கியூப இளையோரிடம் திருத்தந்தை-மறைப்பணி சீடர்களாக மாறுங்கள்

அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி, எப்போதும் முன்னோக்கிச் செல்லுங்கள் என்று, கியூபா நாட்டு இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“இதோ நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்ற தலைப்பில், கரீபியன் தீவு நாடாகிய கியூபாவில், ஆகஸ்ட் 01, இவ்வியாழனன்று, இரண்டாவது தேசிய இளையோர் நாள் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்குச் செய்தி அனுப்பியுள்ள, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரின் நம்பிக்கையுள்ள அடிமையாக வாழ்ந்த அன்னை மரியாவை, உறுதியாகப் பற்றிக்கொண்டு, இயேசு கிறிஸ்துவை சந்தித்ததில் பிறக்கும் மகிழ்வை, தொடர்ந்து அனுபவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மரியாவைப் போன்று, இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகவும், மறைப்பணி சீடர்களாக மாறுவதற்குத் தங்களை மனமுவந்து அர்ப்பணிக்கவும், கியூப இளையோரைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இவர்கள் வழியாக, மேலும் ஏராளமான இளையோர், ஆண்டவர் இயேசுவின் இருப்பைக் கண்டுகொள்ளவும், அவரின் அழைப்புக்குச் செவிமடுத்து, அவரின் நட்பில் வாழவும், நம்பிக்கை மற்றும் இரக்கத்தில் வேரூன்றப்பட்ட வாழ்வை வாழவும் இயலும் என்று கூறியுள்ளார்.

கியூபாவின் El Cobre பிறரன்பு அன்னை மரியாவிடம், அந்நாட்டு இளையோர்க்காகச் செபிப்பதாகவும், தனது செய்தியை நிறைவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

Comments are closed.