ஜுன் 30 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்.

நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 51-62

அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள்.

அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார்.

பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, “நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார்.

இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

இயேசு மற்றொருவரை நோக்கி, “என்னைப் பின்பற்றி வாரும்” என்றார்.

அவர், “முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்” என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்றார்.

வேறொருவரும், “ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்” என்றார்.

இயேசு அவரை நோக்கி, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரை.

தன்னை முழுவதும் தருவதுதான் உண்மையான சீடத்துவம்

மெய்யியலாளரான சோரன் கீர்ககார்ட் (Soran Kierkagaard) சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு. ஒரு சமயம் ஒரு சிறுநகரில் இருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. செய்தி நகரில் இருந்த தீயணைப்புப் படையினர்க்குச் சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தீவிபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.

அங்கு அவர்கள் வந்தபோது கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம், அங்கிருந்த ஒருசிலர் தங்களுடைய கையில் வைத்திருந்த தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டு தீயை அணைக்க முயன்று கொண்டிருந்தார்கள். இன்னும் ஒருசிலர் தீயணைப்புப் படையினர்க்கு வழிவிடாமல் தங்களுடைய கையில் இருந்த சிறு சிறு வாளிகளைக் கொண்டு தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்துவிட்டு அந்த தீயணைப்பு படையினரின் தலைவர் அங்கிருந்தவர்களிடம், “இந்தத் தீவிபத்தின் விபரீதம் புரியாமலும் எங்களுக்கு வழிவிடாமமலும் இப்படித் தண்ணீர் துப்பாக்கிகளைக் கொண்டும் சிறுசிறு வாளிகளைக் கொண்டும் தீயை அனைத்துக்கொண்டிருக்கின்றீர்களே! இது நன்றாக இருக்கிறதா… தயவுசெய்து எங்கட்க்கு வழிவிடுங்கள்” என்றார்.

அவர் இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து அங்கிருந்த எல்லாரும் தீயணைப்புப் படையினருக்கு வழிவிட்டனர். இதைத் தொடர்ந்து தீயணைப்பு படையிலிருந்த ஒவ்வொருவரும் முழுமூச்சாக இறங்கி, அடுக்குமாடிக் கட்டிடத்தில் உயிர்க்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றியும் பற்றியெறிந்துகொண்டிருந்த தீயை அணைத்தும் பெரியஅளவில் சேதம் ஏற்படாத வண்ணம் அங்கிருந்தவர்களைக் காப்பாற்றினர்.

இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு சோரன் கீர்ககார்ட் என்ற அந்த மெய்யியலாளர் இவ்வாறு சொல்வார்: “சீடத்துவ வாழ்வு என்றால், பலரும் நினைப்பது போல் நற்செய்திப் பணிக்கு ஓரிரு உதவிகள் செய்வதுவிட்டு திருப்திப்பட்டுக் கொள்வதல்ல. உண்மையான சீடத்துவ வாழ்வு என்பது ஆண்டவர்க்காக நம்மை முற்றிலும் தருவது.“

உண்மையான சீடத்துவ வாழ்வு என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிற்றுக்கிழமையில் இருக்கும் நமக்கு இன்றைய நாள் இறைவார்த்தை, ‘தன்னை முழுவதும் தருவதுதான் உண்மையான சீடத்துவ வாழ்வு’ என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

உண்மையான சீடத்துவ வாழ்வு எது என்ற தெரிந்துகொள்வதற்கு முன்னம், எதுவெல்லாம் சீடத்துவ வாழ்வு கிடையாது என்று தெரிந்துகொள்வது நல்லது.

உள்ளத்தில் வெறுப்போடும் தான் என்ற அகந்தையோடு இருப்பதும் சீடத்துவ வாழ்வு கிடையாது

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எருசலேம் செல்லத் தீர்மானித்து, தமக்குமுன் தூதர்களை அதாவது இடியின் மக்கள் எனப்படும் (மாற் 3:17) யோவானையும் அவர் சகோதரான யாக்கோபையும் அனுப்பிவைக்கின்றார். அவர்கள் இருவரும் சமாரியரின் நகர் வழியாகப் போகமுயன்றதால், அங்கிருந்தவர்கள் இவர்கள் இவரையும் தடுத்துநிறுத்துகிறார்கள். இதனால் இவர்கள் இருவரும் இயேசுவிடம், “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா?” என்று கேட்க, இயேசு அவர்களைக் கடிந்துகொண்டு வேறொரு வழியாக எருசலேமிற்குப் போகின்றார்.

