நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 26)

பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம்
புதன்கிழமை
மத்தேயு 7: 15-20

போலிகள் சூழ் உலகு

நிகழ்வு

அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்தார்கள். கல்வி ஆண்டின் முடிவில் அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த தாளாளர் ‘குழு நிழற்படம்’ (Group Photo) எடுப்பதற்காக நகரில் இருந்த ஒரு பிரபல நிகழ்படக் கலைஞரை அழைத்தார். அவரோ மூவாயிரம் மாணவ மாணவியர் படிக்கின்ற பள்ளிக்கூடம் என்றதும், உற்சாகமாகப் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்தார்.

‘ஒரு நிகழ்படத்திற்கு பதினைந்து உரூபாய்’ என்று ஒன்றைக் காலில் நின்றார் அந்த நிழற்படக் கலைஞர். அப்படி இருந்தவரை பள்ளியின் தாளாளர் தன்னுடைய சாதூர்யமான பேச்சால் ‘ஒரு நிழற்படத்திற்குப் பத்து உரூபாய்’ என்று சம்மதிக்கச் செய்தார். பின்னர் அவர் அந்த நிழற்படக் கலைஞரிடம், “இப்போதே பள்ளியிலுள்ள எல்லாரிடமும் நாளைய நாளில் குழு நிழற்படம் எடுக்கப்போகிற செய்தியைச் சொல்லிவிடுகிறேன். நீங்கள் நாளைக் காலை வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினார்.

நிழற்படக் கலைஞர் அங்கிருந்து போனபின்பு தாளாளர் கணக்குப் போடத் தொடங்கினார். ‘பள்ளியில் மூவாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள்… அப்படியென்றால் ஒரு நிழற்படத்திற்கு ஐம்பது உரூபாய் என்று நிர்ணயித்தால், நிழற்படக் கலைஞர்க்கு பத்து உரூபாய் போக, மீதம் நாற்பது உரூபாய் நமக்குத்தான். இப்படி மூவாயிரம் மாணவர்கட்கு நாற்பது உரூபாய் என்றால், ஒரு இலட்சத்து இருபதாயிரம் உரூபாய் வரும். அதைக் கொண்டு இந்தக் கோடை விடுமுறையில் வெளிநாட்டுப் பயணம் சென்றுவிடலாம். எவ்வளவு அருமையான யோசனை.’

அவர் இவ்வாறு கணக்குப் போட்டுக்கொண்ட பிறகு பள்ளியில் இருந்த ஆசிரியர்களை தன்னுடைய அறைக்கு அழைத்து “நாளைய நாளில் நம்முடைய பள்ளியில் குழு நிழற்படம் எடுக்கப்போகிறோம். அதனால் ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நாளைய நாளில் பள்ளிக்கு வருகின்றபோது ஐம்பது உரூபாய் கொண்டுவரச் சொல்லுங்கள்” என்றார் அவர். ஆசிரியர்களும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு தங்களுடைய வகுப்பிற்குப் போனார்கள். அதில் ஓர் ஆசிரியை தன்னுடைய மாணவர்களிடம், “மாணவச் செல்வங்களே! நாளைய நாளில் நம்முடைய பள்ளியில் குழு நிழற்படம் எடுக்கப் போகிறார்களார்களாம். அதனால் நீங்கள் நாளைக்குப் பள்ளிக்கு வருகின்றபோது 75 உரூபாய் கொண்டு வாருங்கள்” என்றார். மாணவர்களும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனார்கள். அந்த ஆசிரியையின் வகுப்பில் அறுபது மாணவ மாணவியர் படித்துவந்தனர். ஒரு மாணவர்க்கு இருப்பத்தைந்து உரூபாய் என்றால், 60 மாணவர்கட்கு இருபத்தைந்து உரூபாய் என்றால், ஆயிரத்து ஐந்நூறு உரூபாய் வருகின்றது. இதில் ஒரு நல்ல பட்டுப் புடவை வாங்கிவிடலாம் என்று முடிவுசெய்துகொண்டார்.

