மன்னார் மடு பெருவிழாவுக்கு வரும் யாத்திரிகர்கள் அஞ்சத் தேவையில்லை-மன்னார் ஆயர்

யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருதமடு அன்னை ஆலயம் வருவோர் அஞ்சத் தேவையில்லை. அன்னையின் ஆசீரைப் பெற்றுச் செல்லுங்கள் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மடு யாத்திரிகர்களின் நலன் கருதி அத்தியாவசிய முன்னேற்பாடு சம்பந்தமாக
திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியபின் ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

மன்னார் மறைமாவட்டத்தில் மடு திருத்தலத்தில் நடைபெறும் ஆவணி 15 ந் திகதி பெருவிழாவுக்கான ஆயத்தங்கள் சம்பந்தமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடனும் ஏனைய திணைக்கள அதிகாரிகளுடனும் இன்று (நேற்று வெள்ளிக்கிழமை) கலந்துரையாடினோம்.

கடந்த 6 ந் திகதி இப் பதியில் கொடியேற்றம் நடைபெற்று தற்பொழுது ஒன்பது
நாட்களாக நவநாட்களை நடாத்தி வருகின்றோம். 14 ந் திகதி வெஸ்பர்
ஆராதனையுடன் 15 ந் திகதி காலை 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்படும்.
.
இதைத் தொடர்ந்து மருதமடு மாதாவின் திருச்சுரூப பவனியுடன் பக்தர்களுக்கு அன்னையின் ஆசீரும் வழங்கப்படும். தற்பொழுது பலர் மடு ஆலய வளாகத்துக்குள் கூடாரம் அமைத்தும் வீடுகளிலும் தங்கி இங்கு நடைபெறும் வழிபாடுகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இம்முறை பலர் இவ் விழாவில் கலந்து கொள்வார்கள் என நாங்கள்
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். பாதுகாப்பு காரணமாக இங்கு சில விஷேட நடவடிக்கைகள் செய்யப்பட்டடிருக்கின்றன. வௌ;வேறு இடங்களில் இங்கு வருவோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

தங்கள் வாகனங்களில் வரும் யாத்திரிகர்களுக்கு நாங்கள் விஷேடமாக
தெரிவிப்பது வாகனத்தில் பிரயாணிக்கும் அனைத்து நபர்களின் பெயர் அடையாள அட்டைகளின் இலக்கங்களையும் வாகனத்தின் இலக்கத்தையும் ஒரு தாளில் எழுதி வழங்கும்போது அது பாதுகாப்பு படையினருக்கு பெரும் ஒத்துழைப்பாக இருக்கும்.

மக்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு
வருவதற்கு யாரும் அஞ்சத் தேவையில்லை. பக்தர்களின் நலன் கருதி பலத்த
பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வருபவர்கள் நல்ல உள்ளத்துடன் நல்ல யாத்திரிகர்களாக வாருங்கள்.
மருதமடு அன்னை தனது பரிந்துரையால் உங்களுக்கும் உங்கள்
குடும்பங்களுக்கும் அவசியமான வரப்பிரசாதங்களை பெற்றுத் தருவாள். ஆகவே நடைபெறும் நவநாட்களிலும் திருவிழாத் திருப்பலியிலும் பங்குபற்றி இறை மற்றும் அன்னையின் ஆசீகளைப் பெற்றுச் செல்லுங்கள் என இவ்வாறு
தெரிவித்தார்.

Comments are closed.