ஜுன் 25 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.

பிறர் உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென விரும்புகிறீர்களோ அவற்றை மற்றவர்களுக்குச் செய்யுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 6,12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும். மேலும் உங்கள் முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்; எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.

இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரை.

“உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறியவேண்டாம்”

அறுபது வயதிருக்கும் தாமஸ் மாலைநேரத்தில் தன்னுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஒருநாள் அவர் தன்னுடைய நடைபயிற்சியை மேற்கொண்டிருக்கும்போது தன்னுடைய கல்லூரி நண்பர் ஜானைச் சந்தித்தார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகட்குப் பிறகு சந்தித்துக்கொண்ட அவர்கள் இருவர் மத்தியிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்துகொண்டு ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துகொண்டும் கல்லூரிக் காலங்களில் நடந்த இனிமையான தருணங்களையும் நினைவுகூர்ந்துகொண்டும் இருந்தார்கள். இடையிடையே ஜான் தன்னுடைய சட்டைப் பையிலிருந்து சிகரெட்டை எடுப்பதும் புகைப்பதுமாக இருந்தார். இதைப் பார்த்த தாமஸிற்கு ஏதோபோல் இருந்தது. உடனே தாமஸ் ஜானிடம், “ஒருநாளைக்கு நீ எத்தனை சிகரெட் குடிப்பாய்?” என்றார். “எப்படியும் மூன்று சிகரெட் பாக்கெட் குடித்துவிடுவேன்” என்றார் ஜான். உடனே தாமஸ் அவரிடம் “மூன்று சிகரெட் பாக்கெட்டா… ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை எவ்வளவு?” என்றார். “ஒரு சிகரெட் பாக்கெட்டின் விலை நாற்பது ரூபாய் என்றார்” ஜான்.

தாமஸ் அவரை விடவில்லை. “உன்னிடம் சிகரெட் பிடிக்கும் வழக்கம் எத்தனை ஆண்டுகளாக இருக்கின்றன?” என்றார். “எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளாக இருக்கின்றது” என்றார் ஜான். தாமஸ் உடனே கணக்குப் போடத் தொடங்கினார் “ஒருநாளைக்கு 120 உரூபாய் என்றால், ஓர் ஆண்டிற்கு 1,31,400 உரூபாய், அப்படியானால் நாற்பது ஆண்டுகட்கு கிட்டத்தட்ட நாற்பது லட்சம் உரூபாய்க்கு மேல் வருகின்றது. இந்த நாற்பது ஆண்டுகளும் சிகரெட் குடிக்காமல் இருந்திருந்தால் ஓர் ஆடிக் காரே வாங்கியிருக்கலாமே.”

தாமஸ் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜான் அவரிடம், “உனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கின்றதா?” என்றார். அவர், “இல்லை” என்று சொன்னதும், ஜான் அவரிடம், “நாற்பது ஆண்டுகளாக சிகரெட் பிடிக்காமல் நாற்பது லட்சத்திற்கும் மேல் பணத்தை மிச்சம் பிடித்து வைத்திருப்பாய்தானே! எங்க உன் ஆடிக் கார்?” ஜானிடமிருந்து இப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராத தாமஸ் ‘போயும் போயும் இவனுக்கு அறிவுரை கூறினோமே… என் புத்தியைச் செருப்பால் அடிக்கவேண்டும்’ என்று தன்னை நொந்துகொண்டார்.

நாம் அறிவுரை கூறுவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், யார்க்கு, எப்படிப்பட்ட அறிவுரை கூறவேண்டும் என்பதில் மிகவும் கவனம் தேவை. அதைதான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இத்தகைய செய்தியைத்தான் தாங்கிவருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இறைவார்த்தையை அறிவிப்பதில் கவனம் தேவை.

நற்செய்தியில் இயேசு, “தூய்மையானது எதையும் நாய்கட்குப் கொடுக்கவேண்டாம்… முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டும்” என்கின்றார். இங்கு குறிப்பிடுகின்ற ‘தூய்மையானது’, ‘முத்துகள்’ என்பதை இறைவார்த்தை என்று எடுத்துக் கொள்ளலாம். இக்கருத்தினை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு, பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய இரண்டாவது மடல், 4:7 ல் கூறுகின்ற வார்த்தைகளை இணைத்துப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இங்கு பவுல் கூறுவார், “இந்த செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கின்றோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுட்கே உரியது.” ( 2 கொரி 4:7). உண்மையில் கடவுளின் வார்த்தை ஈடு இணையற்ற வல்லமை கொண்டது. அத்தகைய இறைவார்த்தையை நாம் அறிவிக்கின்றபோது நிறையக் கவனம் தேவை. ஏனென்றால், இறைவார்த்தையின் மதிப்பினை உணராதவர்கட்கு அறிவிப்பதால், எந்தவொரு பயனும் கிடைக்கப்போவதில்லை.

இறைவார்த்தையை எடுத்துரைப்பதில் கவனமாக இருந்த இயேசு.

இயேசு தன் சீடர்களிடம், ‘நீங்கள் உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவியுங்கள்” (மத் 16:15) என்று சொன்னாலும், அவர் இறைவார்த்தையை யார்க்கு அறிவிக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். குறிப்பாக அவர் ஏரோதிடம் எதையும் அறிவிக்கவில்லை, அவன் எழுப்பிய பல கேள்விகட்கும் அவர் பதில் சொல்லவில்லை (லூக் 23:9). ஒருசில இடங்களில் தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் அவர் இதே பாணியைத்தான் கடைப்பிடித்தார் (மத் 21: 23-27). பவுலும் கூட இதே பாணியைத்தான் கடைப்பிடித்தார் என்பதை திருத்தூதர் பணிகள் நூல் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது (திப 13: 44-49).

ஆகையால், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை யாரிடம் அறிவிக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பது இன்றியமையாததாகும்.

சிந்தனை.

‘இகழ்வாரைக் கடிந்துகொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்துகொண்டால், அவர்கள் உன்னிடம் அன்பு கொள்வார்கள்’ (நீமொ 9:8) என்கின்றது நீதிமொழிகள் நூல். ஆகவே, நாம் இறைவார்த்தையை எடுத்துரைக்கின்றபோதும் அறிவுரை கூறுகின்றபோதும் கவனமாக நடந்துகொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.