திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரைகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரைகள், ஆகஸ்ட் 7, இப்புதன்கிழமையன்று மீண்டும் ஆரம்பமாகும் என்று, வத்திக்கான் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறைக்காக, ஜூலை மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பொது மறைக்கல்வியுரைகள், மீண்டும் நாளை இடம்பெறும் எனவும், இந்த மறைக்கல்வியுரை, திருத்தந்தையின் 280வது நிகழ்வாக இருக்கும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், பொது மறைக்கல்வியுரைகள் பற்றி அலசியுள்ள,  வத்திக்கான் செய்திகளின் செய்தியாளர் ஜெர்ஜோ செந்தோஃபாந்தி அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில், சனிக்கிழமைகளிலும் நடைபெற்ற மறைக்கல்வியுரைகளையும் கணக்கில் எடுத்து, புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதியன்று, திருஅவையின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதுவரை 279 பொது மறைக்கல்வியுரைகளை நடத்தியுள்ளார் என்றும், இந்த பொது வார நிகழ்வு உட்பட, மூவேளை செப உரைகள், வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லத்தில் ஏறத்தாழ ஒவ்வொரு நாள் காலையிலும் நிறைவேற்றும் திருப்பலிகள், பொது திருவழிபாடுகள் போன்றவை முக்கியமானவை என்றும், செந்தோஃபாந்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கரல்லாதவர் உட்பட, உலகின் பல பகுதிகளிலிருந்து பலதரப்பட்ட குழுவினரைச் சந்திக்கும்வேளையில், கிறிஸ்தவ விசுவாசம் பற்றிய ஆழ்ந்த மறைக்கல்வி சிந்தனைகளை திருத்தந்தை வழங்கி வருகிறார் எனவும், செந்தோஃபாந்தி அவர்கள் கூறியுள்ளார்.

திருவருள்சாதனங்கள் பற்றி 9, தூய ஆவியாரின் கொடைகள் பர்றி 7, திருஅவை பற்றி 15, குடும்பம் பற்றி 36, யூபிலி ஆண்டில் இரக்கம் பற்றி 49, கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி 38, திருப்பலி பற்றி 15, திருமுழுக்கு பற்றி 6, உறுதிபூசுதல் பற்றி 3, பத்துக்கட்டளைகள் பற்றி 17, விண்ணிலுள்ள எம் தந்தாய் இறைவேண்டல் பற்றி 16, திருத்தூதர் பணிகள் பற்றி இதுவரை 4 என, பொது மறைக்கல்வியுரைகளில் திருத்தந்தை விளக்கியுள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, புனித வாரத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது முதல் பொது மறைக்கல்வியுரையில், உயிர்த்த மனிதர் போன்று வாழ்வது பற்றி விளக்கினார். இரக்கமுள்ள வானகத்தந்தை நம்மை எப்போதும், இரக்கத்துடன் அரவணைக்கிறார் என்பதை மறக்க வேண்டாம் என, திருத்தந்தை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

Comments are closed.