இயேசுவின் தோற்றமாற்றம்
1456 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியர்களுக்கும் இடையே பெல்கிரேட் என்னும் இடத்தில் கடுமையான போர் மூண்டது. இந்தப் போரில் ஹுன்யாடி ஜோன்ஸ் என்பவர் கிறிஸ்தவர்களின் சார்பாக நின்று போர்தொடுத்தார். போரின் முடிவில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வெற்றிகொண்டார்கள். அவர்கள் இத்தகையதொரு வெற்றியை இறைவனின் துணையால்தான் பெற்றார்கள் என்பதை நன்கு உணர்ந்தார். இதை அறிந்த அப்போதைய திருத்தந்தை மூன்றாம் கலிஸ்துஸ் என்பவர் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவை கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வெற்றிகொண்ட அந்த ஆகஸ்ட் 6 ஆம் நாளில் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழா ஆகஸ்ட் 06 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் ஆண்டவரின் உருமாற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த நிகழ்வை – விழாவைக் – குறித்துச் சொல்கின்றபோது திருத்தந்தை பெரிய கிரகோரியார், “இயேசு சொன்ன ‘மானிட மகன் எருசலேமிற்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்’ என்று வார்த்தைகளால் சீடர்கள் குழம்பிப் போய் இருந்தார்கள். எனவே, அப்படிப்பட்ட சீடர்களுக்கு தன்னுடைய விண்ணக மகிமையைக் காண்பிப்பதற்காகவும், தாம் அடைய இருக்கும் பாடுகளின் உட்பொருளை உணர்த்தவுமே இயேசு இந்த உருமாற்ற நிகழ்வை நிகழ்த்திக் காட்டினார்” என்று சொல்வார். ஆம், இது முற்றிலும் உண்மை. ஏனென்றால் உலகை மீட்க வந்த மெசியா துன்புறவேண்டும் என்பது சீடர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. எனவேதான், இயேசு தன்னுடைய உருமாற்ற நிகழ்வின் வழியாக எருசலேமில் தான் அடைய இருக்கும் பாடுகளின் உட்பொருளை அவர்களுக்கு தெளிவாக விளக்குகின்றார்.
இயேசுவின் உருமாற்ற நிகழ்வில் மோசேயும் எலியாவும் தோன்றியதன் அர்த்தம் என்ன என்பதும் நம்முடைய சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. அதற்கு விவிலிய அறிஞர்கள் சொல்லக்கூடிய காரணங்களில் முதலாவது, இயேசு வாழ்ந்த காலத்தில் அவரை சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும் நினைத்தார்கள் (மத் 16:14). இத்தகைய குழப்பங்களைத் தெளிவுபடுத்தவும், இயேசு, தான் ஓர் இறைவாக்கினர் மட்டுமல்ல, இறைவாக்கினர்களுக்கு எல்லாம் மேலான இறைவன் என்பது இந்த நிகழ்வின் வழியாகத் தெளிவாகின்றது. இரண்டாவது, இயேசுவின் மீது எப்போதும் ‘மூதாதையர்களின் சட்டங்களை மீறுகின்றார்’ என்ற குற்றச்சாட்டு இருந்துகொண்டே வந்தது. ஆனால் இந்த உருமாற்ற நிகழ்வில் திருச்சட்டத்தை வழங்கிய மோசேயும் பெரிய இறைவாக்கினராகிய எலியாவும் வருவதால், இயேசு திருச்சட்டத்தையும், இறைவாக்கினையும் அழிக்க அல்ல, மாறாக அதனை நிறைவேற்ற வந்திருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்தபடுகின்றது (மத் 5:17)
மூன்றாவது விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மோசேயும் எலியாவும் மீண்டுமாக மண்ணகத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு வாழ்வுகொடுக்கின்ற ஆற்றல் இயேசுவுக்கு உண்டு என்ற செய்தியும் வலியுறுத்தப்படுகின்றது. நான்காவதாக மோசேயும் எலியாவும் தோன்றியது, எருசலேமில் நிகழ இருக்கும் இயேசுவின் பாடுகளைக் குறித்து பேசுவதற்கே என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நிகழ்வின் வழியாக குழப்பத்தில், அவ நம்பிக்கையில் இருந்த சீடர்கள் இயேசுவின் பாடுகளைக் குறித்த தெளிவைப் பெறுகிறார்கள், அவர்மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்குகிறார்கள் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.
Comments are closed.