ஜூலை 26 : வெள்ளிக்கிழமை நற்செய்தி வாசகம்.
இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்பவர்கள் பயன் அளிப்பர்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23
அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்.
நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள்.
இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை .
தூய ஜோக்கிம், அன்னா விழா
இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தூய யாக்கோபு நற்செய்தியில் (திருச்சபையால் அங்கீகரிக்கப்படாதது) இடம் ஒரு நிகழ்வு.
மரியாவின் பெற்றோர்களான ஜோக்கிமிற்கும், அன்னாவுக்கும் நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. அதனால் மரியாவின் தந்தையான ஜோக்கிம் பாலைவனத்திற்குச் சென்று, கடுமையாகத் தவம் புரிந்தார். ஒருநாள் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “நீயும், உன்னுடைய மனைவியும் விரும்பிக் கேட்ட வரத்தை ஆண்டவர் கனிவோடு கேட்டருளினார்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். அவர்கள் இருவரது ஜெபத்தின் பயனாகக் கிடைத்த கனிதான் மரியா.
ஆம், இன்று திருச்சபையானது மரியாவின் பெற்றோரான தூய ஜோக்கிம் மற்றும் அன்னாவின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்லநாளில் இவர்களது வாழ்வு நமக்கு எத்தகைய பாடத்தை எடுத்துக்கூறுகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
ஜோக்கிமும், அன்னாவும் யூதா வழிமரபைச் சார்ந்தவர்கள். நாசரேத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களைப் பற்றிய செய்தி இரண்டாம் நூற்றாண்டில் எழுத்தப்பட்ட தூய யாக்கோபு நற்செய்தி நூலிலிருந்துதான் அதிகமாகப் படித்து அறிகின்றோம். இவர்களது விழா கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடப்பட்ட வருகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வமாக 1969 ஆம் ஆண்டிலிருந்துதான் திருச்சபையில் உலக முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “ஒரு மரம் அதன் கனியைக் கொண்டுதான் அறியப்படும்” (லூக் 6:44) என்று. அந்த வகையில் பார்க்கும்போது அன்னை மரியாள் ஆண்டவரின் திருவுளத்திற்குக் கீழ்படிந்து நடந்தது போல மரியாவின் பெற்றோர்களும் இறைதிருவுளத்திற்குக் கீழ்படிந்து நடந்திருப்பார்கள். அன்னை மரியாள் எப்படி பிறரன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்களோ அது போன்று அவருடைய பெற்றோர்களும் அவ்வாறு விளங்கியிருப்பார்கள்.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை/தந்தை வளர்ப்பதிலே” என்பார் கவிஞர்கள் ஒருவர். ஆம், ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாயும், தந்தையும் மிகவும் முக்கியமான இடம் வகிக்கிறார்கள். மரியாள் விசுவாசத்தின் தாயாக விளங்குகிறாள் என்றால் அதற்கான அத்தனைப் பெருமையும், மகிமையும் அவருடைய பெற்றோரையே சாரும். அவர்கள்தான் மரியாளுக்கு வேதத்தையும், விசுவாசத்தையும் ஊட்டி வளர்த்தார்கள். அவர்கள்தான் மரியாவுக்கு எல்லாவற்றையும் கற்றுத் தந்தார்கள்.
ஓர் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ரேணுகா என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தாள். அவளுக்கு மூன்று குழந்தைகள். அந்த மூன்று குழந்தைகளில் டோனி என்ற சிறுவன் தன்னுடைய தாயின் மீது உயிராய் இருந்தான். தாய் எங்கே செல்கிறாளோ, அங்கெல்லாம் அவள் பின்னாலே சென்றான். சில நேரங்களில் தாயானவள் திடிரென்று திரும்பும்போது அவளுக்குப் பின்னால் டோனி பின்தொடர்ந்து வருவதால் இருவரும் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஒருநாள் அவள் சமயலறையில் மும்முரமாக வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது, எண்ணெய் பாத்திரத்தை எடுத்துவிட்டுத் திரும்பியவள், அவளுக்குப் பின்னால் டோனி இருப்பதைக் கவனியாமல் அவன்மேலேயே விழுந்துவிட்டாள். இதனால் அந்த இடம் முழுவதும் எண்ணெய் ஆகிவிட்டது. அப்போது அவளுக்கு வந்த கோபத்தில் சிறுவனை நன்றாக அடித்துவிட்டாள்.
பின்னர் அவள் அவனிடம், “எதற்காக நீ இப்படி என் பின்னால் வந்துகொண்டே இருக்கிறாய்?” என்று கேட்டதற்கு அவன், “அம்மா என்னுடைய பள்ளிக்கூடத்தில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர், “நாம் எப்போதும் இயேசுவின் பாதச்சுவட்டில் நடக்கவேண்டும், அப்போதுதான் நமது வாழ்வு ஒளிமயமாக இருக்கும்” என்றார். என்னால் இயேசுவைப் பார்க்கமுடியவில்லை. ஆனால் தாயாகிய உன் உருவில் இயேசுவைப் பார்க்கிறேன். அதனால்தான் உன்னுடைய பாதச்சுவட்டில் ஒவ்வொரு நாளும் நடக்கிறேன்” என்றான்.
இதைக் கேட்ட தாயானவள், தன்னுடைய மகனைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அடித்துவிட்டோமே என்று வருந்தினாள். பின்னர் அவனை கட்டித் தழுவிக் கொண்டாள்.
பெற்றோர்கள்தான் குழந்தைகளுக்கு எல்லாம். அவர்களைப் பார்த்துதான் குழந்தைகள் வளருகிறார்கள். அவர்கள்தான் குழந்தைகளுக்கு முதல் கதாநாயகனும், கதாநாயகியும் ஆவார்கள். எனவே அவர்கள் நல்வழியில் நடந்தார்கள் என்றால் குழந்தைகளும் நல்வழியில் நடப்பார்கள்.
ஆகவே, மரியாவின் பெற்றோர்களான ஜோக்கிம், அன்னாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் அவர்களைக் கொடையாகத் தந்த இறைவனுக்கு முதலில் நன்றி செலுத்துவோம். அதே வேளையில் அவர்கள் வாழ்ந்துகாட்டிய எடுத்துக்காட்டான வாழ்வால் மரியாள் எப்படி கடவுளுக்கு உகந்தவளாக விளங்கினாளோ, அதுபோன்று நாமும் நம்முடைய சமூகத்திற்கு/ பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.