நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 20)

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம்
சனிக்கிழமை
மத்தேயு 12: 14-21

‘புகையும் திரியை அணையார்’

நிகழ்வு

‘குருக்களின் பாதுகாவலர்’ என அழைக்கப்படும் ஜான் மரிய வியான்னி ஆர்ஸ் நகரில் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, பெண்ணொருத்தி கறுப்பு நிற ஆடை அணிந்து. அழுதுகொண்டே அவரிடம் வந்தார். வந்தவர், ஜான் மரிய வியான்னியின் முன்னம் முழந்தாள் படியிட்டு, “சாமி! என்னுடைய கணவர் பெரியதொரு பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட அவர்க்கு விண்ணகத்தில் இடம் கிடைக்குமா?” என்றார்.

அந்தப் பெண்மணியைச் சிறிதுநேரம் அழாமல் இருக்குமாறு சொல்லிவிட்டு, அவர் மட்டும் ஆலயத்திற்குள் சென்று, நற்கருணை ஆண்டவர்க்கு முன்னம் சிறிதுநேரம் முழந்தாள் படியிட்டு மன்றாடினார். பின்னர் அவர் ஆலயத்திலிருந்து வெளியே வந்து, அந்தப் பெண்மணியைக் கூப்பிட்டு, “அம்மா! நான் ஆலயத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது ஒரு காட்சி கண்டேன். அந்தப் காட்சியில் உம்முடைய கணவர் பாலத்திலிருந்து குதிக்கிறார். ஆனால், அவர் கீழே விழுவதற்கு முன்னம், ‘இறைவா! நான் மிகப்பெரிய பாவி… என்னுடைய குற்றங்களை மன்னியும்” என்று உரக்கக் கத்துகிறார். இதனால் இறைவன் அவர்மீது இரக்கம்கொண்டு அவர்க்கு விண்ணக வாசலைத் திறந்துவிட்டுவிட்டார். நீ கவலைப்படாமல் போ” என்றார்.

இதற்குப் பிறகுதான் அந்தப் பெண்மணி தன்னுடைய கண்ணீரை எல்லாம் துடைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தன்னுடைய இல்லம் சென்றார்.

இறைவன் தன்னுடைய குற்றத்தை உணர்ந்தவர்களை அல்லது நொறுங்கிய உள்ளத்தினரை, வறியவர்களை, எளியவர்களை, கைவிடப்பட்டவர்களை ஒருபோதும் கைவிட்டு மாட்டார் என்ற உண்மையை மிக அழகாக இந்த நிகழ்வு எடுத்துச் சொல்கின்றது. மெசியாவைப் பற்றிய பாடலாக அமைத்திருக்கும் இன்றைய நற்செய்தி வாசகமும் மெசியாவாம் இயேசு எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதைக் குறித்துச் சொல்வதாக இருக்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நன்மைசெய்துகொண்டே சென்ற இயேசுவை ஒழிக்க முயன்ற பரிசேயக் கூட்டம்

நற்செய்தியில், பரிசேயக்கூட்டம் இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என்று சூழ்ச்சி செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். பரிசேயக்கூட்டம் இயேசுவை ஒழிக்க நினைத்ததற்கு மிக முக்கியமான காரணம், அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதாகும். இதற்கு முந்தைய பகுதிகளில், ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து உண்ட தன்னுடைய சீடர்களைக் கண்டனம் செய்த பரிசேயர்களை இயேசு சாடினார் (மத் 12: 1-8). அதற்கடுத்து ஓய்வுநாளில் கை சூம்பிய ஒருவரைக் குணப்படுத்தினார் (மத் 12: 9-13) இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறி நன்மைகள் செய்ததால் பரிசேயர்கள் அவரை ஒழித்துக் கட்ட முடிவுசெய்கின்றார்கள். இத்தனைக்கும் இயேசு ஓய்வுநாளில் நன்மைதான் செய்தார். ஆனாலும் பரிசேயர்கள் அதைப் புரிந்துகொள்ளலாம் அவரை ஒழித்துக் கட்ட முடிவுசெய்கின்றார்கள்.

இங்கு நாம் ஓர் உண்மையை நம்முடைய கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது என்னவெனில், பரிசேயர்கள் இயேசுவை ஒழித்துக்கட்ட முடிவுசெய்தாலும்கூட, இயேசு அவர்கட்குப் பயந்து நன்மை செய்யத் தவறவில்லை. அவர் தொடர்ந்து நன்மை செய்துகொண்டேதான் இருந்தார் (திப 10: 38). இயேசுவிடம் இருந்த இந்த உளப்பாங்கினை நாமும் பெற்றுக்கொண்டு தொடர்ந்து நன்மைகள் செய்வது மிகவும் அவசியமாகும்.

புகையும் திரியும் அணையாது காக்கும் இயேசு

சென்ற இடங்களிலெல்லாம் நன்மை செய்துகொண்டே இயேசுவை பரிசேயர்கள் ஒழித்துகட்ட முடிவுசெய்தாலும் இயேசு நன்மைசெய்வதை ஒருபோதும் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் எப்படிப்பட்ட நன்மைகளைச் செய்தார் என்பதை மத்தேயு நற்செய்தியாளர், இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். இறைவாக்கினர் எசாயா நூல் 42: 1-4 பகுதியிலிருந்து தன்னுடைய நற்செய்தியில் எடுத்தாளுகின்ற மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை, நீதியை நிலைநாட்டுபவராகவும அதிலும் குறிப்பாக வறியவர்களை, எளியவர்களை, உள்ளம் நொறுங்குண்டவர்களைக் கைவிடாமல், காக்கின்றவராகச் சுட்டிக்காட்டுகின்றார்.

நற்செய்தியைப் படித்துப் பார்க்கின்றபோது, எசாயா இறைவாக்கினர் நூலில் சொல்லப்பட்டதுபோலவே இயேசு ஏழைகட்கு நற்செய்தி அறிவித்து, உடல் நலம் குன்றியவர்களைக் குணப்படுத்தி, உள்ளம் உடைந்துபோனவர்களைத் தேற்றி, அவர்கட்குப் புதுவாழ்வு தந்தார். அப்படிப்பட்ட இயேசுவை பரிசேயர்கள் ஒழிக்க முயன்றதுதான் நமக்குப் புரியாத புதிராகவே இருக்கின்றது. இதைதான் யோவான் நற்செய்தியாளர், ‘அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” (யோவா 1:11) என்று பதிவுசெய்கின்றார்.

ஆகையால், நாம் இயேசுவைப் போன்று நல்லது செய்கின்றவர்கட்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.

சிந்தனை

‘நன்மை செய்வதில் மனந்தளராதிருப்போமா’ (கலா 6:9) என்பார் பவுல். ஆகையால், நாம் நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று எத்தகைய இடர்வரினும் மனம் தளராமல் நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

Comments are closed.