மன்றாட்டுகளின் பட்டியலைச் சமர்ப்பிப்பது செபம் அல்ல

இறைவேண்டலின் முக்கிய பணி மன்றாட்டுக்களை எழுப்புவது மட்டும் அல்ல என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூன் 26 இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

“இறைவேண்டலில் நாம் ஆற்றவேண்டிய முதல் பணி, இறைவனின் பெயரைப் புகழ்தல், அவருக்கு ஆராதனை செய்தல், மற்றும் அவரது வாழும் சாயலாகத் திகழும் சகோதரர்கள், சகோதரிகளை ஏற்றுக்கொள்ளுதல் என்பனவற்றை மறந்துவிட்டு, எத்தனை முறை நாம், கடவுளின் கொடைகளைக் கேட்பது, மற்றும், மன்றாட்டுகளின் பட்டியலைச் சமர்ப்பிப்பது என்று இறைவேண்டலைக் குறுக்கிவிடுகிறோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டிருந்தார்.

“திருமுழுக்கு பெற்றவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்” (தி.ப. 2:42) என்ற இறை வாக்கியத்தைக் குறித்து, இப்புதன் மறைக்கல்வி உரையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதைத் தொடர்ந்து, இறை வேண்டுதல் குறித்த தன் டுவிட்டர் செய்தியையும் வெளியிட்டிருந்தார்.

மேலும், புதன் கிழமைகளில் திருத்தந்தை வழங்கும் மறைக்கல்வி உரை நிகழ்வு, ஜூலை மாதத்தில் நிறுத்தி வைக்கப்படும் என்றும், மீண்டும் இந்நிகழ்வு, ஆகஸ்ட் மாதம் தொடரும் என்றும், திருப்பீட செய்தி தொடர்பகம் இப்புதனன்று அறிவித்துள்ளது.

Comments are closed.