இயேசுவின் திருஇருதயம் நீதிக்கு மாதிரிகை.
தமது ஜீவிய காலமெல்லாம் திவ்விய இயேசு அனுசரித்து வந்த நீதியென்ற புண்ணியமானது திருஇருதய சிநேகத்தின் வேறோர் சாயல். சேசாருக்கு உரியதைச் சேசாருக்குச் செலுத்துங்கள். சர்வேசுரனுக்கு உரியதைச் சர்வேசுரனுக்குச் செலுத்தங்கள் (லூக் 20:25) என்று நமதாண்டவர் சொன்னபோது, இந்தப் புண்ணியத்தை எம்மாத்திரம் நன்கு மதித்தாரென்றும், புகழ்ந்தாரென்றும் அறிகிறது சுலபம். ஒவ்வொருவனுக்கும் அவனுக்குரியதைச் செலுத்துவதில் தான் நீதி அடங்கியிருக்கிது. இந்தப் புண்ணியமானது சர்வேசுரனுக்கும் மனிதர்களுக்கும் நாம் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் உத்தமமாய் நிறைவேற்ற நம்மைத் தூண்டுகிறது.
உத்தமமான தேவ ஊழியத்துக்கும், சர்வேசுரன்மட்டில் நமக்குள்ள கடமைகளை நிறைவேற்றுகிறதற்கும், திவ்விய இயேசு மாதிரியையிருக்கிறார். தமது தேவபிதாவை மகிமைப்படுத்தி, அவருடைய சித்தத்தை நிறைவேற்றி மனிதர்களுக்கு அறிவித்து சிநேகிக்கச் செய்வதில் திவ்விய இயேசு கொண்டிருந்த ஆவல் இம்மாத்திரமென்று விவரிக்க இயலாது. இதற்காகவே அவர் இவ்வுலகத்துக்கு வந்தார். இந்தத் தேவ ஊழியத்தை விருத்தி செய்யவே தமது பிராணனைக் கொடுத்தார். இயேசுக்கிறிஸ்து நாதர் இவ்வுலகத்தை விட்டு பிரியுந்தருணத்தில் பிதாவே! நீர் எனக்குக் கற்பித்ததையெல்லாம் நான் நிறைவேற்றினேன் என்று அவர் திருவுளம் பற்றினது சர்வ நீதிக்கும் ஒத்திருக்கும்.
நாம் சாகுந்தருணத்தில் இதே வார்த்தைகளை நாம் உச்சரிக்கக் கூடுமானால், நாம் எவ்வளவோ பாக்கியவான்களாயிருப்போம்! சர்வேசுரன் நமது சிருஷ்டிகர்; நமது இரட்சகர். ஆதலால் நாம் அவரை வணங்கி, சிநேகித்து சேவிக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் கடமைப்பட்டிருக்கிறோம். நாம் நல்ல கிறிஸ்தவர்களாய் நடக்க விரும்பினால் சர்வேசுரன் மட்டில் நீதிக்கு ஒத்தபிரகாரம் நடந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப் படிந்து, கிறிஸ்துவனுக்குரிய கடமைகளை நிறைவேற்றி, சாகும்பரியந்தம் அவருடைய ஊழியத்தில் பிரமாணிக்கமாய் நிலைத்திருக்க வேண்டியது.
சர்வேசுவரனுக்கடுத்த கடமைகளை நிறைவேற்ற தங்களாலான பிரயாசப்படுகிற நல்ல கிறிஸ்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் நடத்தையால் தங்களைக் கண்காணிக்கும் வேத போதகர்களுக்கு மெய்யாகவே ஆறுதலாயிருக்கிறார்கள். இன்னும் வேறு பலர் இருக்கிறார்கள், இவர்கள் தேவ ஊழியத்தில் அஜாக்கிரதையாய் நடந்து, பாவ வழியில் வாழ்கிறார்கள். தங்களுக்கு இஷ்டமான கடமைகளைச் செய்வார்கள், தங்கள் சுபாவத்தோடு ஒத்துப்போகாத கடமைகளை விட்டுவிடுவார்கள். நித்திய கேட்டுக்கு ஆளாக்கும் இந்த அசமந்தத்திலிருந்து இவர்களை அசைக்கக் குருவானவர் பிரயாசப்படுவாராகில், உடனே முறையிடுவார்கள், அவருக்கு விரோதமாய்ப் பேசுவார்கள். தங்கள் பேரில் கண்டிப்பாயிருக்கிறாரென்று தூற்றுவார்கள். சில சமயங்களில் கலகம் உண்டு பண்ணுவார்கள். அசட்டைத்தனமுள்ள கிறிஸ்துவர்களுக்கு ஆபத்தாய் வந்து முடியும் இந்தக் குற்றங்களைக் கவனியாமல், கண்ணை மூடிக்கொண்டிருப்பது குருவானவருக்கு மிக எளிது. ஆனால் தமது வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட ஆத்துமங்களைத் தமது அசட்டைத்தனத்தால் கவனியாமல் விடுவாரேயாகில், இவர் ஆண்டவருக்குக் கண்டிப்பான கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.
