அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்திக்கப்போவதில்லை -மால்கம் இரஞ்சித்
இலங்கையில், உயிர்ப்பு ஞாயிறன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் பலியானவர்கள் குறித்த உண்மைகள் வெளிக்கொணரப்படாதவரை, அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களைச் சந்திக்கப்போவதில்லை என்று, அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ம் தேதி, கொழும்பு நகரில் ஆலயங்களும், ஆடம்பர விடுதிகளும் பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் ஆகியும், அவை குறித்த அதிகாரப்பூர்வ விசாரணைகளின் முடிவுகள், இன்னும் வெளியிடப்படவில்லை என்று, பலமுறை புகார் கூறியுள்ள கர்தினால் இரஞ்சித் அவர்கள், உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகள் வெளியிடப்பட வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, பல்வேறு அவைகள், குழுக்கள், மற்றும், நிறுவனங்கள் நடத்திய விசாரணைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும், இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன என்றும், கர்தினால் இரஞ்சித் அவர்கள் குறை கூறியுள்ளார்
இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படாதவரை, அரசின், எதிர்க்கட்சியின் அல்லது வேறெந்த அரசியல் கட்சியின் அரசுத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை, தான் சந்திக்கப்போவதில்லை என்று கூறியுள்ள, கர்தினால் இரஞ்சித் அவர்கள், இவ்விவகாரம் தொடர்பாக, அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறை கூறியுள்ளார்.
Comments are closed.