ஜுன் 28 : வெள்ளிக்கிழமை. நற்செய்தி வாசகம்.

என்னோடு மகிழுங்கள்; காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 3-7

அக்காலத்தில் இயேசு பரிசேயர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: “உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, `என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’ என்பார்.

அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை.

இயேசுவின் திருஇருதயப் பெருவிழா.

1981 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் கொலம்பியாவிற்கு செய்திகளைச் சேகரிக்கச் சென்ற செட் பிட்டெர்மன் (Chet Bitterman) என்ற பத்திரிக்கையாளரை அங்கே இருந்த ஒருசில அடிப்படைவாதிகள் (Fundamentalists) தெருவில் இழுத்துப் போட்டு, அடித்தே கொலைசெய்தார்கள். இதை கேள்விப்பட்ட செட் பிட்டெர்மெனின் பெற்றோர்கள் கதறி அழுதார்கள். தன்னுடைய மகனைக் கொலை செய்த அந்த கயவர்களை இறைவன் தண்டிக்கவேண்டுமென்று மன்றாடினார்கள்.

மாதங்கள் உருண்டோடின. 1982 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் கொலம்பியாவில் கொடியநோய் ஒன்று பரவி, நூற்றுக்கணக்கான மக்கள் அதில் இறந்துபோனார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்ட செட் பிட்டெர்மனின் பெற்றோர்கள் சந்தோசப்படவில்லை. மாறாக அவர்களுக்காக மனம் இரங்கினார்கள்.

உடனே தேவையான அளவு மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டு, கூடவே ஒரு மருத்துவக் குழுவையையும் கூட்டிக்கொண்டுபோய் அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தார்கள்; நோயினால் பாதிக்கப்பட்ட நிறைய குழந்தைகளையும், பெண்களையும் காப்பாற்றினார்கள். அத்தோடு மட்டுமல்லாமல் அம்மக்களின் தேவைக்காக ஆம்புலன்ஸ்கள் சிலவற்றையும் வாங்கி இலவசமாகக் கொடுத்தார்கள்.

அப்போது அங்குவந்த ஒரு மனிதர் செட் பிட்டெர்மனின் பெற்றோர்களிடம் “இம்மக்கள்களில் ஒருசிலர்தான் உங்களுடைய ஒரே மகனையும் அடித்துக்கொன்று போட்டார்கள். அப்படியிருக்கும்போது இவர்களுக்கு இவ்வளவு உதவிகளைச் செய்கிறீர்களே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “தொடக்கத்தில் நாங்கள் இவர்கள்மீது வெறுப்புணர்வோடுதான் இருந்தோம். ஆனால், கடவுள் எங்களுடைய உள்ளத்திலிருந்து பகைமையையும், வெறுப்பையும் அகற்றிவிட்டு, மன்னிப்பையும், அன்பையும் பொழிந்திருக்கிறார். இப்போது எங்களுடைய உள்ளம் அன்பால் நிறைந்திருக்கிறது” என்றார்கள்.

தங்களுடைய ஒரே மகனையும் கொன்ற கயவர்களை மன்னித்து, அவர்களுக்காக உள்ளத்தில் அன்பைத் தேக்கி வைத்திருக்கும் செட் பிட்டெர்மெனின் பெற்றோர்கள் உண்மையிலே நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

இன்று திருச்சபையானது இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இதயம் என்று சொன்னாலே அது அன்பின் பிறப்பிடமாக இருக்கின்றது. இந்த மண்ணை, மக்களை வாழ்விக்கக்கூடிய அன்பு அதிலிருந்துதான் பிறப்பெடுக்கின்றது. ஆண்டவர் இயேசு அன்பே உருவானவர். எனவே, அவருடைய இருதயத்தில் எத்தகைய அன்பு குடிகொண்டு இருந்தது என்பதை சிந்தித்துப் பார்த்து, நம்முடைய இருதயத்தை அவருடைய இருதயமாக்க முயல்வோம்.

முதலாவதாக இயேசுவின் இ(ரு)தயம் இரக்கமுள்ள இ(ரு)தயமாக இருக்கின்றது. மத்தேயு நற்செய்தி 11 ஆம் அதிகாரம் 29 ஆவது வசனத்தில் நாம் வாசிக்கக் கேட்கின்றோம், “நான் (இயேசு) கனிவும், மனத்தாழ்மையும் உடையவன்” என்று. ஆம், இயேசுவின் இந்த கனிவும், இரக்கமும் அவருடைய பணிவாழ்வில் பலநேரங்களில் வெளிப்பட்டது. குறிப்பாக மக்கள் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்தபோது அவர்கள்மீது இரக்கம்கொண்டபோதும், (Mt 9: 36, 15: 32) நோயுற்றுக் கிடந்தவர்களைக் குணப்படுத்தியபோதும் அது அதிகமாக வெளிப்பட்டது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் காணமல் போன ஓர் ஆட்டை தேடிச்செல்லும் இரக்கமுள்ள ஒரு ஆயனாகவும், இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் படிப்பது போன்று நலிந்தவற்றை தேற்றுகிற, காயப்பட்டதைக் குணப்படுத்துகின்ற ஓர் ஆயனாகவும் விளங்குகின்றார். இவ்வாறு இயேசுவின் இ(ரு)தயம் இரக்கத்தால் நிரம்பி வழிந்தது என்று சொன்னால், அது மிகையாகாது.

