படைப்பைப் பாதுகாப்பதில் இளையோரிடம் புதிய சிந்தனைகள்

ஐரோப்பா, தன்னை உருவாக்கிய தந்தையரின் கனவுகளாகத் தொடர்ந்து நடைபோடும், தனது தனிப்பண்பை எடுத்துரைக்கும், வரலாறு, கலாச்சார மற்றும் புவியியல் ஒன்றிப்பை செயல்படுத்துவதை உண்மையாக்கும் என்று, தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இத்தாலிய La Stampa தினத்தாளின், Vatican Insider என்ற இணையதள அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான Domenico Agasso என்பவருக்கு அளித்த நீண்ட நேர்காணலில், ஐரோப்பா, தனக்குள்ளே முடங்கிவிடாமல், மக்களின் தனித்துவங்களை மதிக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

அத்துடன், அரசியல், புலம்பெயர்ந்தோர், அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம், சூழலியல், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப்பணி போன்ற பல விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள், எவருமே இரண்டாம்தரம் அல்ல, எனவே, ஒவ்வொரு உரையாடலையும், நமது சொந்த தனித்துவத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, எடுத்துக்காட்டாக, நான் கத்தோலிக்கர் என்ற நிலையிலிருந்து உரையாடலைத் தொடங்காவிட்டால், என்னால் கிறிஸ்தவ ஒன்றிப்பை அமைக்க இயலாது என்று சொல்லி, ஒவ்வொருவரின் தனித்துவத்தின் மாற்ற முடியாத தன்மை பற்றிக் கூறினார்.

போர் பற்றிய கருத்து தெரிவிக்கையில், அமைதிக்காக நம்மை அர்ப்பணித்து அதற்காக உழைக்க வேண்டும் என்றும், ஆப்ரிக்க கண்டத்தில் நிலவும் பசி மிகவும் கவனம் செலுத்துப்பட வேண்டியது என்றும், நாடுகளின் பிரச்சனைகள் களையப்பட உதவிசெய்வதால், புலம்பெயர்வுகளை பெருமளவில் நிறுத்த முடியும் என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

பூமியின் வளங்கள் அதிகப்படியாக சுரண்டப்படுதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளன்று வெளியான தகவலில், இவ்வாண்டுக்கு, மறுஉற்பத்திக்குத் தேவையான வளங்கள் அனைத்தையும் மனிதர் ஏற்கனவே கரைத்துவிட்டனர் என்ற தகவல் அதிர்ச்சியைக் கொடுத்தது என்ற திருத்தந்தை, அமேசான் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் மிகவும் அவசியமானது என்று கூறினார்.

அமேசான் இப்பூமிக்கோளத்தின் வருங்காலத்திற்கு மிகவும் முக்கியமானது, நாம் சுவாசிக்கும் ஆக்ஜிசனில் பெரும்பகுதி அங்கிருந்தே வருகின்றது என்றுரைத்த திருத்தந்தை, காடுகளை அழிப்பது என்பது, மனித சமுதாயத்தைக் கொலை செய்வதாகும் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.