நற்செய்தி வாசக மறையுரை (ஜூலை 04) பொதுக்காலம் பதிமூன்றாம் வாரம்.

பொதுக்காலம் பதிமூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
மத்தேயு 9: 1-8

வலுவற்றவர்களைத் தூக்கிச் சுமப்போம்

நிகழ்வு

சீனாவில் உள்ள சூச்சூவாங் என்ற மாகாணத்தில் மீசான் என்றோர் அழகிய ஊர் உள்ளது. இங்கு சூப்பியாங் என்றோர் சிறுவன் இருக்கின்றான். சமீப காலத்தில் சீனாவில் இருக்கின்ற இந்த சூப்பியாங்கைக் குறித்துத்தான் மக்கள் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கின்றார். இப்படி எல்லாரும் பேசக்கூடிய அளவுக்கு சூப்பியாங் அப்படி என்ன செய்தான் என்ற கேள்விக்கான விடையாக இருப்பதுதான் இந்த நிகழ்வு.

பதினான்கு வயதுச் சூப்பியாங்கிற்கு சாங்கி என்றொரு நண்பன் உண்டு. இருவரும் வகுப்புத் தோழர்கள். ஆனால், சாங்கியால் நடக்கமுடியாது, கால் ஊனம். அதனால் சூப்பியாங்தான் சாங்கியை எங்கு வேண்டுமாலும் தன் தோள்மேல் வைத்துத் தூக்கிக்கொண்டு போவான். சாங்கிக்கு நான்கு வயது நடக்கும்போது பக்கவாதம் ஏற்பட்டது. அதனால் அவனால் எங்கும் நடக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் சாங்கியின் நண்பனான சூப்பியாங், அவனை எங்கும் சென்றாலும் அது பள்ளிக்கூடமாக இருக்கட்டும், விளையாட்டுத் திடலாக இருக்கட்டும், கழிவறைவாக இருக்கட்டும் எல்லா இடங்கட்கும் கடந்த ஆறேழு ஆண்டுகளாகத் தூக்கிக்கொண்டு செல்கின்றான்.

இது குறித்து அறிந்த ஒரு செய்தியாளர் சூப்பியாங்கைச் சந்தித்து, நேர்காணல் செய்தார். அவர் சூப்பியாங்கிடம், “உன்னால் எப்படி சாங்கியை எல்லா இடங்கட்கும் தூக்கிக்கொண்டு போக முடிகின்றது?” என்று கேட்டார். அதற்கு சூப்பியாங் அவரிடம், “என்னுடைய எடை நாற்பது, என்னுடைய நண்பன் சாங்கியின் எடையோ இருபத்து ஐந்துதான். இதனால் என்னுடைய நண்பன் அவனை எங்கு வேண்டுமானாலும் தூக்கிச் செல்வதில் எனக்கு எந்தவொரு கஷ்டமில்லை” என்று சொன்னான். இதைக்கேட்டு அந்த செய்தியாளர் மிகவும் வியப்படைந்து, அவனை மனதாரப் பாராட்டினார்.

சூப்பியாங்கைப் போன்று வறியநிலையில் அல்லது வலுவற்ற நிலையில் இருப்பவர்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் கிடைத்தால் எல்லாருடைய வாழ்வும் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்றைய நற்செய்தி வாசகத்தில், முடக்குவாதமுற்ற ஒருவரை அவருடைய நண்பர்கள் இயேசுவிடம் தூக்கிக் கொண்டுவருவதையும் இயேசு அவர்களுடைய அன்பையும் நம்பிக்கையும் கண்டு முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துவதைக் குறித்தும் வாசிக்கின்றோம். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

முடக்குவாதமுற்றவரைத் சுமந்துகொண்டு வந்த சிலர்

நற்செய்தியில் இயேசு தன்னுடைய ஊர்க்கு வருகின்றார். அவர் வீட்டில் இருக்கின்றார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, பலர் அவர் இருந்த வீட்டில் கூடுகின்றார்கள். இந்நிலையில் முடக்குவாதமுற்றவரைத் தூக்கிக்கொண்டு வரும் சிலர், அவரை இயேசுவின் அருகே கொண்டுசெல்வது மிகவும் கடினம் என் நினைத்து, கூரையைப் பிய்த்து அதன்வழியாக அந்த முடக்குவாதமுற்றவரைக் கீழே இறக்குகின்றார்கள். இதைத் தொடர்ந்து இயேசு அந்த மனிதரை எவ்வாறு குணப்படுத்தினார் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், முடக்குவாதமுற்றவரைக் கட்டிலில் வைத்துச் சுமந்துகொண்டு வந்த சிலரின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

மத்தேயு நற்செய்தியில், முடக்குவாதமுற்றவரைச் சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள் என்று வருவது, மாற்கு நற்செய்தியில் நால்வர் (மாற் 2:3) என்று வருகின்றது. இந்த நால்வரும் முடக்குவாதமுற்றவர்க்கு நண்பர்களாக இருந்திருக்கலாம் அல்லது அவர்மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் அவர்கள் இயேசுவைக் குறித்து அறிந்து அவரிடம் தங்கள் நண்பரை எப்படியாவது தூக்கிச் சென்று, அவர்க்கு நலம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று முடிவுசெய்து, அவரைக் கட்டிலில் வைத்துத் தூக்கிக்கொண்டு வருகின்றார்கள். இயேசுவைச் சுற்றி மக்கள்கூட்டம் அதிகமாக இருக்கின்றது என்று நினைத்து அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கவில்லை. அதையும் மீறி, அவர்கள் இயேசுவுக்கு முன்னே முடக்குவாதமுற்றவரை இறக்குகிறார்கள், அவரைக் குணம்பெறச் செய்கின்றார்கள். இந்த நால்வரைப் போன்று நம்மோடு வாழக்கூடியவர்களை, வலுக்குறைந்தவர்களை நாம் தூக்கிச் சுமப்பது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

முடக்குவாதமுற்றவர்க்கு நலமளித்த இயேசு

முடக்குவாதமுற்றவரை அவர்கள் தூக்கிக்கொண்டு வருவதைப் பார்த்து இயேசு உண்மையில் வியந்திருக்கவேண்டும். அதனால் அவர் அந்த முடக்குவாதமுற்றவரை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று சொல்லிக் குணப்படுத்துகின்றார். இந்த நிகழ்வு நாம் நம்மோடு நம்முடைய கடமைகளைச் செய்கின்றபோது அல்லது அன்புச் செயல்களைச் செய்கின்றபோது, அதற்கான பலனை ஆண்டவர் நிச்சயம் தருவார் என்பதை உரக்கச் சொல்வதாக இருக்கின்றது. ஆகவே, நாம் நம்முடைய கடமைகளை, இரக்கச் செயல்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம். இறைவன் அதற்கான ஆசியை நிச்சயம் தருவார்.

சிந்தனை

‘ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக்கொள்ளுங்கள்’ (கலா 6:2) என்பார் பவுல். ஆகையால், நாம் வலுவற்ற நிலையில், வறியநிலையில் இருப்பவர்களை, அவர்களுடைய சுமைகளைத் தாங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். 

Comments are closed.