இரண்டாவதாக இயேசுவின் இ(ரு)தயம் மன்னிக்கின்ற இ(ரு)தயமாக விளங்கியது. பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு தவறு புரிந்தபோதும், கடவுள் அவர்களை மன்னித்ததுபோன்று, ஆண்டவர் இயேசு தனக்கு எதிராகத் தவறு செய்தவர்களையும் மன்னிப்பவராக இருந்தார். லூக்கா நற்செய்தி 23:34 ல் வாசிக்கின்றோம். அங்கே ஆண்டவர் இயேசு தந்தைக் கடவுளைப் பார்த்து, “தந்தையே! இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று மன்றாடுகின்றார். அந்தளவுக்கு அவருடைய இ(ரு)தயம் மன்னிக்கூடியதாக இருதயமாக இருந்தது.

ஒருமுறை ஸ்டான்லி ஜோன்ஸ் என்ற மறைபோதகர், தான் நடத்திவந்த நற்செய்தி கூட்டத்தில், இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் தொடர்ச்சியாக கலந்துகொள்வதை கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் அந்த இந்து சமயத்தைச் சார்ந்தவரிடம், “நான் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியாக எது உன்னைத் தூண்டியது?” என்று கேட்டார்.

அதற்கு அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் இருக்கும் பகுதியில் ஒரு கிறிஸ்தவ மிஷினரி கிறிஸ்தவ மதத்தைப் பற்றி போதித்துக்கொண்டு வந்தார். அது எங்களுக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் நாங்கள் அனைவரும் சேர்ந்து, அவர் போதித்துக் கொண்டிருக்கும்போது தக்காளிப் பழங்களை அவர்மீது வீசியடித்தோம். அவர் எதுவும் சொல்லாமல், தன்மீது வீசப்பட்ட தக்காளிப் பழங்களைச் சேகரித்து, அதிலிருந்து ஜூஸ் தயாரித்து, எங்களுக்குப் பருகக் கொடுத்தார். அதைப்பார்த்து நாங்கள் அப்படியே அதிர்ச்சியடைந்து நின்றோம்.

அப்போதுதான் நான் ஓர் உண்மையை உணர்ந்தேன், ‘ஒரு சாதாரண மிஷினரியே தனக்கு எதிராகத் தீமை செய்பவர்களை மன்னிக்கின்றபோது, கிறிஸ்து எந்தளவுக்கு மன்னிக்கின்றவராக இருப்பார் என்பதை அறிந்து, அதிலிருந்து நான் நீங்கள் நடத்தும் நற்செய்திக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கிறிஸ்துவை இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள முற்படுகின்றேன்” என்றார்.

ஆம், கிறிஸ்து பகைவர்களை மன்னிக்கக்கூடிய இ(ரு)தயத்தைக் கொண்டிருந்தார். இது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

இறுதியாக இயேசு தன்னையே பிறருக்காகத் தரும் அன்பின் இ(ரு)தயத்தைக் கொண்டிருந்தார். உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், “நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தாலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோது கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்” என்று. ஆம், இயேசு பாவிகளாகிய நமக்காக தன்னுடைய உயிரைத் தந்தார். இதில்தான் அவருடைய அன்பு முழுமை பெறுவதாக இருக்கின்றது.

இன்றைக்கு யாரும் தன்னுடைய உயிரை பிறருக்காக, மக்களுக்காக தரமுன்வருதில்லை. பிறரை விடுங்கள், தன்னுடைய பெற்றோருக்காக, பிள்ளைகளுக்காகக்கூடத் உயிரைத் தர யாரும் முன்வருவதில்லை. அப்படி இருக்கும்போது ஆண்டவர் இயேசு பாவிகளாகிய நமக்குத் தன்னுடைய உயிரைத் தர முன்வந்தார். இது அன்பின் உச்சக்கட்டம். தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுவார், “இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பில் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுகெட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக” என்று (எபேசியர் 3:18). ஆம், இயேசுவின் அன்பு எல்லையற்றது, அதனை வார்த்தையால் விவரிக்க முடியாது.

ஆகவே இயேசுவின் திருஇருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்லநாளில் இயேசுவின் இ(ரு)தயத்தில் விளங்கிய எல்லையில்லா அன்பை, மன்னிப்பை, இரக்கத்தை நாமும் கொண்டுவாழ்வோம், ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

“இறுதி நாளில் கடவுள் உன்னை உன்னிடம் இருக்கும் அறிவை வைத்துத் தீர்ப்பிடுவதில்லை. மாறாக, உன்னுடைய உள்ளத்தில் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை வை”

Comments are closed.