மன்னிப்பின் வழியே, அமைதி கிட்டும்

மன்னிப்பின் வழியே, அமைதி எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் இப்புதனன்று குறிப்பிட்டுள்ளார்.

“மன்னிப்பின் வழியே, அமைதி கிட்டும் என்பதே, இயேசு காட்டியுள்ள பாதை, ஏனெனில், ஒரு தீமை, மற்றொரு தீமையை ஒருபோதும் திருத்தாது; கடுஞ்சினம், ஒருபோதும், இதயத்திற்கு நன்மையை வழங்காது” என்ற சொற்கள், ஐகஸ்ட் 07, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஆகஸ்ட் 06, இச்செவ்வாய் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,071 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 743 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 62 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

2012ம் ஆண்டு, டிசம்பர் 12ம் தேதி, அப்போது திருத்தந்தையாகப் பணியாற்றிய 16ம் பெனடிக்ட் அவர்கள், டுவிட்டர் செய்திகளைத் துவக்கினார்.

Comments are closed.