இயேசுவின் திருஇருதய பக்தர்கள் சர்வேசுரன் மட்டில் நீதியென்கிற புண்ணியத்தைத் தங்களால் இயன்றளவு அனுசரிப்பார்கள். தேவ ஊழியத்தில் தாராள குணத்தோடு நடப்பார்கள். சோதனை நேரத்திலும், ஞான ஆறுதலான நேரத்திலும் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கம் தவறமாட்டார்கள். தேவ ஊழியத்தில் தவறி, சர்வேசுரனுக்குத் துரோகம் பண்ணுகிறதைவிட சாகத் துணிந்திருப்பார்கள்.
புனித அதிரியானப்பர் கொடிய சாவுக்கு தீர்வையிடப்பட்ட போது, தமக்கு வரப்போகிற வேதசாட்சி முடியைப்பற்றி தமது மனைவிக்கு அறிவிக்கும்படி காவற்காரர்களுடைய அனுமதி பெற்று வீட்டுக்குப் போனார். அவருடைய பக்தியுள்ள மனைவி, தன் புருஷன் நிர்ப்பாக்கியமாய்த் தன் விசுவாசத்தையும் இயேசுக்கிறிஸ்துவையும் மறுதலித்து விட்டதினிமித்தமல்லவா சினத்திலிட்டு விடுதலையாகி வருகிறாரென்று எண்ணி, கோபங்கொண்டு கதவை சாத்திவிட்டுச் சொன்னதாவது : “ஆ! கோழை, சதிகாரரே, என் முன் ஒருபோதும் வராதேயும், என்னோடு பேசாதேயும். தேவ ஊழியத்தை விட்டுப் பிரிந்து, உமது சிருஷ்டிகருக்கும் இரட்சகருக்கும் துரோகம் புரிந்த நீர் என் முகத்தில் விழிக்கவேண்டாம். தீர்வை நாளில் தேவ சந்திதானத்துக்கு முன் வேத விரோதியாய் நீர் நிற்கும்போது உமது நிர்ப்பாக்கியம் எவ்வளவு பெரிதாயிராது” என்று கத்தினாள்.
புனித அதிரியானப்பர் தன் மனைவி போட்ட சப்தத்தைக் கேட்டு ஆச்சரியப்படாமல், உண்மையை உள்ளது போல் அறிவிக்க, அவள் உடனே சந்தோஷப்பட்டதுமல்லாமல், இருவருமாக ஆண்டவருக்கு நன்றியறிந்த தோத்திரம் செலுத்தினார்கள். தேவ ஊழியத்தில் விசுவாசிகளுக்கு இருக்கவேண்டிய வீரத்துவமான பிரமாணிக்கத்தின் ஆச்சரியமான மாதிரிகை இதுவே!
தென்னிந்தியாவைச் சேர்ந்த ஓர் பங்கில் சில வருஷங்களுக்கு முன் தங்கள் பங்கு குரு செய்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் பிரியமில்லாத சில பெரிய மனிதர்கள் குருவானவருக்கு விரோதமாய்க் கலகஞ் செய்து, இந்தத் தீர்மானத்தை மாற்றினாலொழிய நாங்கள் திருப்பலியில் கலந்து கொள்ள மாட்டோம் என்றும், திருவருட் சாதனங்களைப் பெறமாட்டோமென்றும் பிடிவாதம் பண்ணினார்கள். ஆனால் அவ்வூர்ப் பெண்பிள்ளைகள் பக்தியுள்ள புத்திசாலிகள். அவர்களில் பலர் மரியன்னையுடைய சபையைச் சேர்ந்த சுறுசுறுப்புள்ள கிறீஸ்துவர்கள். தங்களுடைய கணவர்கள் அநேக சாவான பாவங்களுக்கு உத்திரவாதிகளாகி நித்திய கேட்டின் மார்க்கத்தில் நடக்கப்போகிறதைப் பற்றி மிக துன்பப்பட்டார்கள். ஆதலால் பெண்களெல்லோரும் சேர்ந்து தாங்களே ஒரு கூட்டம் கூடி, தங்கள் வீட்டுக்காரர்கள் சர்வேசுரனுக்கு குருவானவருக்கும் விரோதமாக எடுத்த பிடிவாதப்படி தாங்கள் நடக்கிறதில்லையென்றும், அவர்கள் திருச்சபையின் சொற்படி கேட்கும் வரையில் அவர்களுக்கு சமையல் செய்து போடுகிறதில்லையென்றும் தீர்மானம் பண்ணினார்கள். இந்தத் தீர்மானத்தால் குடும்பத்தில் மிக தொந்தரவுகள் ஏற்பட்டன. கணவர்கள் அவர்களைத் திட்டினார்கள், அடித்தார்கள், கொடுமையாய் நடத்தினார்கள். பெண்கள் பயப்படவில்லை, வெகு உறுதியாயிருந்தார்கள். ஆண் பிள்ளைகள் தான் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து உடல் மெலிந்து வருத்தப்படவேண்டியிருந்தது. கடைசியாய்த் தங்கள் மனைவிகளின் எண்ணப்படி புருஷர் இணங்க வேண்டியிருந்தது. குருவானவர் கட்டளைக்கு முழுதும் கீழ்ப்படிந்தார்கள். இவ்வகையாய் அவர்களுடைய சரீர உயிரும், ஆத்தும் உயிரும் காப்பாற்றப்பட்டது.