இயேசுவின் சீடர்களான யோவானும் யாக்கோபும், சமாரியர்கள் தங்கள் ஊர் வழியாகப் போகவிடாமல் தடுத்ததற்காக ஏன் இவ்வாறு பேசவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. யூதர்கட்க்கும் சமாரியர்கட்க்கும் பன்னெடுங்காலமாகப் பகை இருந்துவந்தது (2அர 17: 29-41). இப்பகை இயேசுவின் காலம்வரை (யோவா 4: 9,20) ஏன், அதற்கும் பின்னும் நீடித்தது என்பதுதான் இதிலுள்ள துரதிஸ்டம். இப்படி சமாரியர்கள் யூதர்களோடு பகையாய் இருக்கிறார்கள் என்று தெரிந்தபின்னும் யோவானும் யாக்கோபும் வேறொரு வழியாகப் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், சமாரியர்களின் ஊர்வழியாகச் சென்றால் வேகமாகச் சென்றுவிடலாம் என்று அந்த வழியைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் சமரியார்கள் அவர்களைத் தடுக்கின்றார்கள். சமாரியர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது, இயேசு அவர்கட்க்குப் போதித்தது போன்று (மத் 5: 37-48) பகைவர்களை அன்புசெய்து அல்லது மன்னித்துவிட்டு வேறொரு வழியில் சென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், எலியா இறைவாக்கினரைப் போன்று (2 அர 1:10) வானத்திலிருந்து தீ வந்து அவர்களைச் சுட்டெரிக்கச் செய்யவா? என்று இயேசுவிடம் கேட்கின்றார்கள். இயேசுவோ வெறுப்பை மேலும் வளர்க்காமல். அவர்களைக் கண்டிக்கின்றார்.

இதன்மூலம் இயேசு தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள், உள்ளத்தில் வெறுப்புடனோ, பகைமையுடனோ இருக்கக்கூடாது என்ற செய்தியைக் கற்றுத்தருகின்றார். இந்த நிகழ்விற்கு முன்னதாக, சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று விவாதித்துக் கொண்டார்கள். (லூக் 9:46). அப்பொழுது இயேசு அவர்கள் நடுவில் ஒரு குழந்தையை நிறுத்தி, “உங்கள் எல்லாரிலும் சிறியவரே பெரியவர் ஆவார்” என்கின்றார் (லூக் 9:48). இதை வைத்துப் பார்க்கும்போது, இயேசுவின் சீடராக இருக்க விரும்புகின்றவர், உள்ளத்திலிருந்து பகைமையையும் வெறுப்பையும் அகற்றுவதோடு மட்டுமல்லாமல், தாழ்ச்சியோடு வாழ்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது.

இயேசுவுக்காகத் தன்னை முழுமையாய் அர்ப்பணித்து, சிலுவையைச் சுமக்கத் தயாராக இருப்பதே உண்மையான சீடத்துவ வாழ்வு

எது சீடத்துவ வாழ்வு கிடையாது என்பதை அறிந்துகொண்ட நாம், உண்மையான சீடத்துவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதி சொல்வதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். இயேசு எருசலேம் நோக்கிப் போகும்போது, இரண்டாவது மனிதரைத் தவிர்த்து, முதலாம் மற்றும் மூன்றாம் மனிதர்கள் அவர்களாகவே இயேசுவிடம் வந்து அவரைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். இதில் முதலாவதாக வரும் மனிதர் ஒரு மறைநூல் அறிஞர் (மத் 8:9). அவர் சீடத்துவ வாழ்வு என்றால் மிகவும் சொகுசானது என்று நினைத்துகொண்டு வந்து, இயேசுவிடம், நீர் எங்கு போனாலும் நானும் பின்னால் வருவேன் என்று சொல்கிறார். அவரிடம் இயேசு, நரிகட்க்கு பதுங்கிக் குழிகளும் வானத்துப் பறவைகட்க்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாயக்கக்கூட இடமில்லை என்று சொன்னதும், அவர் இயேசுவை விட்டு விலகுகின்றார்.

மூன்றாவது மனிதரோ இயேசுவிடம், நான் உம்மைப் பின்பற்றி வருவேன். ஆயினும் என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வர என்னை அனுமதியும் என்கின்றார். இவரிடம் இயேசு, “கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” என்கிறார். இதில் இரண்டாவது மனிதர் மிகவும் கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். காரணம், அவரிடம் இயேசுவே தன்னைப் பின்பற்றி வருமாறு சொல்கின்றார். அவரோ, நான் என் தந்தையைப் போய் அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும் என்று மறுத்துவிடுகின்றார். அப்படிப்பட்டவரிடம் இயேசு, “இறந்தோரைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நீர்போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” என்கின்றார்.

இந்த மூன்று மனிதர்கட்கும் இயேசு அளித்த பதிலைக் கொண்டே உண்மையான சீடத்துவ வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ளலாம். உண்மையான சீடத்துவ வாழ்வு என்பது முதலாவதாக, சிலுவைகளை ஏற்கத் துணிவது (மத் 16:24), இரண்டாவதாக, மற்ற எல்லாவற்றையும் எல்லாரையும்விட இயேசுவுக்கு முன்னுரிமை தருவது (லூக் 14:26). மூன்றாவதாக, முன்வைத்த காலை பின்வைக்காமல், இயேசுவின்மீது கண்களைப் பதிய வைத்து வாழ்வது. இப்படிப்பட்ட வாழ்வே உண்மையான சீடத்துவ வாழ்வாகும்; இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வோர்க்கு இறைவன் தக்க கைம்மாறு தருவார் (மத்19: 28-29) என்பது உறுதி.

சிந்தனை.

‘கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினையே வழங்கியுள்ளார்’ (2திமொ 1:7) என்பார் பவுல். ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வல்லமையும் அன்பும்கொண்ட இதயத்தைக் கொண்டு, இறையாட்சிப் பணிக்காக நம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து, அன்போடு பணிசெய்வோம். அதவழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.