ஜூலை 23 : நற்செய்தி வாசகம்

தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே” என்றார் இயேசு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.

ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, “என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே.

விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
சிந்தனை

கத்தோலிக்கரை மடக்க இன்று ஏந்தப்பட்டுள்ள ஆயுதம் இந்த விவிலியப் பகுதி.

தன் அன்னையை யார் என கேட்டு விட்டார், எனவே அந்த அன்னையை உயர்வாக மதிப்பது தவறு என சொல்லி திரியும் கூட்டம் இன்று அதிகரித்து வருகிறது. இதற்கு பதில் சொல்ல தெரியாத கத்தோலிக்கர்கள் அவர்கள் வைக்கும் வாதம் சரிதானோ என நினைப்பது, வாதம் வைப்பவரைவிட இவர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்களாக மாறுகிறார்களோ என கேட்கத் தோன்றுகின்றது.

மகன் தன் தாயை யார் என கேட்பது, அவருடைய துரோகத்தை வெளிக்காட்டுவதற்கா?

முகன் தன் தாயை அவமானப்படுத்தி விட்டார் என்றார், இந்த மகனை மட்டும் உயர்வாக மதித்திடுவது முறையாகுமா?

தன்னிடம் சொன்னவர்களுக்கு பாடம் புகட்ட அவர் கூறும் உண்மை, தன் தாய் என்னை பெற்றதால் மட்டுமல்ல, மாறாக இறைவனின் வார்த்தையை தன் கருவிலே சுமந்து, இறை திருவுளத்திற்கு இதோ உமது அடிமையென்று தன்னை உட்படுத்தியது, என்னை பெற்றெடுப்பதற்கு முன்பே அந்த அன்னை பேறுபெற்றவளாகிப் போனாள் என்பதை உணர்த்திய பாடத்தை அறிந்து கொள்வது எப்பொழுது?
—————————————–
மறையுரைச் சிந்தனை (ஜூலை 23)

யார் இயேசுவின் தாய்?, யார் இயேசுவின் சகோதர சகோதரி?

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்தபோது நடைபெற்ற நிகழ்வு

ஒருநாள் ஆபிரகாம் லிங்கன் அடிமைகளின் விற்பனைச் சந்தைக்குச் சென்றார். அங்கே கறுப்பினத்தைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் ஏலத்தில் விடப்பட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண்ணின் நிலையோ மிகவும் பரிதாக இருந்தது. தன்னை யார் ஏலம் எடுக்கப்போகிறாரோ?, அவர் தன்னை என்னென்னவெல்லாம் செய்யப்போகிறாரோ? என்பதை நினைத்து பயந்து அழுதுகொண்டிருந்தார்.

அப்பெண்மணியைப் பார்த்து, அவர்மீது இரக்கம்கொண்ட ஆபிரகாம் லிங்கன் தானே அவரை ஏலத்தில் எடுத்தார். ஏலத்தில் எடுத்தது மட்டுமல்லாமல், அவரை விடுதலை செய்தும் அனுப்பிவைத்தார். எல்லாவற்றையும் அறிந்த அப்பெண்மணி ஆபிரகாம் லிங்கனிடம் வந்து, “அடிமையாக இருந்த என்னை விடுதலை செய்திருக்கிறீர்கள், உங்களுக்கு என்னுடைய வாழ்நாள் முழுவதும் பணிசெய்து வாழ்வேன்” என்றார். இதைக் கேட்ட ஆபிரகாம் லிங்கன், “அம்மா! உங்களை நான் விடுதலை செய்துவிட்டேன். இனிமேல் நீங்கள் உங்களுடைய மனம்போல் வாழலாம்” என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, “உங்களை விட்டு நான் யாரிடம் செல்வேன், நீங்கள்தான் என்னை விடுதலை செய்தீர்கள், ஆகவே, என்னுடைய வாழ்நாள் முழுவதும் உங்களுக்குப் பணிந்து சேவை செய்து வாழ்வேன்” என்றார்.

