பொதுக்காலம் பதினேழாம் ஞாயிறு (ஜூலை 28)

இறைவேண்டல் செய்வோமா?

நிகழ்வு

தொழில் சம்பந்தமாக கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்ற பெரியார் ஒருவர் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, நகரில் இருந்த ஒரு பெரிய உணவகத்தில் சாப்பிடச் சென்றார். அந்த உணவகம்தான் நகரத்திலேயே நல்ல உணவகம் என்று பெயர் பெற்றிருந்ததால், ஏராளமான பேர் அந்த உணவகத்திற்குச் சாப்பிட வந்திருந்தார்கள்.

கிராமத்திலிருந்து சென்ற பெரியவர் உணவகத்தில் ஓரமாக இருந்த ஓர் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டு, தனக்குப் பிடித்தமான உணவு வகையினைச் சொல்லிவிட்டு, உணவுக்காகக் காத்திருந்தார். சிறிதுநேரத்தில் அவர் கேட்ட உணவு வந்தது. அவர் உடனடியாகச் சாப்பிடத் தொடங்காமல், ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுளிடம் வேண்டிவிட்டுச் சாப்பிடத் தொடங்கினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, அவர்க்கு முன்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருசில விடலைப் பசங்கள் அவரிடம், “என்ன பெரியவரே! உங்கள் ஊரில் இருக்கின்ற எல்லாரும் சாப்பிடுவதற்கு முன்னம், இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் சாப்பிடுவீர்களா?” என்று நக்கலாகக் கேட்டார்கள். அதற்கு அவர் அவர்களிடம், “எங்கள் ஊரில் இருக்கின்ற பன்றிகளைத் தவிர, மற்ற எல்லாரும் இறைவனிடம் வேண்டிவிட்டுத்தான் சாப்பிடத் தொடங்குவார்கள்” என்றார். இதைக்கேட்டு அந்த விடலைப் பசங்கள் வெட்கித் தலைகுனிந்து நின்றார்கள்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவேண்டல் செய்யவேண்டும். ஏனென்றால், அலெஸிஸ் கரோலில் என்ற அறிஞர் குறிப்பிடுவதுபோல், ஒரு மனிதன் தனக்கான எல்லா ஆற்றலையும் இறைவேண்டலின் வழியாகவே பெறுகின்றான். இன்றைய இறைவார்த்தை இறைவேண்டலின் முக்கியத்துவத்தையும் எப்படி நாம் இறைவனிடம் வேண்டவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவேண்டல் செய்ய கற்றுத்தரக் கேட்கும் இயேசுவின் சீடர்கள்

நற்செய்தியில், இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து, யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல், எங்கட்கும் கற்றுக்கொடும் என்று கேட்கின்றார்கள். இயேசு தன்னுடைய சீடர்க்கு எப்படி இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தார் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் முன்னம், யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவேண்டல் செய்ய எப்படிக் கற்றுக்கொடுத்தார் என்பதையும் அவருடைய வாழ்வு எப்படி இறைவேண்டலில் நிலைத்திருந்தது என்பதையும் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்செய்தி நூல்கள், யோவான் எப்படி மெசியாவின் வருகைக்காக மக்களை அணியமாக்கினார் என்பதையும் எப்படித் திருமுழுக்குக் கொடுத்தார் என்பதையும் உண்மையை எப்படி உரக்கச் சொன்னார் என்பதையும்தான் அதிகமாகப் பேசுகின்றன. ஆனால், இன்றைய நற்செய்தி வாசகம் அவருடைய வாழ்வின் இன்னொரு பக்கத்தை அதாவது அவருடைய ஆன்மீக வாழ்வை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

யோவான் தன்னுடைய சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தார் எனில், அவர் எந்தளவுக்கு இறைவேண்டலில் நிலைத்திருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இப்படி அவர் இறைவேண்டலில் நிலைத்திருந்ததால்தான் என்னவோ இயேசு அவரை ‘மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் யாருமில்லை’ (லூக் 7:28) என்று சொல்கின்றார். ஆதலால், திருமுழுக்கு யோவான் இறைவேண்டலில் நிலைத்திருந்தக்கூடும். அதனாலேயே அவர் தன் சீடர்க்கு இறைவனிடம் வேண்டக் கற்றுத்தருகின்றார். இதைக் பார்த்து அல்லது கேள்விபட்ட இயேசுவிடம் சீடர்கள், அவரிடம் தங்கட்கு இறைவனிடம் வேண்டக்கற்றுத் தரக் கேட்கின்றார்கள்.

