ஜூலை 12 : வெள்ளிக்கிழமை. நற்செய்தி வாசகம்.
பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23
அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: “இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள்.
ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்.
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்.
சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.
அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரை.
ஓநாய்களிடையே ஆடுகளாய்!
அது ஒரு துறவுமடம். அந்தத் துறவுமடத்தில் இருந்த குரு தன்னிடம் பயிற்சி பெற்றுவந்த சீடர்களை அழைத்து, “நீங்கள் சுற்றிலும் உள்ள ஊர்கட்குச் சென்று, நான் உங்கட்குக் கற்பித்ததை அங்குள்ள மக்களிடம் போதித்துவிட்டு வாருங்கள்” என்றார். சீடர்களும் சரி என்று சொல்லிவிட்டு தனித்தனியாகப் பிரிந்து சென்றார்கள்.
எல்லாச் சீடர்களும் பக்கத்து பக்கத்து ஊர்களில் போதிக்கச் சென்றபோது, ஒரு சீடர் மட்டும் சற்றுத் தொலைவில் இருந்த ஓர் ஊர்க்குப் போதிக்கச் சென்றார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அனைவரும், தங்களுடைய ஊர்க்கு ஒரு மகான் வந்திருக்கிறார் என்று அவர் பின்னாலேயே சென்றார்கள். அவரோ ஊரின் மத்தியில் இருந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து, திரண்டிருந்த மக்கட்குப் போதிக்கத் தொடங்கினார்.
மக்கள் எல்லாரும் அந்தச் சீடர் போதித்ததை மிக ஆர்வமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது கூட்டத்திலிருந்து ஒருசிலர், “இந்த ஆள் நம்மை ஏமாற்றப் பார்க்கின்றார். இவரை இப்படியே விட்டுவைத்தால், ஊரில் இருக்கின்ற எல்லாரையும் ஏமாற்றி, நம்மிடம் இருப்பவற்றையெல்லாம் பறித்துக்கொண்டு போய்விடுவார். அதனால் இவரைச் சும்மா விடக்கூடாது” என்று அவர்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அவரோ அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்துத் தான் இருந்த துறவுமடத்திற்கு ஓடிவந்தார்.
அது இரவுநேரம் என்பதால் அவர்க்குச் சரியாக வழி தெரியவில்லை. இன்னொரு பக்கம் தன்னைத் துரத்திக்கொண்டு வருபவர்கள் தன்னைப் பிடித்து ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சம் அவரைத் தொற்றிக்கொண்டது. அதனால் அவர் ஒரு மரத்திற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, துரத்திகொண்டு வருபவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்களா என்று பார்த்தார். கண்ணுக்கு எட்டிய தூரம்மட்டும் யாரும் தன்னைப் பின்தொடர்ந்து வரவில்லை என்று தெரிந்ததும், அந்த மரத்தடியிலே படுத்துத் தூங்கத் தொடங்கினார். ஆனால், அவர்க்குத் தூக்கம் வரவேயில்லை. உயிர் பயம் அவரைத் தூங்கவிடாமல் செய்தது.
அப்பொழுது அவர்க்கு முன்பாக ஒரு வானதூதர் தோன்றி, “மகனே! நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தூங்கு. உன்னை நான் தூங்காமல் காவல்காக்கிறேன்” என்றது. வானதூதர் சொன்ன வார்த்தைகள் அவருடைய உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் அவர் படுத்து நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார். மறுநாள் அவர் விழித்தெழுந்து பார்த்தபோது, வானதூதர் அவர்க்குப் பக்கத்திலயே நின்றுகொண்டு அவரைப் பாதுகாப்பதைப் பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவர் வானதூதர்க்கு நன்றி சொல்லிவிட்டு, பாதுகாப்பாக துறவுமடத்தை வந்து அடைந்தார்.
இறைப்பணி செய்வோர்க்கு பிரச்சினைகளும் சவால்களும் வந்தாலும், இறைவன் அவர்களைக் கைவிடாமல் தாங்கிக்கொள்வார் என்ற உண்மையை இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தி வாசகத்தில், பணித்தளங்கட்கு செல்லும் சீடர்கள் எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திப்பார்கள். அப்பொழுது இறைவனின் பராமரிப்பு அவர்கட்கு எப்படி இருக்கும் என்று இயேசு கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.
இயேசுவின் சீடர்கட்குத் துன்பங்கள் உண்டு.
இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவது போல் உங்களை நான் அனுப்புகிறேன் என்கின்றார். இங்கு இயேசு ஓநாய் என்று குறிப்பிடுவதை போலி இறைவாக்கினர்கள், நிறுவனமயமாக்கப்பட்ட மதம், அச்சுறுத்தும் அரசாங்கம், குடும்ப உறவுகள் போன்ற பலவற்றை சொல்லலாம். இத்தகைய சவால்கட்கும் பிரச்சினைகட்கும் மத்தியில்தான் சீடர்கள் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும்.
துன்பங்களை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இயேசுவின் நற்செய்தியை மக்கட்கு அறிவிக்கின்றபோது பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் வரலாம். அவற்றையெல்லாம் வெறும் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவிப்பதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்க்கவேண்டும். அதுதான் சிறந்த அணுகுமுறை. பல்வேறு புனிதர்களும் மறைசாட்சிகளும் ஆண்டவர் இயேசுவின் பொருட்டுத் துன்புறுத்தப்பட்டதை நினைத்து வருத்தமடையவில்லை. மாறாக, தாங்கள் துன்புறுத்தப்படுவதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். நம்முடைய வாழ்விலும் இதுபோன்ற சூழல்களைச் சந்திக்கின்றபோது, அவற்றை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு ஆண்டவரை பற்றி அறிவிப்பது நல்லது.
இறைவனின் உடனிருப்பு.
தன்னுடயை பணியைச் செய்யும் சீடர்கட்குத் துன்பங்களும் சவால்களும் இருந்தாலும் இறைவனின் உடனிருப்பு அவர்களோடு என்றும் இருக்கும் என்பதை இயேசு சுட்டிக்காட்டத் தவறவில்லை. நீங்கள் ஆட்சியாளரிடமும் அதிகாரிகளிடம் இழுத்துச் செல்லப்படும்போது, என்ன பேசவேண்டும் எப்படிப் பேசவேண்டும் என்பதைக் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் தூய ஆவியார் உங்கள் வழியாகப் பேசுகின்றார் என்று இயேசு கூறுகின்ற வார்த்தைகள், துன்பவேளையில் இறைவனின் உடனிப்பை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. ஆகையால், இயேசுவின் சீடர்கள் யாவரும் இறைவனின் பாதுக்காப்பை உணர்ந்து, அவருடைய பணியைச் செய்வது நல்லது.
சிந்தனை.
‘வீறுகொள்! துணிந்து நில்! அஞ்சாதே! கவலைப்படாதே! ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன்’ (யோசு 1:9) என்பார் ஆண்டவர். ஆதலால், ஆண்டவர் யோசுவிற்குச் சொன்ன இவ்வார்த்தைகளை உள்ளத்தில் ஏற்று, மனவுறுதியோடும் துணிவோடும் இயேசுவின் நற்செய்தியை எல்லார்க்கும் அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.