அந்த ஆசிரியையின் வகுப்பைச் சார்ந்த மாணவன் ஒருவன் வீட்டிற்கு வந்து, “அம்மா! எங்களுடைய பள்ளியில் நாளைக்கு குழு நிகழ்படம் எடுக்கப்போகிறார்களாம். அதனால் நூறு உரூபாய் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “என்னது ஒரு நிழற்படத்திற்கு நூறு உரூபாயா!” என்ற ஆச்சரியப்பட்ட அவனுடைய தாய், “சரி. அப்பா வந்ததும் வாங்கித் தருகிறேன். நீ கவலைப்படாமல் இரு” என்றார். மாலை வேளையில் அந்த மாணவனுடைய அப்பா வந்தார். அவரிடம் அவனுடைய தாய், “என்னங்க! நம்முடைய பையனுடைய பள்ளியில் நாளைக்கு குழு நிழற்படம் எடுக்கப்போகிரார்களாய். அதனால் இருநூறு ரூபாய் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள்” என்றார். “ஒரு நிகழ்படத்திற்கு இருநூறு உரூபாயா? இதென்ன பகல் கொள்ளையாக இருக்கிறது! சரி சட்டைப் பையில் இருநூறு உரூபாய் இருக்கிறது. அதை எடுத்து மகனிடம் கொடு. நான் அந்த இருநூறு உரூபாயை எவனிடமாவது ஆட்டையைப் போட்டுச் சம்பாத்திக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போனான் அந்த மாணவனுடைய தந்தை.

எங்கும் எதிலும் போலிகள் நிறைந்துவிட்டார்கள் என்பதற்குச் சான்றாக இருப்பதுதான் இந்த நிகழ்வு. இன்றைய நற்செய்தி வாசகம் போலிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

போலிகளை/ போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும்

இயேசுவின் காலத்திலும் சரி, நாம் வாழும் காலத்திலும் சரி, போலிகட்கும் போலி இறைவாக்கினர்கட்கும் பஞ்சமே இல்லை. இவர்கள் வெளித்தோற்றத்திற்கு நல்லவர்களைப் போன்று, இறைவாக்கினர்களைப் போன்று இருந்துகொண்டு உள்ளுக்குள் பசுத்தோல் போர்த்தி புலிகளாய், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாய் வலம்வந்தார்கள். இன்றைக்கும் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டால்தான், இயேசு சொல்வதுபோல், இவர்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கமுடியும்.

போலி இறைவாக்கினர்களை எப்படி இனங்கண்டு கொள்வது?

போலி இறைவாக்கினர்களை இனங்கண்டு கொள்வதற்கு நமக்கிருக்கும் ஒரே வழி அவர்களுடைய செயல்பாடுகள்தான். போலி இறைவாக்கினர்கள் இலாபத்தை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள். அதற்காக அவர்கள் எதையும் செய்வார்கள்.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக்கொள்ள, சாதாரண மக்களைப் பாவிகள் என்று முத்திரைகள் குத்தினார்கள்; அவர்கள்மீது சுமக்க முடியாத பளுவான சுமைகளை இறக்கி வைத்தார்கள் (மத் 23:4). இவ்வாறு அவர்களின் செயல்களே அவர்கள் போலி இறைவாக்கினர்கள் என்பதைப் பறைசாற்றின. இப்படிக் கடவுட்கு உரியதை நாடாமல், தங்களுடைய சொந்த விரும்பு வெறுப்புகளை நாடியதால், அவர்களை இயேசு போலி இறைவாக்கினர்கள் என்றும் அப்படிப்பட்டோர் நல்ல கனிகளை அல்லாமல், கெட்ட கனிகளைக் கொடுப்பதால் அழிக்கப்படுவார்கள் என்றும் கூறுகின்றார்.

சிந்தனை

‘ஒவ்வொரு மரமும் அதன் கனியாலே அறியப்படும்’ (லூக் 6: 44) என்பார் இயேசு. இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் நல்ல கனிகளைத் தந்து, நல்ல இறைவாக்கினர்கள் ஆவோம். நம்மிடம் இருக்கும் போலித்தனங்களைக் களைந்துவிட்டு, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.