நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 23)

தந்தையின் திருவுளம் நிறைவேற்றுவோம்

நிகழ்வு

ஓரூரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய தோட்டத்தில் பலவகை மரங்களை நட்டுவைத்து, அவற்றைப் பாங்குடனே பராமரித்து வந்தார். அவர் வளர்த்து வந்த மரங்களிலேயே மூங்கில் மரம் அவர்க்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால், அம்மரம் மற்ற எல்லா மரங்களைவிடவும் மிக வேகமாகவும் அதே நேரத்தில் தடிமனாகவும் உயரமாகவும் வளர்ந்து வந்தது.

இது ஒருபக்கம் இருக்க, அவருடைய மரத் தோட்டத்திற்குப் பக்கத்தில் அவர்க்கு இன்னொரு தோட்டமும் இருந்தது. அதில் அவர் பயிர்வகைகளை நட்டு வளர்த்து வந்தார். அந்தத் தோட்டத்திற்கும் அவருடைய மரத் தோட்டத்திற்கும் இடையே ஒரு சிற்றோடையானது இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அது காய்ந்துபோய்தான் கிடந்தது. இதனால் தண்ணீர் வசதி நன்றாக இருந்த அவருடைய மரத்தோட்டம் செழிப்பாகவும் பயிர்வகைகளை நட்டு வளர்த்து வந்த அவருடைய இன்னொரு தோட்டம் காய்ந்துபோயும் இருந்தது.

இந்நிலையில் ஒருநாள் அவர் மிகவும் நேசித்த மூங்கில் மரத்திற்குக் கீழே சென்று, “நான் மிகவும் நேசிக்கும் மூழ்கில் மரமே! எனக்கொரு யோசனை வந்திருக்கின்றது. அந்த யோசனையின்படி நடப்பதற்கு நீ சம்மதிப்பாயா?” என்றார். “என்ன யோசனை என்று சொல்லுங்கள் ஐயா! நான் அதற்குச் செவிமடுக்கிறேன்” என்று மிகுந்த வாஞ்சையோடு பதில்கூறியது மூங்கில் மரம். விவசாயி சற்றுத் தயக்கத்தோடு பேசத் தொடங்கினார்: “அது வேறொன்றுமில்லை… எனக்கு இன்னொரு தோட்டம் இருக்கிறது அல்லவா! அதற்குத் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் வறண்டுபோய் இருக்கின்றது. இடையில் சிற்றோடை வேறு இருப்பதால் இங்கிருந்து அங்கு தண்ணீர் கொண்டுசெல்ல முடியாமலும் இருக்கின்றது. அதுதான் இங்கிருந்து அந்தத் தோட்டத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்ல உன்னை இரண்டாக வெட்டி, உன்னுடைய ஒருமுனையை இந்தப் பக்கம் வைத்துவிட்டு, மறுமுனையை அந்தப் பக்கம் வைத்துவிட்டு இங்கிருந்து தண்ணீர் பாய்ச்சினால் அங்கு தண்ணீர் எளிதாகச் செல்லும். அந்தத் தோட்டமும் செழிப்பாக வளரும்.”

விவசாயி இவ்வாறு சொன்னது மூங்கில் மரத்திற்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இருந்தாலும் அந்த அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சரிங்க ஐயா! நீங்கள் வளர்த்த மரம் நான்… என்னை உங்களுடைய விருப்பம் போல் என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்” என்றது. உடனே விவசாயி அருவாளை எடுத்து, மூங்கில் மரத்தின் அடியில் சில வெட்டுகள் வெட்டினார். அது அப்படியே சரிந்து கிழே விழுந்தது. பின்னர் அவர் அதன்வழியாகத் தண்ணீர் போகக்கூடிய அளவுக்கு அதை இரண்டாகப் பிளந்தார். அதன்பிறகு அதனுடைய ஒருமுறையை மரத்தோட்டத்தின் பக்கமும் இன்னொரு முனையை பயிர்வகைகள் பயிரிடப்பட்ட தோட்டத்தின் பக்கமும் வைத்துத் தண்ணீர் பாய்ச்சினார். தண்ணீர் மூங்கிலின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வழியாகப் பாய்ந்து, பயிர்வகைகள் பயிரிடப்பட்டிருந்த தோட்டத்தில் பாய்ந்து, அதை வளங்கொழிக்கச் செய்தது.

இப்போது அந்த விவசாயிக்கு ஓடையின் இந்தப் பக்கம் இருந்த மரத்தோட்டமும் ஓடையின் அந்தப் பக்கம் இருந்த பயிர்வகைகள் இருந்த தோட்டமும் செழிப்பாக இருப்பது கண்டு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. தன்னுடைய இந்த மகிழ்ச்சிக்கு, மூங்கில் மரம்தான் காரணம் என்று அதை நினைத்து மிகவும் பெருமைப்பட்டர்.

இந்த நிகழ்வில் வரும் மூங்கில் மரம் எப்படி விவசாயியின் விரும்பத்திற்கு ஏற்றாற்போல் செயல்பட்டு, அந்த விவசாயியின் உள்ளத்தில் தனியிடம் பெற்றதோ, அதுபோன்று தந்தையின் திருவுளத்தின் படி நடந்து மரியா கடவுட்கு மிகவும் உகந்தவர் ஆனார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தந்தையின் திருவுளத்தின்படி நடந்து பேறுபெற்ற மரியா

நற்செய்தியில் இயேசு போதித்துக்கொண்டிருக்கும்போது, அவரைக் காண அவருடைய தாயும் சகோதரர்களும் வருகிறார்கள். அவர்கள் வந்த செய்தி இயேசுவிடம் சொல்லப்பட்டபோது, அவர், “யார் என்னுடைய தாய், சகோதர்கள்?” என்று கேட்டுவிட்டு, “விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் ஆவார்” என்கின்றார்.

இயேசு சொல்கின்ற இவ்வார்த்தைகளின் படி, மரியா இயேசுவைப் பெற்றெடுத்தனால் மட்டுமல்லாமல், தந்தையின் திருவுளத்தை தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தில் நிறைவேற்றியதாலும் (லூக் 1: 38) இயேசுவுக்குத் தாயாகின்றார். இயேசு நமக்கும் அவருடைய தாயாக, சகோதரிகளாக, சகோதரர்களாக மாறுகின்ற பேற்றினை அளித்திருக்கின்றார். ஆகையால், நாமும் தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவருடைய தாயாகும் சகோதர, சகோதரிகளாக மாறும் பேற்றினைப் பெறுவோம்.

சிந்தனை

‘இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்’ (யாக் 1:22) என்பார் யாக்கோபு. ஆகவே, நாம் மரியாவைப் போன்று இறைவார்த்தையைக் கேட்டு, தந்தைக் கடவுளின் திருவுளத்தின் படி நடப்பவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.