இளையோரால் விழிப்படைந்த தலைமுறை

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு” அதாவது, Organization of the Petroleum Exporting Countries என்ற சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அறியப்படும் OPEC நிறுவனம், சக்தியும், செல்வமும் மிகுந்த ஒரு நிறுவனம். உலகின் பல நாடுகளில், பெட்ரோலிய வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்திவரும் OPEC நிறுவனத்தின் தலைமைச் செயலர், மொஹம்மத் பார்கிண்டோ (Mohammed Barkindo) அவர்கள், OPEC நிறுவனம், மக்கள் நடுவே தன் நல்ல பெயரை இழந்து வருகிறது என்று ஜூலை 5ம் தேதி, கடந்த வெள்ளிக்கிழமை, கவலை தெரிவித்தார்.

பெட்ரோலியம் போன்ற நிலத்தடி எரிசக்தியின் பயன்பாடு, உலக வெப்பமயமாதலுக்கும், சுற்றுச்சூழல் சீரழிவுக்கும் முக்கியமான காரணம் என்பதை ஒருசில நாடுகளின் அரசுகளும், தொழில் நிறுவனங்களும் உணர்ந்து வருகின்றன; பெட்ரோல், டீசல் போன்ற எரிசக்தி பயன்பாட்டை எதிர்க்கும் மக்களின் எண்ணிக்கை கூடிவருகிறது; OPEC நிறுவனத்தில் பணியாற்றுவோரின் குழந்தைகளே, இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என்று, தன் கவலைகளைப் பட்டியலிட்ட தலைமைச் செயலர், பார்கிண்டோ அவர்கள், இந்த மாற்றங்களுக்குக் காரணம், 16 வயது நிறைந்த ஓர் இளம்பெண் என்பதையும், மறைமுகமாகக் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட அந்த இளம்பெண்ணின் பெயர், கிரேட்டா துன்பர்க் (Greta Thunberg).

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சுவீடன் நாட்டில், 15 வயது இளம்பெண், கிரேட்டா அவர்கள், ‘காலநிலைக்காக பள்ளி புறக்கணிப்பு’ (School strike for the climate) என்ற சொற்கள் எழுதப்பட்ட அறிவிப்பு பலகையுடன், சுவீடன் பாராளுமன்றத்திற்கு முன் அமர்ந்தார். இவரைத் தொடர்ந்து, பல நாடுகளில், இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தி, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாண்டு, மார்ச் 15ம் தேதி, 123 நாடுகளில், 14 இலட்சம் மாணவ, மாணவியர், ‘காலநிலைக்காக வேலைநிறுத்தம்’ (Climate Strike) என்ற விருதுவாக்குடன் வகுப்புக்களைப் புறக்கணித்து, ஊர்வலங்களை நடத்தினர்.

இளையோர் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாக, நிலத்தடி எரிசக்திகளை மூலதனமாக்கி வர்த்தகம் செய்யும் OPEC நிறுவனத்திற்கு பலத்த எதிர்ப்புக்கள் எழுந்துவருகின்றன. இளம்பெண் கிரேட்டா அவர்களும், இளையோரும் OPEC நிறுவனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று, அந்நிறுவனத்தின் தலைமைச் செயலர் கூறியுள்ளது, தங்கள் இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் பாராட்டு என்று, இளம்பெண் கிரேட்டா துன்பர்க் அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

OPEC போன்ற நிறுவனங்களுக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாகப் போராடிவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவரான பில் மெக்கிப்பென் (Bill McKibben) அவர்கள், “புகையிலையினால் உருவாகும் தீமைகள், கடந்த தலைமுறையினரிடமிருந்து மறைக்கப்பட்டன. எண்ணெய் நிறுவனங்கள், பூமிக்கோளத்திற்கும், இயற்கைச் சூழலுக்கும் விளைவித்துவரும் தீமைகள், இன்றைய தலைமுறையினரிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன. நல்லவேளை, இளையோர், இவ்வுலகை, தற்போது விழித்தெழச் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.