ஜூலை 9 : நற்செய்தி வாசகம்

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர்.

ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.

இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு

நிகழ்வு

மியான்மார் மக்கள் பேசும் பர்மிய மொழியில் திருவிவிலியத்தை மொழிபெயர்த்தவர் அதோனிரம் ஜூட்சன் (Adoniram Judson) என்பவர். அமெரிக்கரான இவர் எப்படி மியான்மார்க்குச் சென்றார், அங்கு அவர் என்னென்ன பணிகளைச் செய்தார் என்று அறிந்துகொள்வது மிகவும் நல்லது.

1788 ஆம் ஆண்டு பிறந்த இவர், குருத்துவப் படிப்பினை முடித்தபின் பாஸ்டன் நகரில் உதவிக் குருவாக நியமிக்கப்பட்டார். இவர் பாஸ்டன் நகரில் உதவிக் குருவாக நியமிக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட இவருடைய குடும்பத்தில் இருந்த அனைவரும், ‘பாஸ்டன் எவ்வளவு பெரிய இடம்… அங்கு நம்முடைய குடும்பத்திலிருந்து ஒருவர் உதவிக் குருவாக நியமிக்கப்படுவது என்பது மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயம்” என்று மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

ஆனால், அதோனிரம் ஜூட்சன் மற்ற எல்லாரையும் போன்று, தான் பாஸ்டனில் உதவிக் குருவாக நியமிக்கப்பட்டதை நினைத்து மகிழ்ச்சியடையவில்லை. மாறாக அவர் அவருடைய மறைமாவட்டப் பேராயரைச் சந்தித்து, “நான் பாஸ்டன் நகரில் உதவிக் குருவாக பணியாற்றுவதை விடவும் கடல்கடந்து சென்று நற்செய்திப்பணி செய்வது எனக்குப் பிடித்திருக்கின்றது” என்றார். இதைக் கேட்டதும் அதோனிரம் ஜூட்சனின் பேராயர் வியந்து போய், “எல்லாரும் பாஸ்டனில் பணிசெய்வதை மிகவும் விரும்புவார்கள். அப்படியிருக்கும்போது நீங்கள் அதை விரும்பாமல், எங்கோ சென்று பணிசெய்யப் போவதாகச் சொல்கிறீர்களே” என்று கேட்டதற்கு அவர், “பாஸ்டனில் பணிசெய்வதற்கு எத்தனையோ பர் இருக்கிறார்கள்… ஆசியக் கண்டத்தில் பணிசெய்வதற்குத்தான் ஆட்கள் இல்லை… அதனால்தான் நான் அங்கு செல்கின்றேன்” என்றார்.

அதோனிரம் ஜூட்சன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பேராயர், “உங்களுடைய நோக்கம் மிகவும் உயர்ந்தது. உங்களுடைய விரும்பம் போன்று நீங்கள் ஆசியக் கண்டத்திற்குச் சென்று நற்செய்தி அறிவியுங்கள்” என்றார். இதற்குப் பின்பு அதோனிரம் ஜூட்சன் ஆசியாவில் உள்ள மியான்மார் அல்லது பர்மாவிற்கு வந்து, அங்குள்ள மக்கட்கு நற்செய்தி அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார். அதன்பின்னர் அங்குள்ள மக்கள் இயேசுவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு வசதியாகத் திருவிவிலியத்தை அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்தார். இவ்வாறு அவர் ஆண்டவரின் நற்செய்தியை பர்மா நாட்டு மக்கள் அறிந்துகொள்வதற்குக் காரணமானார்.

மறைபோதகரான அதோனிரம் ஜூட்சன் நினைத்திருந்தால் பாஸ்டன் நகரில் மிகவும் இலகுவாக, வசதியாக நற்செய்திப் பணி செய்திருக்கலாம். ஆனால், அவர் இயேசுவைப் பற்றிக் கேட்டிராத, அறிந்திராத பர்மா மக்கட்கு நற்செய்தியை அறிவிக்க தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் அதிகமாக இருக்கும் அறுவடைக்குத் தேவையான ஆட்கள் வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மிகுதியாக இருக்கும் அறுவடை

நற்செய்தியில் ஆண்டவர் நகர்கள், சிற்றூர்கள் மற்றும் யூதர்களின் தொழுகைக்கூடங்கட்குச் சென்று, விண்ணரசு பற்றிய நற்செய்தியை அறிவித்து வருகின்றார். அப்படி அறிவிக்கும்போது எத்தனை மக்கட்கு நற்செய்தி அறிவிக்கப்படுவதன் தேவையை உணர்கின்றார். அதனால்தான் அவர் தன் சீடர்களிடம், “அறுவடை மிகுதி. வேலையாட்களோ குறைவு” என்கின்றார். இயேசு கூறும் இவ்வார்த்தைகள் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை உணர்த்துகின்றது. அது என்னவெனில், ஆண்டவருடைய பணியைத் தனியாகச் செய்ய முடியாது, மாறாக எல்லாருடைய கூட்டு முயற்சியால்தான் செய்யமுடியும் என்பதாகும். ஆகவே, எல்லாரும் சேர்ந்து செய்யவேண்டிய இறையாட்சிப் பணியைச் செய்வதற்கு ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

ஆண்டவரின் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

‘அறுவை மிகுதி, வேலையாட்களோ குறைவு’ என்று இயேசு சொல்கின்றார் எனில், மிகுதியாக இருக்கும் அறுவடையை அல்லது இறையாட்சிப் பணியை நாம் எப்படிச் செய்யப் போகிறோம் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த இடத்தில் On Being a Missionary என்ற நூலில் அதன் ஆசிரியர் தாமஸ் ஹலே (Thomas Hale) சொல்லக்கூடிய வார்த்தைகள் நம்முடைய கவனத்திற்கு உரியவையாக இருக்கின்றன. “சிலர் கூறுகின்றார்கள் ‘மறைபரப்புப் பணிக்குப் பணவுதவி செய்தாலே போதும்’ என்று. மறைபரப்புப் பணிக்கு பணவுதவி தேவைதான். ஆனால், அதைவிடவும் நம்மையே அதற்கு அர்ப்பணிப்பது மிகவும் சிறந்தது.” இச்செய்தியைத்தான் தாமஸ் ஹலே தன்னுடைய புத்தகத்தில் பதிவுசெய்கின்றார்.

Comments are closed.