நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 28)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம்
வெள்ளிக்கிழமை
மத்தேயு 8: 1-4

“நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்”

நிகழ்வு

Guideposts என்ற நூலில் பிரபல எழுத்தாளர் ஜோஸ்பின் குன்ஸ் (Josephin Kunts) சொல்லக்கூடிய ஒரு நிகழ்வு.

கணவன், மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் என்றிருந்த ஓர் ஏழைக் குடும்பத்தில், திடீரென்று ஒருநாள் இளைய மகளுக்கு நிமோனியாக் காய்ச்சல் வந்துவிட்டது. வயிற்றுக்கும் வாய்க்கும் திண்டாடிக்கொண்டிருந்த அந்தக் குடும்பத்திற்கு இது பேரிடியாய் அமைந்தது. எப்படியோ தங்கட்குத் தெரிந்தவர்கள் செய்த சிறுசிறு உதவிகளைக் கொண்டு காய்ச்சலில் கிடந்த அந்தக் குழந்தையை அக்குடும்பம் காப்பாற்றியது.

குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், குழந்தையை அதனுடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னம், அதனுடைய பெற்றோரை அழைத்து, “குழந்தையிடமிருந்து காய்ச்சல் முற்றிலுமாக நீங்கிவிட்டது. இருந்தாலும் நான் எழுதிக் கொடுக்கக்கூடிய மருந்து மாத்திரைகளைத் தவறாமல் கொடுங்கள். கூடவே ஒரு வாரத்திற்கு காலைநேரத்தில் அவித்த முட்டையைத் தவறாமல் கொடுங்கள்” என்றார். குழந்தையின் பெற்றோரும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

வீட்டுக்கு வந்தபிறகு அந்தக் குழந்தையின் தாய், அதனுடைய தந்தையிடம், “நாம் சாப்பாடிற்கே மிகவும் திண்டாடிக்கொண்டிருக்கின்றோம். இதில் ஒருவாரத்திற்கு குழந்தைக்கு அவித்த முட்டை கொடுக்கவேண்டும் என்றால், எப்படிக் கொடுப்பது?” என்று புலம்பினார். இதைக் கேட்டுவிட்டு குழந்தையின் தந்தை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்பொழுது அந்தக் குடும்பத்தில் இருந்த மூத்த குழந்தை, “அம்மா! பாப்பாவிற்கு ஒரு வாரத்திற்கு அவித்த முட்டைதானே வேண்டும். இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டுவோம். அவர் நம்முடைய பாப்பாவிற்கு நிச்சயம் அவித்த முட்டை தருவார்” என்றார். மூத்த மகள் சொன்ன இவ்வார்த்தைகளை கேட்டு, பெற்றோர்க்கு நம்பிக்கை பிறந்தது.

அன்றைய இரவு இறைவேண்டலில் குடும்பத்தில் இருந்த எல்லாரும் சேர்ந்து இளைய மகளில் நற்சுகத்திற்காகவும் ஒருவாரத்திற்குத் தவறாமல் முட்டை கிடைக்கவேண்டும் என்றும் நம்பிக்கையோடு மன்றாடினார்கள். மறுநாள் காலையில், தாயானவள் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தபோது, எங்கிருந்தோ வந்த ஒரு கோழி, வீட்டிற்கு முன்னால் இருந்த செடிகட்கிடையே சென்று, முட்டையிட்டுவிட்டு மாயமாய் மறைந்தது. இதைப் பார்த்த தாய்க்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. அவள் வீட்டில் இருந்த எல்லாரையும் அழைத்து, கோழி வந்து முட்டையிட்டுச் சென்றதைக் காட்டியபோது மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு தாயானவள் அந்த முட்டையை அவித்து, இளைய மகளுக்குக் கொடுத்தார்.

அன்றைய நாளின் இரவு இறைவேண்டலில் குடும்பத்தில் இருந்த எல்லாரும் இறைவன் செய்த நன்மைக்கு நன்றிசெலுத்தினார்கள். மேலும் அந்த நன்மை தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்றும் வேண்டினார்கள். அவர்கள் வேண்டியதுபோன்று மறுநாளும் முந்தைய நாளில் வந்த கோழி வீட்டுக்கு முன்பாக முட்டையிட்டுவிட்டு மறைந்தது. இப்படியே ஒருவாரம் நடந்தது. அந்த ஒருவாரத்தில் இளைய மகள் முற்றிலுமாக நலமடைந்தாள். அவள் நலமடைந்த பின்பு கோழியும் வருவதை நிறுத்திக்கொண்டது.

