நற்செய்தி வாசக மறையுரை (ஜுலை 11)

பொதுக்காலம் பதினான்காம் வாரம்
வியாழக்கிழமை
மத்தேயு 10: 7-15

“குறைவான சுமை நிறைவான பயணம்”

நிகழ்வு

அமெரிக்காவில் மிசிசிப்பி என்றொரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒரு சமயம் இந்த ஆற்றில், ஒரு சொகுசுக் கப்பலில் அமெரிக்காவில் இருந்த செல்வந்தர்கள் சிலர் உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.

நன்றாகப் போய்க்கொண்டிருந்த அந்தக் கப்பலானது ஒரு பாறையில் மோதி, அதன் அடிப்பாகத்தின் வழியாகத் தண்ணீர் கப்பலுக்குள்ளே வரத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கிடைத்த பாதுகாப்பு வளையங்களையும் சிறு படகுகளையும் பிடித்துக்கொண்டு தப்பித்து கரைக்குச் சென்றனர். அந்தக் கப்பலில் பயணம் செய்த ஒருவர் மட்டும் கப்பல் தண்ணீருக்குள் மூழ்கப்போகிறது என்று தெரிந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கப்பலின் உட்பகுதிக்குச் சென்று, எதை எதையோ எடுத்து தன்னுடைய இடுப்பில் கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் குதித்தார்.

மறுநாள் காலையில், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் எல்லாம் மிசிசிப்பி ஆற்றில் சென்றுகொண்டிருந்த கப்பலானது பாறையில் மோதி மூழ்கியதையும் விபத்தியில் யாரும் இருக்கவில்லை என்ற செய்தியையும் வெளியிட்டிருந்தன. இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் கப்பலில் பயணம் செய்த எல்லாரும் தப்பித்து விட்டார்களா? என்று சோதித்துப் பார்க்க விரும்பியது. அதன்படி மீட்புப் படையினர் பாறையில் மோதி, தண்ணீருக்குள் மூழ்கிய கப்பலில் யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்று சோதித்துப் பார்க்கத் தொடங்கியது.

அப்பொழுது ஓர் ஆள் மட்டும் தண்ணீரில் செத்து மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. ‘கப்பலில் பயணம் செய்த எல்லாரும் தப்பித்துச் சென்றிருக்கும்போது, இவர் மட்டும் ஏன் இப்படிச் செத்து மிதந்துகொண்டிருக்கின்றார்’ என்று மீட்புக் குழுவினர் அவரைச் சோதித்துப் பார்த்தார்கள. முடிவில்தான் அவருடைய இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியில் தங்கக்கட்டிகள் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. முந்தைய நாளில் கப்பலில் பயணம் செய்த எல்லாரும் தங்களுடைய உயிரைக் காத்துக்கொள்வதற்குப் போராடிக்கொண்டிருந்தபோது, இந்த மனிதர் மட்டும் ,இதுதான் சமயம் என்று கப்பலில் இருந்த கஜானாவை உடைத்து தங்கக் கட்டிகளைத் தன்னுடைய இடுப்பிலும் முதுகுப் பகுதியிலும் கட்டினார். அதனால்தான் அவரால் தண்ணீரில் நீந்திச் செல்ல முடியாமல், மூழ்கி உயிரை இழக்க நேரிட்டது.

பொருளுக்கு (தங்கக் கட்டிகட்கு) ஆசைப்பட்டு, அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற ஒருவரால் எப்படி தொடர்ந்து நீந்த முடியாதோ, அதுபோன்று பணத்தின்மீது நம்பிக்கை வைத்து வாழக்கூடிய ஒருவரால் இயேசுவின் சீடராக இருக்க முடியாது. இன்றைய நற்செய்தி வாசகம், இயேசுவின் பணியைச் செய்யும் ஒருவர் எதன்மீது பற்றுக்கொண்டிருக்கவேண்டும், எத்தகைய வாழ்க்கை வாழவேண்டும் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்

நற்செய்தியில் இயேசு பன்னிருவரையும் பணித்தளத்திற்கு அனுப்புகின்றார். அப்படி அனுப்புகின்றபோது, அவர்கட்கு ஒருசில அறிவுரைகளைச் சொல்கின்றார். அந்த அறிவுரைகளுள் ஒன்றுதான். “பொன், வெள்ளி, செப்புக்காசு, பை, இரண்டு அங்கிகள், மிதியடி, கைத்தடி எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம்” என்பதாகும். இயேசு இவ்வாறு சொல்லக் காரணம், மேலே சொல்லப்பட்ட பொருட்களையும் இன்னபிறவற்றையும் பணித்தளங்கட்கு எடுத்துக்கொண்டு போகும்போது, அதுவே மிகப்பெரிய சுமையாகிவிடும். அப்பொழுது பயணமும் சரி, பணியும் சரி நன்றாக இருக்காது என்பதால்தான். பவுல் இத்தைத்தான், “பொருளாசையே எல்லாத் தீமைகட்கும் காரணம்” (1 திமொ 6:7) என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் சீடராக இருந்து, அவர் வழியில் நடக்கும் நாம், பொருளின்மீது ஆசை கொண்டு வாழ்வதைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்டவரை மட்டும் எடுத்துக்கொண்டு போகவேண்டும்

இயேசு தன் சீடர்களிடம் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொல்வது மறைமுகமாக, ஆண்டவரை உள்ளத்தில் எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது.

எவர் ஒருவர் ஆண்டவரைத் தன்னுடைய உள்ளத்தில் எடுத்துக்கொண்டு போகிறாரோ அவருடைய பணிவாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அன்னைத் தெரசா கல்கத்தாவில் இருந்த ஏழை எளியவர்க்கு மத்தியில் பணிசெய்யத் தொடங்கியபோது, அவரிடம் (ஐந்துரூபாய்யைத் தவிர) எதுவும் இல்லை. ஆனால், ஆண்டவர் அவருடைய உள்ளத்தில் இருந்தார். அதனால் அவருடைய வாழ்வு சிறப்பாக இருந்தது. நம்முடைய சீடத்துவ வாழ்வு சிறப்பாக இருக்கவேண்டும் என்றால், ஆண்டவரை நம்பிப் பணிசெய்ய வேண்டும்; அவரை நம்முடைய உள்ளத்டிஹ்ல் சுமந்து செல்பவராக இருக்கவேண்டும்.

சிந்தனை

‘எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய ஆற்றலுண்டு’ (பிலி 4:13) என்பார் பவுல். ஆகையால், நாம் ஆண்டவரையும் அவருடைய வல்லமையையும் நம்பிப் பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.