இயேசுவின் முழு இருப்பின் தொகுப்பே திருநற்கருணை

தந்தையாம் இறைவனுக்கும் தன் சகோதரர், சகோகரிகளுக்கும் அன்புகாட்டும் இயேசுவின் முழு இருப்பின் தொகுப்பே திருநற்கருணை என, இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனக்குத்தானே வாழ்தல் என்ற போக்கிலிருந்து மாறி, இறைவன் நமக்குக் கொடுத்துள்ள சிறியவற்றைக்கூட மற்றவர்களுடன் பகிர முன்வரும் மாற்றத்தையே, இயேசுவின், ‘அப்பம் பலுகுதல் புதுமை’ எடுத்துரைக்கிறது என, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கினார் திருத்தந்தை.

இயேசுவின் மெசியாவுக்குரிய அதிகாரத்தை வெளிப்படுத்தும் இப்புதுமை, மக்கள் மீது அவர் கொண்டிருந்த கருணையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பாடுகளுக்கு முந்தைய நாள், தன் இறப்பு மற்றும் உயிர்ப்பின் நிலையான நினைவுச்சின்னமாக, புதிய, நீடித்த உடன்படிக்கையாக திருநற்கருணையை இயேசு விட்டுச்சென்றார் என மேலும் கூறினார்.

இயேசுவைத் தன்னுள் கொண்டிருக்கும் திருநற்கருணை எனும் உன்னத கொடை மீது நம் மகிழ்ச்சியை, ஒவ்வோர் ஆண்டும், இந்த திரு உடல் திரு இரத்த திருவிழாவின்போது புதுப்பிப்போம் என, மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.