ஜுன் 23 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்.

அனைவரும் வயிறார உண்டனர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 11b-17

அக்காலத்தில் இயேசு மக்களை வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார்.

பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர்.

இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார். அவர்கள், “எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்” என்றார்கள்.

ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர்.

இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, “இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்” என்றார்.

அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரை.

நீதான் எனது கடவுள்!

2018- ம் ஆண்டு சாகித்ய அகடமி விருதுபெற்ற தமிழின் தலைசிறந்த எழுத்தாளரில் ஒருவரான எஸ்.ராவின் ‘சிறிது வெளிச்சம்’ என்ற நூலில் இடம்பெறும் நிகழ்வு இது.

இரண்டாம் உலகப்போர் மிகத்தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், இரஷ்ய நாட்டுப்படை ஜெர்மனியின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தத் தொடங்குகின்றது. இதில் எப்படியோ இரஷ்ய நாட்டைச் சார்ந்த ஒரு படைவீரனுடைய கால்கள் உடைந்துபோயின. இதனால் அவனுடைய படையில் இருந்த படைவீரர்கள் எல்லாம் அவனைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாகள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அந்தப் படைவீரன் ஒரு கையில் துப்பாக்கியை வைத்துகொண்டு, மறு கையால் தவழ்ந்துகொண்டே வந்த வழியாகப் போனான்.

இடையில் அவனுக்கு அகோரமாகப் பசி ஏற்பட்டது. ‘இந்த நட்ட நடுஇரவில் யாரிடம் போய் உணவு கேட்பது?’ என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அப்பொழுது சற்றுத் தொலைவில் தனியாக ஒருவீடு இருப்பது தெரிந்தது. உடனே அவன் தவழ்ந்துகொண்டே அந்த வீட்டின் கதவைப் போய்த்தட்டினான். உடனே அவ்வீட்டிலிருந்து தனியாளாக இருந்த ஒரு ஜென்மானியப் பெண்மணி வெளியே வந்து நின்றார். அவரிடம் படைவீரன், “எனக்கு இப்போது சாப்பிட உணவு வேண்டும்” என்றான். “சாப்பாடெல்லாம் தீர்ந்துபோய்விட்டது” என்று அவர் சொல்ல, கோபத்தில் படைவீரன் தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியை அந்தப் பெண்மணியின் முன்பாக நிறுத்தி, “இப்போது நீ உணவுதரப்போகிறாயா? இல்லை உன்னை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தவா?” என்று மிரட்டினான்.

உடனே அவர் பதறியடித்துக்கொண்டு, தன்னுடைய வீட்டில் இருந்த தானியத்தைச் சூடாக்கிக் காஞ்சி தயாரித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார். இதைப் பார்த்துவிட்டு அவனால் அழுகையை அடக்கமுடியவில்லை. எனவே, அந்தப் பெண்மணி அவனுக்கு ஒரு குழந்தைக்கு உணவூட்டுவதைப் போன்று உணவூட்டினார். அப்பொழுது அந்தப் படைவீரன், “அம்மா! நான் பசியோடு அலைந்துபோது ‘கடவுள் என்ற ஒருவர் உலகில் இல்லவே இல்லை’ என்றுதான் கோபத்தோடு கத்தினேன். இப்பொழுது கடவுள் இருப்பதை உணர்கின்றேன். நீதான் எனது கடவுள்” என்று அவரைக் கையெடுத்துக் குப்பிட்டான்.

பசியில் இருக்கக்கூடிய ஒருவர்க்கு உணவு கொடுக்கின்ற ஒவ்வொருவருமே கடவுள்தான் என்ற உண்மையை இந்த நிகழ்வானது மிக அருமையாக எடுத்துக்கூறுகின்றது. நம் ஆண்டவராகிய இயேசு நமக்கு வயிற்றுக்கு மட்டுமல்ல, திருவுடலாலும் திருஇரத்தத்தாலும் ஆன்மாவிற்கும் உணவளிக்கின்றார். அதைத்தான் இன்று நாம் இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நல்ல நாளில் இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

வார்த்தை என்னும் உணவு.

இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட இறைவார்த்தை மூன்றுவிதமான உணவுகளை எடுத்துக்கூறுகின்றன. அவை என்னென்ன என்பதையும் இயேசு தருகின்ற நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவர் என்ன செய்யவேண்டும் என்பதையும் சிந்தித்துப் பார்ப்போம்.

