இறைவன் தேடிக்கொண்டிருக்கும் இதயங்கள் நாம்

அன்னை மரியாவைப்போல், இறைவனில் முழுமையாக நம்பிக்கைக் கொண்டிருக்கும் இதயங்களை, இறைவன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்’  என இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இத்திங்களன்று மாலை 4 மணி வரை, மேலும் 5 டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.

தான் வெளியிட்டுள்ள GAUDETE ET EXSULTATE என்ற திருத்தூது அறிவுரையையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த டுவிட்டர் செய்திகளுள் முதலாவது, ‘மகிழ்ந்து பேருவுவகை கொள்ளுங்கள், என்ற புனிதத்துவத்திற்கான அழைப்பை மீண்டும் ஒருமுறை முன்வைக்க ஆவல் கொள்கின்றேன்’ என உரைக்கிறது.

இரண்டாவது டுவிட்டர், ‘கடவுள் அனைவரையும், உங்களையும் சேர்த்து, புனிதத்துவத்திற்கு அழைக்கிறார்’ என்பதாகவும், மூன்றாவது டுவிட்டர், ‘அர்ப்பண வாழ்வுக்கு நீவிர் அழைக்கப்பட்டிருந்தால், அதற்கு இயைந்த வகையில் வாழ்ந்து புனிதத்தில் வாழும்படியாக’  எனவும், நான்காவது டுவிட்டரில், ‘நீங்கள் திருமணமானவர் எனில், இறைவன் திருஅவை மீது காட்டும் அன்பு மற்றும் அக்கறைபோல், உங்கள் வாழ்க்கைத் துணையிடம் காட்டி புனிதத்தில் வாழுங்கள்’ எனவும், ஐந்தாவது டுவிட்டரில், ‘வாழ்வதற்காக பணிச்செய்து கொண்டிருப்பவர் எனில், உங்கள் சகோதர சகோதரிகளின் பணிக்கென உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி, அதன் வழியாக புனிதமடைய’ என, திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள் அழைப்பு விடுக்கின்றன.

மேலும், இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இரக்கத்தின் ஞாயிறையொட்டி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘இறைவனின் நன்மைத்தனத்தின் கருவிகளாக நாம் மாறும்படியாக, இறைவன் தன் இரக்கத்தால் நம்மைப் பொதிந்து, இயேசு கிறிஸ்துவில் நம்மை அரவணைக்கிறார்’ என அதில் எழுதியுள்ளார்

வத்திக்கான்

Comments are closed.