அவர் சொன்னது போன்றே தன்னுடைய வாழ்நாள் ஆபிரகாம் லிங்கனுக்குப் பணிந்து வாழ்ந்து வந்தார்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் பெண்மணி எப்படி ஆபிரகாம் லிங்கனுக்குக் பணிந்து, கீழ்படிந்து வாழ்ந்தாரோ, அது போன்று அன்னை மரியாவும் தான் ஆண்டவரின் அடிமை என்பதை உணர்ந்து, அவருக்குக் கீழ்படிந்து வாழ்ந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தாயும் அவருடைய சகோதர்களும் அவரைப் பார்த்துச் செல்கிறார்கள். ஏனென்றால், இயேசுவைக் குறித்து மக்கள் பலவாறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார், புத்தி பேதலித்து அலைகிறார் என்றெல்லாம் மக்கள் பேசிக்கொண்டிருந்ததால்தான் இயேசுவும் அவருடைய சகோதரர்களும் அவரைப் பார்க்கச் செல்கிறார். அவர்கள் இயேசுவைப் பார்க்க வந்த செய்தியை ஒருவர், இயேசுவிடம் சொல்ல, அவர் அவரிடம், “யார் என்னுடைய தாய்? என் சகோதரர் யார்?” என்று கேட்டுவிட்டு, தன்னுடைய சீடர்கள் பக்கம் திரும்பி, “என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணுலகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்கிறார்.

இயேசு சொன்ன வார்த்தைகள் ஆழமான சிந்தனைக்குரியவை. அவருடைய வார்த்தைகள் யார் இயேசுவின் தாய், சகோதர, சகோதரி என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றது. விவிலிய அறிஞரான வில்லியம் பார்க்லே, இயேசுவின் தாயாக, சகோதர சகோதர மாறுவதற்கு மூன்று முக்கியமான தகுதிகளைப் பட்டியலிடுவார். அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பொதுவான இலட்சியம் (Common Ideal): இதுதான் இயேசுவின் தாயாக, சகோதர சகோதரியாக மாறுவதற்கான முதலாவது தகுதியாகும். அது என்ன பொதுவான இலட்சியம் என்று சிந்தித்துப் பார்க்கும்போது, பல்வேறு இனங்களாக பிரிந்து கிடக்கின்ற நாம், இயேசுவில் ஒரே குடும்பமாக இணைந்துவந்து, அவர் கண்ட இறையாட்சிக் கனவை, இந்த மண்ணுலகத்தில் நிலைநாட்டுவதாகும். யாராரெல்லாம் இயேசுவில் இணைந்து வந்து, அவர் கண்ட கனவை இப்புவியில் நிலைநாட்டுகிறார்களோ அவர்கள் இயேசுவின் தாயாக, சகோதர, சதொகரியாக மாறும் பேற்றினைப் பெறுவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

பொதுவான அனுபவம் (Common Experience): இது இயேசுவின் தாயாக, சகோதர, சகோதரியாக மாறுவதற்கான இரண்டாவது தகுதியாகும். பொதுவான அனுபவம் என்று சொல்லும்போது ‘இறைவன் நம்முடைய தந்தை, நாம் அவருடைய மக்கள்’ என்ற மனப்பான்மையோடு வாழவேண்டும். இன்றைக்கு பலருக்கு அடுத்தவரை, எளியவரை தன்னுடைய சகோதரராக, சகோதரியாகப் பார்க்கக்கூடிய மனநிலை இல்லை. இத்தகையோர் இயேசுவின் உண்மையான உறவினராக மாறமுடியாது என்பதே உண்மை.

கீழ்ப்படிதல் (Obedience): இயேசுவின் உண்மையான உறவினராக மாறுவதற்கான மூன்றாவது தகுதியாகும். இறைவனின் வார்த்தைக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும், அதற்காக நாம் எதையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

இப்படி மேலே சொல்லப்பட்ட கருத்துகளின்படி யாராரெல்லாம் வாழ்கிறார்களோ, வாழ்ந்தார்களோ அவர்கள் இயேசுவின் உண்மையான உறவினர்களாக மாறுவார்கள் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. மரியாள் இத்தகைய போதனைகளின் வாழ்ந்தார், அதனால் அவர் இயேசுவைப் பெற்றெடுத்ததனால் மட்டுமல்லாது, இறைவார்த்தைக்குக் கீழ்ப்படிந்தும் இயேசுவின் தாயாக மாறினார். நாமும் மரியாவைப் போன்று இறைவனின் வார்த்தைகளுக்குக் கீழ்படிந்து நம்முடைய வாழ்க்கையை அமைப்போம். இயேசுவின் உண்மையான உறவினர்கள் ஆவோம்

Comments are closed.