ஜூலை 27 : நற்செய்தி வாசகம்

அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30

அக்காலத்தில் இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன.

நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள்.

அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்’ என்றார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு வயலில் தோன்றி களைகள் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இந்த உவமை நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றன. அவை என்னவென்று இப்போது பார்ப்போம்.

உவமையில் வரும் நிலக்கிழார் தன்னுடைய வயலில் நல்ல விதைகளை விதைக்க, பகைவனோ களைகளை விதைத்துவிட்டுப் போய்விடுகின்றான். இதை அறிந்த நிலக்கிழாரின் ஆட்கள், நடந்தவற்றை எல்லாம் சொல்லிவிட்டு, “நாங்கள் போய் அவற்றைப் (களைகளை) பறித்துக்கொண்டு வரலாமா? என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “வேண்டாம். களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமைகளை நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்…” என்கிறார்.

நிலக்கிழார் தன்னுடைய ஆட்களிடம், “களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமைகளை நீங்கள் பிடுங்கிவிடக்கூடும்” என்று சொல்வதில் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. மேம்போக்காக நாம் தீர்ப்பிடும்போது நல்லவர்களைக் கூட தீயவர்கள் என்று தீர்ப்பிடலாம். இத்தகைய ஒரு தவறு நடக்கக்கூடாது என்பதற்காகத் தான், இப்போது அறுவடை செய்யவேண்டாம் – நீங்கள் தீர்ப்பிடவேண்டாம் – என்று சொல்கிறார். ஆகையால், சாதாரண மனிதர்களாகிய நாம் அடுத்தவரைக் குறித்து தீர்ப்பிட எந்தவிதத் தகுதியில்லை என்பதை உணரவேண்டும்.

அடுத்ததாக, மனிதர்கள் ஒருவர் மற்றவர்மீது தீர்ப்பிட எந்தவொரு தகுதியில்லை என்பதை அறியும் அதே வேளையில், கடவுள் ஒருவருக்கு மட்டுமே தீர்ப்பிடம் அதிகாரம் உண்டு என்பதை உணரவேண்டும். உவமையில் வரும் நிலக்கிழார் சொல்லக்கூடிய, “முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கென கட்டுக்களாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்” என்பதை அந்த பொருளில்தான் நாம் இணைத்துப் பார்க்கவேண்டும். இறுதி நாளில் எல்லாரும் தீர்ப்புக்கு உள்ளாவார்கள். அப்போது நல்லவர்கள் நிலைவாழ்வையும், தீயவர்கள் தண்டனையும் பெறுவார்கள். அதுவரைக்கும் நாம் ஒருவர் மற்றவரைத் தீர்ப்பிடாமல் இருப்பதே நாம் செய்யக்கூடிய நல்ல காரியமாகும்.

ஆகவே, தீர்ப்பிடும் அதிகாரம் இறைவன் ஒருவருக்கு மட்டுமே உரியது. நமக்கு பிறரைப் பற்றித் தீர்ப்பிட எந்த அதிகாரம் இல்லை என்பதை உணர்வோம். இறைவனுக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்

Comments are closed.