ஆகஸ்ட் 9 : வெள்ளிக்கிழமை. நற்செய்தி வாசகம்

நற்செய்தி வாசகம்.

ஒருவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 24-28

அக்காலத்தில் இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்.

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிட மகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார்.

நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

இன்றைய புனிதர்.

சிலுவையின் தூய தெரசா பெனடிக்டா.

“உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5: 16)

வாழ்க்கை வரலாறு.

இன்று நாம் நினைவுகூரும் சிலுவையின் தூய தெரசா பெனடிக்டா என்ற இடித் ஸ்டெயின் 1891 ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் 12 ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள பிரஸ்லா என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய குடும்பம் பாரம்பரியமான யூத குடும்பம்.

இடித் ஸ்டெயினுக்கு இரண்டு வயது நடந்துகொண்டிருக்கும்போது இவருடைய தந்தை இறந்துபோனார். எனவே இவருடைய தாய்தான் குடும்பத்தைப் பராமரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இடித் ஸ்டெயினோடு பிறந்தவர்கள் மொத்தம் பத்துப்பேர். இத்தனை பேரையும் வளர்த்தெடுப்பதற்கு அவர் எத்துணை கஷ்டப்பட்டிருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்துபார்த்துக் கொள்ளுங்கள். இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய தாயார் அனைவருக்கும் யூத நெறியை ஆழமாக ஊட்டி வளர்த்து வந்தார்.

இடித் ஸ்டெயின் வளர வளர யூத மதத்திலிருந்த நாட்டம் முற்றிலுமாகக் குறைந்து போனது. அதே நேரத்தில் மெய்யியலில் அதிகமான நாட்டம் உண்டானது. ஆதலால் அவர் மெய்யியலை முறைப்படிக் கற்றுத் தேர்ந்து, தன்னுடைய 25 ஆம் வயதில் அதில் முனைவர் பட்டமும் பெற்றார். இப்படி படிப்பிலே முழுக் கவனமும் செலுத்திக் கொண்டிருந்த இடித் ஸ்டெயினின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஆம், அவருடைய தோழியின் கணவர் திடிரென இறந்துபோனார். அவரோ ஒரு கிறிஸ்தவர். கணவனை இழந்திருந்த தோழியைத் தேற்றுவதற்காக சென்ற இடித் ஸ்டெயின், அவர் மிகவும் மனதிடத்டோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு நின்றார்.

உடனே அவர் தன் தோழியிடம், “நீ மிகவும் அன்பு செய்த உன்னுடைய கணவனை நீ இழந்த நிலையிலும், எப்படி உன்னால் இவ்வளவு மனவுறுதியோடு இருக்க முடிகின்றது?” என்று கேட்க, அவர், “நான் என் ஆண்டவர் இயேசுவின்மீது கொண்டிருக்கும் நம்பிக்கைதான் எனக்கு இவ்வளவு மனவுறுதியைத் தந்திருக்கின்றது” என்று சொன்னார். இதைக் கேட்ட இடித் ஸ்டெயின் கிறிஸ்துவத்தின்மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார். 1922 ஆம் ஆண்டில் ஒருநாள் இவர் அவிலா தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தபோது அவருடைய வாழ்க்கையால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு, தன்னை கிறிஸ்தவ மதத்தில் இணைத்து கார்மேல் சபைக் கன்னியாக வாழத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல், இடித் ஸ்டெயின் என்ற தன்னுடைய பெயரை சிலுவையின் தெரசா பெனடிக்டா என மாற்றிக்கொண்டார்.

ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகள் கார்மேல் சபையின் ஒழுங்குமுறைகளின் படி நடந்து, மிகவும் பக்தியான ஒரு பெண்மணியாக வாழ்ந்து வந்தார் இடித் ஸ்டெயின். இந்த சமயத்தில்தான் ஹிட்லர், யூதர்களையும் யூத மதத்திலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்களையும் சிறைப்பிடித்து சித்ரவதை செய்ய ஆணையிட்டான். அதன்பேரில் இடித் ஸ்டெயினும் அவருடைய சகோதரியும் வதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அங்கே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சித்ரவதையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இடித் ஸ்டெயினும் அவருடைய சகோதரியும் இறந்துபோனார்கள்.

இடித் ஸ்டெயினின் ஜெப மற்றும் முன்மாதிரியான வாழ்க்கையைப் பார்த்து வியந்து போன திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல், இவருக்கு 1998 ஆம் ஆண்டு பட்டம் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தினார்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

தூய சிலுவையின் தெரசா பெனடிக்டின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

உலகிற்கு உப்பாக ஒளியாக இருத்தல்.

தூய சிலுவையின் தெரசா பெனடிக்டின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது, அவர் தன்னுடைய தோழியின் உறுதியான நம்பிக்கையால், மனதிடத்தால் கவரப்பட்டு கிறிஸ்தவரானார் என்று அறிகின்றோம். அவருடைய தோழி அவருக்கு ஒளியாக, உப்பாக மாறினார். அதனால்தான் சிலுவையின் தெரசா பெனடிக்டால் கிறிஸ்தவராக முடிந்தது. பின்னாளில் அவரும்கூட பலருக்கும் ஒளியாக உப்பாக மாற முடிந்தது.

இவருடைய நினைவுநாளைக் கொண்டாடும் நாமும் உலகிற்கு உப்பாக மாறவேண்டும் என்பதுதான் இறைவனுடைய விருப்பாக இருக்கின்றது. ஏனெனில் கிறிஸ்தவர் வாழ்க்கை என்பது சாரமுள்ள வாழ்க்கை, பிறருக்கு நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அர்த்தத்தைத் தருகின்ற வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கையைத் தான் தெரசா பெனடிக்ட் வாழ்ந்தார்.

ஆகவே, தூய தெரசா பெனடிக்டின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அவரைப் போன்று உலகிற்கு உப்பாக, ஒளியாக மாறுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.