புனித சூசையப்பர் உயர்ந்த நிலைக்கு தெரிந்து கொள்ளப்பட்டதை தியானிப்போம்

தியானம்
வல்லமை படைத்த இறைவன், பாவ இருளில் மூழ்கி கிடக்கம் மனித குலத்திற்கு மீட்பளிக்க விரும்பியதால் இயேசுக் கிறிஸ்துவை பூவுலகிற்கு அனுப்பி பாடுபட்டு மரித்து அதன்மூலம் நமக்கு முடிவில்லா வாழ்வை தரவிரும்பி பெண்களின் தூயவளான மரியன்னையை அவருக்கு தாயாராகத் தெரிந்து கொண்டார். இறைவன் தன்னருளால், வானதூதர்களையும், புனிதர்களையும் மரியன்னை காண்பதற்கு ஆசிவழங்கினார். அன்னையை ஜென்ம பாவமில்லாமல் பூமியில் பிறக்கச் செய்து, தூய ஆவியால் நிரப்பி வானுலகிலும் பூவுலகிலும் உயர்வடையச் செய்தார். தூய ஆவியால் மரியன்னை கருவுற்று இயேசுகிறிஸ்துவைப் பெற்றெடுப்பதற்கு ஒர் துணையும், இயேசுகிறிஸ்துவுக்கு பூவுலகில் ஒரு தந்தையும், வானுலகில் நீதிமானும் தேவைப்பட்டதால், சூசையப்பரை இறைவன் தேர்ந்தெடுத்து மரியன்னைக்கு கணவராகவும் குழந்தை இயேசுவுக்கு தந்தையுமாக்கினார். தக்க வயதை அடையும்வரை பேணிகாக்கும் நல்லதொரு தந்தையாக இவரை இறைவன் நியமித்தார்.
இறைவன், தன் மகனை முன்மாதிரிகையாக வளர்க்கும் பொறுப்பையும், அருளையும், ஆசியையும் புனித சூசையப்பருக்கு வழங்கினார். தூய மரியன்னைக்கு அளித்த உயர்வை விடவும் புனித சூசையப்பருக்கு அளித்த நீதிமான் என்ற உயர்வு, வானுலகிலும் பூவுலகிலும், யாருக்கும் வழங்கப்படவில்லை. அதனால் புனித சூசையப்பர் வானதூதர்களைவிடவும், தூயவர்களைவிடவும் மேலானவரென வேத வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இறைவன் யாரை உயர்ந்த நிலைக்கு உயர்த்துகிறாரோ அவர்களுக்கு அளப்பரிய ஆசியையும், அருளையும் நல்குவதோடு நற்குணததையும கொடையாக அளிக்கிறார். அரசனாக முடிசூட்டிகொள்கிறவர்கள் நல்லாட்சி செய்யவும், அருட்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டவர்கள் இறைப்பணியை செவ்வனே செயலாற்றவும், வேறு பணிகளில் ஈடுபடுவோர் தத்தம் பணிகளை திறம்பட ஆற்றவும் இறைவன் விரும்புகிறார். எல்லா பணிகளுக்கும் மேலான பணிக்கு தெரிவு செய்யப்பட்ட புனித சூசையப்பருக்கு இறைவன் அவருடைய பெயர் என்றும் நிலைக்க மேலான அருளையும் ஆற்றலையும் அவருக்களித்தார்.
புனித சூசையப்பர் இறைவனின் திருவுளத்திற்கு பணிந்து, தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை மிக நன்றாக செய்துமுடித்தார். அவர் பொறுமை, நம்பிக்கை, விசுவாசம், இறைஅன்பு, பணிவு ஆகிய நற்குணங்களைக்கொண்டு வாழ்ந்தார். அதனால் அவரை இறைவன் தூயவர்களை விடவும் மேலாக உயர்த்தினார். இதன்மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நம்மை இறைவன் என்றென்றும் அன்புசெய்து வான்வீட்டைத் தருவதற்காக படைத்தார் என்பதுதான். அவர் கிறிஸ்தவர்களல்லாதோரையும் தம் அருளால் கிறிஸ்தவர்களாக்கினார். இறைவன் சகல வரங்களையும் அளித்து திருச்சபையை நிலைநிறுத்தி அருட்சாதனங்கள் வழியாக தம் அருங்கொடைகளை அளித்து வருகிறார்.
புனித ஞானப்பிரகாசியார், தமது இதயத்தைவிடவும் தான் கிறிஸ்தவனாய் இருப்பதே பெரிது என்று கூறியதுபோல் நாமும் எல்லா நலன்களைவிடவும் கிறிஸ்தவனாயிருப்பதே பெரிது என்பதை உணர்ந்து அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும். எத்தனையோ கிறிஸ்தவர்கள் இறைவனுக்கு வேதனை கொடுப்பதை நாம் அறிந்து, தவறு நடவாமல் இருப்போம். அவரவர்க்கு இறைவன் அளித்துள்ள பணிகளில் பிரமாணிக்கமாய் இருந்து அவரவர் கடமைகளில் புனித சூசையப்பரைப்போல் சரிவர செய்தால் அனைவரும் புனிதராவோம்; எப்பொழுதும் வான்விட்டில் எல்லையில்லா ஆனந்தமடைவோம். தன்னுடைய பணியை சரிவர செய்யாமல், வேறுபணியில், நிலையில் நன்றாக இருப்பேன் என எண்ணும் கிறிஸ்தவர்கள் தன் கடமையிலிருந்து தவறுகின்றனர். துறவறத்தார் தமக்குரிய ஒழுங்குகளை கடைப்பிடித்தால் மட்டுமே அவரின் வீட்டை அடைவார்கள். அதனால் கிறிஸ்தவர்கள் எல்லோரும் புனித சூசையப்பரை கண்டுணர்ந்து அவரவர் கடமைகளை சரிவர செய்வோம் என உறுதி கொள்வோம்.

Comments are closed.