு குறிப்பிட்ட நாளில் மரியாள் இறந்துபோனார். அவருடைய இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டு எல்லாச் சீடர்களும் அங்கு வந்தார்கள், தோமாவைத் தவிர. பின்பு அவர்கள் மரியாவைக் கல்லறையில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்கள். இதற்குள் மரியாவின் இறப்புச் செய்தி தோமாவின் காதுகளை எட்டியது. அவர் சீடர்களிடம் வந்து, “நான் இறந்த மரியன்னையின் உடலைக் கண்டால் ஒழிய எதையும் நம்பமாட்டேன்” என்று சொன்னார். உடனே சீடர்கள் தோமாவை, மரியா அடக்கம் செய்து வைக்கப்பட்ட கல்லறைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். அங்கு கல்லறையைத் திறந்து பார்த்தபோது, மரியாவின் உடல் இல்லாததைக் கண்டு, அவர் உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை நம்பத் தொடங்கினார்கள்.

வரலாற்றுப் பின்னணி.

இன்று நாம் கொண்டாடும் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவிற்கு நீண்ட நெடிய பாரம்பரியங்கள் உண்டு. மரியாவின் விண்ணேற்பைக் குறித்து தொடக்கத்தில் தூய ஜெர்மானுசும், தமஸ்கு நகர யோவானும்தான் பேசத் தொடங்கினார்கள். அவர்கள்தான் மரியாவின் விண்ணேற்பைக் குறித்து மறையுரை ஆற்றினார்கள். மூன்றாம் நூற்றாண்டில் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதைக் குறிக்கும் விதமாக மக்கள் விண்ணகம் நோக்கி ஜெபிக்கத் தொடங்கினார்கள். ஐந்தாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாவின் துயில் என்ற பெயரில் கொண்டாடப் பட்டது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிரியான் என்பவர் மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா என்ற பெயரிலேயே ‘மரியாவின் விண்ணேற்பைக் கொண்டாடத் தொடங்கினார்.

இப்படி வளர்ந்து வந்த இவ்விழா 1950 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் எழுதிய Magnificatissimus Deus’ என்னும் திருமடலில் அதனை இவ்வாறு உறுதி செய்தார்: ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தினாலும், தூய திருதூதர்களான பேதுரு, பவுலின் அதிகாரத்தினாலும், நமது தனிப்பட்ட அதிகாரத்தினாலும் நாம் எடுத்தியம்பி, அறிவித்து கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட மறைகோட்பாடாக வரையறுப்பது என்னவென்றால், அமல உற்பவியாகிய கடவுளின் தாய், எப்பொழுதும் கன்னியான மரியா தனது மண்ணக வாழ்க்கைப் பயணத்தை முடித்தபின், விண்ணக மகிமைக்கு ஆன்மாவோடும் உடலோடும் எடுத்துக்கொள்ளப்பட்டார். எனவே, யாராவது வரையறுக்கப்பட்ட இதை மறுத்தாலோ, சந்தேகித்தாலோ, அவர் இறை விசுவாசத்திலிருந்தும் கத்தோலிக்க விசுவாசத்திலிருந்தும் பிரண்டு விட்டார் என்று அறிந்து கொள்ளட்டும்”. திருத்தந்தை அவர்கள் மரியாவின் விண்ணேற்பை ஒரு விசுவாசப் பிரகடனமாக அறிவித்ததில் இருந்து இன்றுவரை மரியாவின் விண்ணேற்பை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் கொண்டாடி மகிழ்கின்றோம்.

விவிலியப் பின்னணி.

மரியா விண்ணகத்திற்கு உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பது, அவர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்ததால், கடவுள் அவருக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை என நாம் புரிந்துகொள்ளலாம்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதனுடைய உடலும் அவனுடைய ஆன்மாவும் தூயது, மாசற்றது (தொநூ 2: 1-7) அப்படிப்பட்டதை மனிதன் தன்னுடைய தவற்றால் தூய்மையற்றதாக, மாசு உள்ளதாக மாற்றிக்கொண்டான். எனவே பாவத்தின் சம்பளம் மரணம் (உரோ 5:12) என்பதைப் போன்று மரணமில்லா பெருவாழ்வைக் கொடையாகப் பெற்றிருந்த மனிதன், தான் செய்த பாவத்தினால் அக்கொடையை இழந்தான்; மரணத்தைத் தழுவினான். இது ஒரு பக்கம் இருந்தாலும் பாவக்கறையோடு இந்த மண்ணுலகத்தில் பிறந்தாலும், கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்தனால் மரணத்தைத் தழுவாமல் விண்ணகத்திற்கு இருவர் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் வேறுயாருமல்ல ஏனோக்கும், இறைவாக்கினர் எலியாவுமே ஆவார் (தொநூ 5:24, 2 அர 2:1). ஏனோக்கு கடவுளோடு நடந்தார். அதனால் அவர் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இறைவாக்கினர் எலியா கடவுளுக்கு உகந்த இறைவாக்கினராய் விளங்கினார். அதனால் அவரும் நெருப்புத் தேரோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

மரியாவைக் குறித்து சிந்தித்துப் பார்க்கும்போது அவர் கருவிலே பாவக்கறையில்லாமல் பிறந்தாள், ஆண்டவரின் தூதரால் ‘அருள்மிகப் பெற்றவளே’ என அழைக்கப்பட்டாள் (லூக் 1:28). அது மட்டுமல்லாமல் ஆண்டவர் இயேசுவையே தன்னுடைய உதிரத்தில் தாங்கிடும் பேறுபெற்றாள், இறைவனுக்கு உகந்த வாழ்ந்தாள். இத்தகைய பேற்றினால் மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என நாம் உறுதியாகச் சொல்லலாம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” (யோவா 12:26). மரியா தலை சிறந்த சீடத்தியாக வாழ்ந்ததனால் அவர் இயேசு இருக்கும் விண்ணக வீட்டில் இருப்பார் என நாம் உறுதிபடச் சொல்லலாம்.

Comments are closed.