நடந்த எல்லாவற்றையும் கவனித்த அந்தக் குடும்பத்தில் இருந்த தந்தையும் தாயும் இறைவன்தான் நம்முடைய வேண்டுதலைக் கேட்டு உதவியிருக்கின்றார் என்று அவர்க்கு நன்றி செலுத்தினார்கள்.

இறைவன் தங்களுடைய குடும்பத்திற்கு நிச்சயம் உதவுவார் என்று அந்தக் குடும்பம் நம்பிக்கையோடு வேண்டியது. அதனால் இறைவன் அவர்கட்கு அற்புதமாக உதவினார். நாமும் இறைவனிடம் நம்பிக்கையோடு மன்றாடினால், அவர் நமக்கு நிச்சயம் உதவுவார். அத்தகைய செய்தியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் தாங்கி வருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

நம்பிக்கையோடு இயேசுவிடம் வந்த தொழுநோயாளர்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மலையிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, தொழுநோயாளர் ஒருவர் அவரிடம் சென்று, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று சொல்ல, இயேசுவும், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக” என்கின்றார். இயேசு, மக்களால் ‘தீண்டத்தகாதவர்’ என்று முத்திரை குத்தப்பட்ட தொழுநோயாளரக் குணப்படுத்துவதற்குக் காரணமாக இருந்தது எது என நாம் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் இன்றியமையாதது.

யூதர்கள், புறவினத்தாரையும் பெண்களையும் தொழுநோயாளர்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது. இதில் தொழுநோயாளர்களின் நிலை முந்தைய இருவரின் நிலையை விடவும் பரிதாபமானது. சமூகத்தால் பாவிகள்/ தீட்டானவர் என்று முத்திரை குத்தப்பட்ட இவர்கள் (லேவி 13:8), ஊர்க்கு வெளியே இருந்துகொண்டு, யாரும் தங்களை நெருங்காத வண்ணம் ‘தீட்டு, தீட்டு’ என்று கத்தவேண்டும் (லேவி 13: 45-46). இப்படிப்பட்ட நிலையில் இருந்த தொழுநோயாளர் இயேசுவைக் கண்டதும், அவர் தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பிக்கையோடு செல்கின்றார்.

நம்பிக்கையோடு வந்தவர்க்கு நலமளித்த இயேசு

தொழுநோயாளர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கை, தொடர்ந்து அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் மிகவும் அசாதாரணமானவை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், முன்னமே சொன்னதுபோன்று மனிதர்கள் யாரும் நெருங்கிவிடாத வண்ணம் இருக்கவேண்டிய தொழுநோயாளர்(கள்) அதையெல்லாம் ஒருபொருட்டாகக் கருதாமல், இயேசு தன்னைக் குணப்படுத்துவார் என்ற நம்பியோடு அவரைப் பணிந்து, மரியாதையோடு “ஐயா” என்று அவரை அழைத்து, “நீர் விரும்பினால் உம்மால் குணப்படுத்த முடியும்” என்கின்றார். இயேசுவால் தன்னுடைய தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்க்கு இருந்தது. அதனால்தான் அவர் அப்படிச் சொல்கின்றார். இயேசுவும் அவருடைய நம்பிக்கையைக் கண்டு அவர்க்கு நலமளிக்கின்றார்.

‘கடுகளவு நம்பிக்கை, மலையையும் இடம்பெறச் செய்யும்’ (மத் 17:20) என்ற இயேசுவின் வார்த்தைக்கு ஏற்ப, தொழுநோயார் இயேசுவின்மீதுகொண்ட நம்பிக்கை அவர் நலம் பெறுவதற்குக் காரணமாக அமைகின்றது. நாமும் இயேசுவிடம் அத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தால், நம்மாலும் இறைவனிடமிருந்து ஆசியைப் பெற முடியும் என்பது உறுதி.

சிந்தனை

‘கடவுள்மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கும்போது, நம்முடைய கவலைகள் மறையத் தொடங்குகின்றன’ என்பர். எனவே, நாம் நற்செய்தியில் வரும் தொழுநோயாளரைப் போன்று இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.