கிறிஸ்து பிறப்பு ஆலயத்தின் சிறப்பான சீரமைப்பு

பெத்லகேம் நகரில் உள்ள கிறிஸ்து பிறப்பு ஆலயத்தில், அண்மைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு முயற்சிகளின் காரணமாக, அழியும் நிலையில் உள்ள பாரம்பரிய இடங்கள் என்ற பட்டியலிலிருந்து, இவ்வாலயம் நீக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அவையின் உலகப் பாரம்பரியக் கழகம் அறிவித்துள்ளது.

Azerbaijan குடியரசின் Baku என்ற நகரில், ஜூன் 30 கடந்த ஞாயிறு முதல், ஜூலை 10, வருகிற புதன் முடிய ஐ.நா. அவையின் பாரம்பரிய கழகம் நடத்தும் ஒரு கூட்டத்தில், பெத்லகேம் கிறிஸ்து பிறப்பு ஆலயம் குறித்த இந்த முடிவு, ஜூலை 2, இச்செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பு ஆலயத்தின் மேல்கூரை, தளம், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கலைக் கருவூலங்கள் அனைத்தையும் புதுப்பிக்கும் பணி மிகச்சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாலும், குழந்தை இயேசு பிறந்ததாகக் கூறப்படும் புனிதத் தலத்திற்குக் கீழ் சுரங்கப்பாதையைத் தோண்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாலும், இந்த ஆலயம், ஆபத்தான பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்று, இக்கழகம் கூறியுள்ளது.

இதற்கிடையே, புனித யோசேப்பும், அன்னை மரியாவும் குழந்தை இயேசுவுடன் எகிப்து நாட்டிற்கு தப்பித்துச் சென்ற வேளையில், அவர்கள் பல்வேறு இடங்களில் தங்கியதாக பாரம்பரியம் கூறும் இடங்களை, ஐ.நா.வின் பாரம்பரியக் கழகம், பழமை மிகு பாரம்பரிய தலங்கள் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, எகிப்து அரசு முன்வைத்துள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஏரோதின் கொடுமையிலிருந்து, குழந்தை இயேசுவைக் காப்பாற்ற, புனித யோசேப்பும், அன்னை மரியாவும் எகிப்து நாட்டிற்கு வந்தபோது, அங்கு ஒரு குகையில் ஆறு மாதங்கள் தங்கியதாகக் கூறப்படும் ஒரு பாரம்பரியத்தைத் தழுவி, அக்குகை, மரியன்னையின் ஆலயமாக தற்போது விளங்குகிறது.

அத்துடன், திருக்குடும்பம் எகிப்து நாட்டில் தங்கியிருந்த வேளையில், அக்குடும்பத்துடன் தொடர்புடைய 25 இடங்கள், மக்களால் இன்று வரை புனிதத் தலங்களாக கருதப்படுகின்றன என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

Comments are closed.