நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 16)

பொதுக்காலம் பதினைந்தாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மத்தேயு 11: 20-24

கடவுள் கொடுக்கும் வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்வோம்

நிகழ்வு

யோர்தான் ஆற்றகரையோரம் மீனவன் ஒருவன் வசித்து வந்தான். அவன் மிகவும் ஏழை. ஆற்றில் பிடித்து மீன்களை விற்று, அவற்றிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தைக் கொண்டுதான் தன்னுடைய குடும்பத்தை நடத்திவந்தான். ‘எப்படியும் பணக்காரன் ஆகிவிடவேண்டும்’ என்பதுதான் அவனுடைய நீண்டநாள் ஆசையாக இருந்தது. அதற்காக அவன் நீண்ட நேரம் ஆற்றில் மீன்பிடித்து வந்தான்.

ஒருநாள் அவன் இரவு முழுவதும் மீன்பிடித்துவிட்டு, அதிகாலை வேளையானதும் தன்னுடைய குடிசைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தான். வருகின்ற வழியில் அவனுடைய காலில் ஏதோ மிதிபட்டது. அது என்ன என்று அவன் கையில் எடுத்துப்பார்த்தபோது, ஒரு துணிப்பையில் சிறுவர்கள் விளையாடும் கோலிக்குண்டு வடிவில் உருண்டையாக ஏதோ இருந்தது. உடனே அவன் ‘ஏதோ ஒரு சிறுவன்தான் இந்த கோலிக்குண்டுப் பையை இங்கே போட்டுவிட்டான் போலும்’ என நினைத்துக்கொண்டு, பணக்காரரான பின்பு என்ன செய்வது என்ற கனவுகளுடன் அந்தத் துணிப்பையில் இருந்ததை ஒவ்வொன்றாக எடுத்து ஆற்றிற்குள் தூக்கி எறிந்தான்.

‘பணக்காரர் ஆனதும் முதலில் ஒரு பெரிய வீடுகட்டவேண்டும்… அதற்கடுத்து நிறைய வேலையாட்களை வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் சொகுசான வாழ்க்கை வாழ விலையுயர்ந்த ஆடைகள், நகைகள், மதுபானங்கள் வாங்கிக்கொள்ளவேண்டும்” என்று யோசித்துக்கொண்டே தன்னுடைய கையில் இருந்த உருண்டையான பொருளை ஆற்றில் தூக்கிப்போட்டான். அதுவரைக்க்கும் ஒரே இருட்டாக இருந்த வாம் சூரிய ஒளி வந்து பிரகாசமானது. அப்பொழுதுதான் அவன் தன்னுடைய கையில் இருப்பது சாதாரண பொருள்ள, விலையுயர்ந்த இரத்தினக் கல் என்பதை உணரத் தொடங்கினான்.

அவனுக்கு அவன்மீதே கோபம் கோபமாக வந்தது. ‘பணக்காரராக மாறுவதற்கு நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தபோதும், அதை இப்படி வீணடித்துவிட்டோமே… இனிமேல் இந்த ஒற்றை வைரக்கல்லை வைத்துக்கொண்டு என்ன செய்வது’ என்று அதையும் ஆற்றுக்குள் தூக்கிப்போட்டுவிட்டு வருத்தத்தோடு வீடுதிரும்பினான்.

மேலே சொல்லப்பட்ட இந்த நிகழ்வில் வரும் மீனவனைப் போன்றுதான் நாமும் பலநேரங்களில் கடவுள் நமக்கு கொடுக்கும் வாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு வாழ்வைத் தொலைத்தவர்களாக இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை நல்லவிதமாய்ப் பயன்படுத்தவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கடவுள் கொடுத்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளாத கொராசின், பெத்சாய்தா நகர மக்கள்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கொராசின், பெத்சாய்தா, கப்பர்நாகும் போன்ற நகர்களைக் கண்டிக்கத் தொடங்குகின்றார். இயேசு ஏன் அந்நகர்களைக் கண்டிக்கவேண்டும் என்பது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் தேவையானதாக இருக்கின்றது.

கொராசின் நகரிலும் சரி, பெத்சாய்தா நகரிலும் சரி – பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவரைக் குணப்படுத்தியதைத் தவிர்த்து – (மாற் 8:22) வல்ல செயல்கள் செய்ததாக எங்கேயும் சான்று இல்லை. அப்படியிருக்கும்போது அங்கு இயேசு வல்லசெயல்கள் செய்ததாக இன்றைய நற்செய்தியில் வருகின்றது. இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நற்செய்தியில் இடம்பெறும் இவ்வார்த்தைகளை புரிந்துகொள்வதற்கு நாம் யோவான் நற்செய்தி 21: 25 ல் வருகின்ற, “இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலக கொள்ளாது” என்ற வார்த்தைகளையும் இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

இயேசு எவ்வளவோ வல்லசெயல்களை கொராசின் நகரிலும் பெத்சாய்தா நகரிலும் பெய்திருக்கவேண்டும். அப்படியிருந்தும் அந்நகர்களில் இருந்தவர்கள் மனம்மாறாததால் இயேசு அவர்களைக் கண்டிக்கின்றார்.

கடவுள் கொடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாத கப்பர்நாகும் நகர் மக்கள்

கொராசின் மற்றும் பெத்சாய்தா நகர மக்களை இயேசு ஏன் கண்டித்தார் என்று சிந்தித்துப் பார்த்த நாம், கப்பர்நாகும் நகர மக்களை இயேசு ஏன் கண்டித்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு கொராசின் மற்றும் பெத்சாய்தா நகரங்களில் செய்த வல்ல செயல்களை விடவும் அதிகமான வல்லசெயல்களை கப்பர்நாகுமில் செய்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் மத்தேயு நற்செய்தி 8,9 ஆகிய இரு அதிகாரங்களில் இயேசு செய்ததாக இடம்பெறும் எட்டு வல்ல செயல்களில் நான்கு வல்லசெயல்களை கப்பர்நாகுமில்தான் செய்திருக்கின்றார். அப்படியானால் இயேசு அங்கு உள்ளவர்களை எந்தளவுக்கு அன்பு செய்திருக்கவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அப்படியும் அவர்கள் மனம்திருந்தாமல் இருந்ததால்தான் இயேசு அந்நகரைப் பார்த்து, “நீ பாதாளம் வரைத் தாழத்தப்படுவாய்” என்கின்றார். ஆகையால், கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்தி அவர்க்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வது மிகவும் இன்றியமையாதது.

சிந்தனை

‘இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்’ (திவெ 3:20) என்பார் இயேசு. ஆகையால், நம்மைத் தேடிவரும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அவர் வழி நடப்போம். கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை நல்லமுறையில் பயன்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.