இயேசுவின் சீடர்கள் அவரிடம் எப்படி போதிக்கவேண்டும் என்றோ, எப்படிப் பேய்களை ஓட்டவேண்டுமென்றோ கேட்கவில்லை. மாறாக, அவர்கள் அவரிடம் எப்படி இறைவேண்டல் செய்யவேண்டும் என்று கேட்பது நமது கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது.

இறைவனிடம் வேண்டக் கற்றுத்தரும் இயேசு

தன்னுடைய சீடர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இயேசு அவர்கட்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருகின்றார். அவர் கற்றுத்தரும் இறைவேண்டல் எப்படிப்பட்டது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அவர் எப்படி இறைவேண்டல் செய்பவராக இருந்தார் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு தன்னுடைய பணிவாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறைவேண்டல் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாக அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோதும் (லூக் 3:21) மக்கள் கூட்டம் அவரிடம் வருவதற்கு முன்னமும் (லூக் 5:16) பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் முன்னமும் (லூக் 6:12) தன்னுடைய சீடர்கள் தன்னை எப்படிப் புரிந்துவைத்திருக்கிறார்கள் என்று கேட்பதற்கு முன்னமும் (லூக் 9:18) உருமாற்றம் அடைகின்றபோதும் (லூக் 9:29) தனியாகவும் (மாற் 1:35) இன்ன பிற வேளைகளிலும் அவர் இறைவேண்டல் செய்தார் என்று விவிலியம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இப்படி இறைவேண்டலில் நிலைத்திருந்த இயேசுதான் தன் சீடர்க்கு இறைவேண்டல் செய்யக் கற்றுத் தருகின்றார்.

இயேசு தன் சீடர்க்குக் கற்றுத்தரும் இறைவேண்டல் இரண்டு பகுதிகளாக இருக்கின்றது. முதற்பகுதி இறைவனின் ஆட்சி இப்புவியில் வருவதற்காகவும் இரண்டாவது பகுதி நம்முடைய தேவைகட்கு வேண்டுவதாக இருக்கின்றது. உண்மைதான், எப்போதெல்லாம் நாம் இறைவனுக்கு முதலிடம் கொடுத்து, அவருடைய ஆட்சிக்காகவும் அவருடைய திருவுளம் நிறைவேறுவதற்காகவும் மன்றாடுகின்றாமோ அப்போது இறைவன் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார். ஏனெனில், நம்முடைய இறைவன் நாம் கேட்கும் முன்னமே, நம்முடைய தேவைகளை அறிந்துவைத்திருப்பவர் (மத் 6:8). அப்படிப்பட்ட இறைவனை நோக்கி, அவருடைய திருவுளம் நிறைவேற வேண்டுவதே சிறப்பானதாகும்.

இறைவனிடம் தொடர்ந்து மன்றாடச் சொல்லும் இயேசு

இறைவனிடம் வேண்டுகின்றபோது அவர்க்கு முதன்மையான இடம் கொடுத்து வேண்டச் சொல்லும் இயேசு, தொடர்ந்து இறைவனிடம் மன்றாடச் சொல்கின்றார். அதைத்தான் அவர் ‘கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கின்றார். இவ்வுண்மையை விளக்க அவர் சொல்லும் உவமைதான், தன்னுடைய நண்பர்க்காக இன்னொரு நண்பரிடம் அப்பம் கேட்கும் நண்பர் உவமையாகும். இவ்வுவமையில் நண்பரின் தொந்தரவின் பொருட்டு இன்னொரு நண்பர் அப்பம் தருவதாக வருகின்றது. இவ்வுவமையில் நாம் கவனிக்க வேண்டியது, கொடுக்க மனமில்லாத நண்பரே தன்னுடைய நண்பர்க்குக் கொடுக்க முன்வரும்போது, தாராளமாகத் தரும் கடவுள் தன்னிடம் கேட்போர்க்கு எவ்வளவு தருவார் என்பதாகும். ஆகையால், பிள்ளைகளாகிய நம் ஒவ்வொர்வர்க்கும் கொடைகளை வாரிவழங்கும் இறைவனிடம் நாம் தொடர்ந்து மன்றாடுவதே சிறப்பானது.

சிந்தனை

‘இறைவேண்டல் என்பது கடவுளின் கைகளில் நம்மை ஒப்படைத்துவிட்டு, அவருடைய திருவுளம் நிறைவேறக் காத்திருப்பது’ என்பார் அன்னைத் தெரசா. உண்மைதான். கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் மன்றாடினால், நம்முடைய தேவைகள் நிறைவேறும் என்பது உறுதி. ஆகவே, நாம் ‘இறைவா! உம்முடைய திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல, மண்ணுலகிலும் நிறைவேறுக’ என்று மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.