ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே… கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம், கொழுக்கட்டை தின்னலாம் வாருங்களே…”
இப்பாடல் மூலம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஆடிப்பிறப்பின் சிறப்பை தமிழர்களுக்கெல்லாம் அழகாகச் சொல்லியிருக்கின்றார்.
சூரியன் வட திசை நோக்கிச் செல்லுதல் உத்தராயணம். இக்காலம் தைமாதம் முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலமாகும். சூரியன் தெற்கு நோக்கிய காலத்தினை தெட்சணாயணம் என்று கூறுவர். இது ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலமாகும்.
இந்துக்கள் இக்காலத்தினை தேவர்களுக்குரிய ஒரு நாளின் இராப் பொழுது என்று கூறுவர். ஆடி மாத தொடக்க காலம் மிகுந்த வெப்பம் மிகுந்ததாகவும் கடும் காற்று வீசுகின்ற காலப் பகுதியாவும் அமைந்திருக்கும். இதனாலேயே “ஆடி காலத்தில் அம்மியும் பறக்கும்” என்று எம் முன்னோர்கள் சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள்.
இந்த ஆடிக்காற்றை கச்சான் காற்று என்றும் கிராம மக்கள் கூறுவர். விவசாயிகள் இக்காற்றின் நகர்வினை (வீசும் காலத்தை) கணக்கிட்டு எதிர்வரும் நவம்பர், டிசம்பர் ஜனவரி மாதங்களில் மழை வீழ்ச்சி எவ்வாறு அமையும் என துல்லியமாக கூறுவர். இக்காற்றினை மழைக்கு கருக்கட்டுவதாகவும் சொல்வார்கள்.
இந்த கச்சான் காற்று மிகுந்த வெப்பமானதாக உள்ளதனாலேயே காட்டுப் பழங்களான வீரை, பாலை, காட்டுப் பேரீச்சை, கடுபுளியம் பழம், நாவல், விளா போன்றவை கனிகின்றன. இப்பழங்களை மக்கள் நன்கு விரும்பி சுவைப்பதுடன் அப்பழங்கள் மிகுந்த ஊட்டச்சத்தும் மிக்கவையாகும். உத்தராயண புண்ணிய கால உதயத்திற்கு தைப்பொங்கலையும், தெடசணாயண கால ஆரம்பத்திற்கு ஆடிப்பிறப்பையும் கொண்டாடுவது எமது முன்னோர்களின் மரபாக இருந்துள்ளது. இதில் ஆடிப்பிறப்பை நாம் மறந்து விட்டோம். இதற்கு முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் திருவிழா உற்சவங்களில் மக்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதும் ஒரு காரணம் எனச் சொல்லமுடியும்.
ஆனால் ஆடிப் பிறப்பன்று பாடசாலைகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு ஆடிப்பாடி மகிழ்ந்த காலம் ஒன்று இருந்திருக்கின்றது. இதையே நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் அழகாக மேற்கண்ட பாடலைப் பாடி உள்ளார்.
இந்த ஆடிமாத காலத்தில் முக்கனிகளும் குறைவின்றி கிடைப்பதுடன் பறவையினங்களின் ஓசைகளுக்கும் குறைவே இருக்காது. வசந்த காலத்திற்கு ஒப்பான ஆட்டம் பாட்டம் போன்று இயற்கை நிகழ்வுகளும் இடம்பெறும். ஆடிக்காற்றில் மரம் செடி இலை தழைகள் ஆடுவதும் குயில்கள் கனியுண்டு கூடிப்பாடுவதும் கிராமங்களில் இன்றும் காணக் கூடிய காட்சியாகும். இந்த அற்புதமான காலத்தினை அனுபவிப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்த கலமாகவும் ஆடிமாதம் அமைந்துள்ளது.
தமிழ் மக்கள் ஆடிக்கூழ் கொழுக்கட்டை போன்ற உணவுகளை விசேடமாக தயாரித்து குடும்ப உறுப்பினர்களுடன் ஒன்றாக விருந்துண்டு மகிழ்வர். உற்றார் உறவினர்களுக்கு இவ்வுணவு வகைகளை வழங்கி பிரிந்து விட்டுப்போன உறவுகளை மீள வளர்த்துக் கொள்வர். இவை நல்ல ஆரோக்கியமான உணவாக உள்ளது போல் சமுதாய ஒற்றுமைக்கும் துணை புரிகின்றது எனலாம்.
கச்சான்காற்று என்று சொல்லப்படுகின்ற ஆடிக்காற்றினை வீதி கூட்டும் காற்று என கிராம மக்கள் கூறுவர். அதாவது, ஆடிமாதத்தில் முருகத் தலங்களில் அதிகளவில் கூடும் பக்தர்கள் கூட்டம் தாம் பயன்படுத்திய கூடுதலான பொருட்களை வீசி எறிந்து விட்டுச் சென்று விடுவார்கள். இதனால் ஆலய சுற்றாடல் மிகுந்த அசுத்தமடைகின்றது. இந்த பலமான காற்றினால் கழிவுப்பொருட்கள் அள்ளுண்டு வனாந்தரங்களை நோக்கிச் சென்று விடும். இதனாலேயே வீதி கூட்டும் காற்று என அழைக்கப்படுகின்றது.
Comments are closed.