தேவ ஊழியத்தில் இந்தப் பக்தியுள்ள பெண்கள் காட்டின் ஆச்சரியத்துக்குரிய நன்மாதிரிகையைக் கண்டு உணர்வோம். இவர்கள் தங்கள் நல்ல நடத்தையால் போதிக்கும் படிப்பினை மிக பலனுள்ள படிப்பினை. இவ்வித சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்கள் வேத வைராக்கியத்தைக் காண்பிக்கிறது, மற்றவிடங்களிலும் மிக பிரயோஜனமாயிருக்கும்.
2- வது – நமது அயலார்மட்டில் நமக்குள்ள கடமைகள் : தேவ ஊழியத்தில் சுறுசுறுப்பும் பிரமாணிக்கமுமுள்ள கிறிஸ்துவன், தன் அயலான் மட்டில் தனக்குள்ள கடமைகளையும் பிரமாணிக்கமாய்ச் செலுத்துவான். பிறருடைய சொத்துக்கும் பெயருக்கும் கெடுதலான சகலத்தையும் விலக்கி, நல்ல கிறிஸ்துவர்கள் எச்சரிக்கையாய் நடப்பார்கள். பிறருடைய சொத்தில் அல்லது காணிபூமியில் ஒரு சொற்பப் பாகத்தை யென்கிலும் தங்களுடையதாக்கிக் கொள்ளுதல், மற்றவர்களுக்குச் சொந்தமான பணத்தைத் தன்வசம் வைத்திருத்தல், கேடுவரும் படி பொய்ப் புகார் செய்தால், பொய்ச்சாட்சி சொல்லுதல்,
விற்கிற வாங்குகிற ஜாமான்களின் அளவில் ஏமாற்றுதல், புறணி ஆவலாதிகளால் மற்றவர்களுடைய பெயரைக் கெடுத்தல் ஆகிய இவைபோன்றவைகள் பிறருக்கு அநீதம் வருவிக்கிறதென்று அவர்களுக்கு நன்றாய்த் தெரியும். சில சமயம் ஏதேனும் கெடுதல் வருவித்துவிட்டதாகக் கண்டால் உத்தரித்தாலொழிய பாவப்பொறுத்தல் கிடையாதென்று நல்ல கிறீஸ்துவன் எப்போதும் அறிந்திருப்பதினால், அது பொருள் நஷ்டமோ அல்லது பெயர் நஷ்டமோ தான் செய்த கெடுதலை நிவர்த்தி செய்ய தன்னாலான பிரயாசப்படுவான்.
இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் அனைவரும், ஆண்டவரிடமும் அயலார்மட்டிலும் தாங்கள் செலுத்த வேண்டிய கடமைகளையெல்லாம் உத்தமமாய் நிறைவேற்ற உறுதியான பிரதிக்கினை செய்யும்பட்சத்தில் அவர்களும் புனித சூசையப்பரைப்போல் நீதிமான், அதாவது “சர்வேசுரன் மட்டிலும், மனிதர்கள் மட்டிலும் தனக்குள்ள சகல கடமைகளையும் நிறைவேற்றுகிற கிறிஸ்துவன்” என்கிற பெயருக்குப் பாத்திரமாவார்கள். இயேசுவின் திரு இருதயமானது நித்தியத்துக்கும் அவர்களுடைய சம்பாவனையும் பாக்கியமுமாயிருக்கும்.
Comments are closed.