பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு (ஜூலை 21)

தேவையானது ஒன்றே!

நிகழ்வு

ஒரு நகரில் பெரும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருடைய பிரதான நோக்கமே பணமீட்டுவதுதான். இப்படிப் பணமீட்டுவதே தனது வாழ்வின் பிரதான நோக்கம் என்று வாழ்ந்து வந்த அவர், ஒருநாள் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

இதற்கிடையில் அவரைப் பலநாட்களாக நோட்டமிட்டுக்கொண்டிருந்த அதே நகரில் இருந்த திருடன் ஒருவன், சரியான இடம் பார்த்து, துப்பாக்கியுடன் அவர் முன் வந்து நின்றான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போன அவர், ஒருநிமிடம் செய்வதறியாது நின்றார். அப்பொழுது அந்தத் திருடன் அவரிடம், “உனக்குப் பணம் வேண்டுமா? உயிர் வேண்டுமா?” என்று துப்பாக்கியை அவருடைய நெற்றிப்பொட்டில் வைத்து மிரட்டினான். அவர் சிறிதும் தாமதியாமல், “எனக்குப் பணம்தான் முக்கியம்… அது இருந்தால்தான் வயதான காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிக்க முடியும்” என்றார்.

தொழிலதிபர் இவ்வாறு சொன்னது அந்தத் திருடனுக்குப் பயங்கர எரிச்சலூட்டியது. உடனே அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஓர் அழுத்து அழுத்த, தொழிலதிபர் தலை சிதறி இறந்துபோனார்.

வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாதாரண காரியங்கட்கு முக்கியத்துவம் கொடுத்து வாழக்கூடியவர்கள் கடைசியில் இப்படித்தான் அழிந்து போவார்கள் என்ற உண்மையை இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும், நம்முடைய வாழ்க்கையில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டும் என்ற தெளிவனைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பற்பல பணிகளில் பரபரப்பாக இருந்த மார்த்தா

நற்செய்தியில் இயேசு மார்த்தா, மரியாவின் வீட்டுக்குச் செல்கின்றார். அங்கு அவர் சென்றபோது மார்த்தா அவரை வரவேற்கின்றார். ஆனால், அவர் இயேசுவை வரவேற்பதோடு சரி, அதன்பிறகு அவர் இயேசுவுக்கு விருந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்று கிளம்பி விடுகின்றார். அதுமட்டுமல்லாமல், தனக்கு உதவிசெய்ய வரவில்லை என்று தன் சகோதரி மரியாவைக் குறைபட்டுக் கொள்கின்றார்.

இத்தகையோர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களெனில், இதே அதிகாரத்தின் (லூக் 10) தொடக்கத்தில் வருகின்ற இயேசுவின் சீடர்களைப் போன்று நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் அல்லது அதைத் தொடர்ந்து வருகின்ற நல்ல சமாரியர்களைப் போன்று வரியவர்கட்கும் தேவையில் உள்ளவர்கட்கும் உதவிசெய்வார்கள். நற்செய்தி அறிவிப்பதும் தேவையில் உள்ளவர்கட்கும் உதவி செய்வது தேவையாவைதான். அதற்காக அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு ஒன்றும் செய்யமுடியாது. யோவான் நற்செய்தியில் இயேசு இதைத்தான், “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது (யோவா 15: 5) என்று கூறுகின்றார். ஆகையால், நாம் மார்த்தவைப் போன்று இயேசுவை விட்டுவிலகி, எதை எதையோ செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நல்ல பங்கைத் தேர்ந்துகொள்ளவே முடியாது என்பது உறுதி.

நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட மரியா

மார்த்தா பற்பல பணிகளில் பரபரப்பாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, மரியாவோ இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்கின்றார்.

மார்த்தாவின் சகோதரி மரியாவைக் குறித்து விவிலியத்தில் மூன்று இடங்களில் வருகின்றன. இந்த மூன்று இடங்களிலும் அவர் இயேசுவின் காலடியில் இருப்பதாகவே வருகின்றது. அவரைக் குறித்து வருகின்ற முதலாவது இடம், இன்றைய நற்செய்தி வாசகம். இங்கு அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார் (லூக் 10: 38 -42). மரியாவைக் குறித்து வருகின்ற இரண்டாவது இடம், யோவான் 11: 32. இங்கு அவர் தன்னுடைய சகோதரன் லாசர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வருகின்ற இயேசுவின் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்கின்றார்.

மரியாவைக் குறித்து இடம்பெறும் மூன்றாவது இடம் யோவான் 12:13. இப்பகுதியில் மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தன் கூந்தலால் துடைகின்றார். இவ்வாறு அவர் இயேசுவின் காலடியே தஞ்சமென்று கிடக்கின்றார். இதனால்தான் அவர் இயேசுவால், நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டதாகப் பாராட்டப்படுகின்றார். இயேசுவிடமிருந்து இத்தகையதொரு பாராட்டைப் பெறுவதற்கு அவர் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வியெனில், மரியா இயேசுவின் காலடியே கதியெனக் கிடக்கிறாரே, அவர் தன் சகோதரிக்கு உதவியிருக்கலாமே என்பதுதான் அந்தக் கேள்வி. மரியா தன் சகோதரிக்கு கட்டாயம் உதவியிருக்கக்கூடும். ஆனால், அவர் இயேசுவுக்கு விருந்துகொடுப்பதை விடவும் அவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்பது பெரியது அல்லது மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்கின்றார். இதையே நாம் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக, கடவுள் வாய்ச்சொல் ஒவ்வொன்றால் வாழ்வர்’ (மத் 4:4) என்று இறைவார்த்தையின் அர்த்தத்தை மரியா உணர்ந்திருப்பார். அதனால்தான் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்கின்றார்.

நாம் மார்த்தாவா? மரியாவா?

இதுவரையில் பற்பலப் பணிகளில் மிகவும் பரபரப்பாக இருந்த மார்த்தாவைக் குறித்தும் ஆண்டவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த மரியாவையும் குறித்துச் சிந்தித்துப் பார்த்தோம். இந்த இருவரில் நாம் யார்? என்று அறிந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது.

பல நேரங்களில் நாம் மார்த்தாவைப் போன்று இது இதெல்லாம் மனித – கிறிஸ்தவ – வாழ்க்கைக்குத் தேவை என்று நினைத்துக்கொண்டு கிறிஸ்துவை விட்டும், அவருடைய விழுமியங்களை விட்டும் எங்கோ சென்றுகொண்டிருக்கின்றோம். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் ‘இருக்கின்ற வேலையில் இறைவனிடம் வேண்டுவதற்கு எங்கே நேரம் இருக்கின்றது?’ என்று குறைபட்டுக்கொள்வார்கள். இத்தகையோர் மரியாவைப் போன்று இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் இயேசுவுக்கு உகந்தவர்கள் ஆவது நல்லது.

சிந்தனை

‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்கட்குச் சேர்த்து கொடுக்கப்படும்’ (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நாம் மரியாவைப் போன்று கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதனைத் தியானிக்கவும் வாழ்வாக்கவும் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.