ன்றைய இறைவார்த்தையில் இடம்பெறும் முதலாவது உணவு வார்த்தை என்னும் உணவாகும். இயேசுவும் அவருடைய சீடர்களும் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்க முயன்றபோது, மக்கள் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு, திரளான எண்ணிக்கையில் அவரிடம் வருகின்றார்கள். அப்படி வந்தவர்களை இயேசு, ‘தனக்குத் தொந்தரவாக இருக்கின்றது’ என்று விரட்டிவிடவில்லை. மாறாக அவர்கள்மீது பரிவுகொண்டு (மத் 14:14) அவர்கட்க்கு இறையாட்சியைக் குறித்துப் போதிக்கின்றார். மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்த நோயாளிகளைக் குணப்படுத்துகின்றார். இயேசுவுக்கு நன்றாக தெரிந்திருந்தது, ‘கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் மனிதர் உயிர்வாழ்வர்’ (இச 8:3) என்ற உண்மை. அதனால்தான் அவர் வாழ்வளிக்கும் இறைவார்த்தையை அவர்கட்க்குப் போதிக்து அவர்களது செவிக்கு உணவளிக்கின்றார்.

அப்பம் என்னும் உணவு.

இயேசு தன்னை நம்பி வந்த மக்களிடம் இறையட்சியைக் குறித்த இறைவார்த்தையை மட்டும் போதித்துவிட்டு, அவர்களை அப்படியே அனுப்பிவிடவில்லை. மாறாக, அவர்களுடைய வயிற்றுக்கு உணவுகொடுக்கின்றார். இறைவார்த்தையை அல்லது சக்கரை தடவிய வார்த்தைகளைப் பேசிவிட்டு மக்களைப் பசியோடு அனுப்புகிற வழக்கம் தொடக்க காலக்கட்டத்தில் இருந்தது (யாக் 2:16). ஆண்டவர் இயேசு அப்படி நடந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கட்க்கு உணவு கொடுத்து அனுப்புகின்றார். இயேசு மக்கட்க்கு எப்படி உணவளித்தார் என்பதைக் குறித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

மாலை வெளியானதும் பன்னிரு சீடர்களும் இயேசுவிடம் வந்து, இவர்களை பக்கத்திலுள்ள ஊர்களுக்கு உணவு வாங்கிக்கொள்ள அனுப்பிவிடும் என்று சொல்லும்போது இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்கட்க்கு உணவு கொடுங்கள்” என்கின்றார். அப்பொழுது அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவனிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே இருக்கின்றன” என்று சொல்ல, இயேசு மக்களைப் பந்தியில் அமரச் சொல்லிவிட்டு அப்பத்தையும் மீனையும் வாங்கி, வானத்தை அண்ணார்ந்து பார்த்து, அவற்றின்மீது ஆசி கூற, அவை பலுகிப் பெருகச் செய்கின்றார்.

இயேசு அப்பங்களைப் பலுகச் செய்த அல்லது ஐயாயிரம் பேர்க்கு உணவளித்த இந்த நிகழ்வு, நாம் நம்மிடம் இருப்பதை இறைவனிடம் கொடுக்கத் தயாரானால், இறைவன் அவற்றைக் கொண்டு, மிகுதியாக உணவளிப்பார் என்று செய்தியை மிகத் தெளிவாகச் எடுத்துச் சொல்கின்றது. ஆதலால், இறைவன் எல்லார்க்கும் உணவளிக்கவேண்டும் (திபா 145: 15) என்றால், நாம் நம்மிடம் இருப்பதை இறைவனிடம்/பிறரிடம் தரத் தயாராகவேண்டும்

திருவுடல் திருஇரத்தம் என்னும் (வாழ்வளிக்கும்) உணவு.

இன்றைய இறைவார்த்தையில் இடம்பெறும் மூன்றாவது உணவும் இன்றைய நாள் விழாவின் மையமுமான இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் எப்படி வாழ்வாளிக்கும் உணவாக இருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம். தூய பவுல் கொரிந்தியர்க்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், இயேசு தன்னுடலை ‘இது உங்களுக்கான உணவு’ என்றும் இரத்தைத்தை ‘என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை என்றும் கூறுவார்.

இயேசு இதை அப்பங்களைப் பலுகச் செய்த மறுநாளில் சொன்னபோது (யோவா 6: 22-59), சீடர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமலும் அவருடைய வார்த்தையில் நம்பிக்கைக் கொள்ளாமலும் அவரைவிட்டுப் பிரிந்துபோவார்கள். அதனால் அவர்கள் நிலைவாழ்வை இழந்தார்கள். நாம் அவர்களைப் போன்று இல்லாமல் இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு, அவருடைய திருவுடலையும் திருஇரத்தத்தையும் நம்பிக்கையோடு உட்கொண்டு அதன்படி வாழ்ந்தால், நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி. ஆதலால், இயேசு தருகின்ற நிலைவாழ்வைப் பெற வாழ்வளிக்கும் உணவாம் இயேசுவின் திருவுடலையும் திருஇரத்தத்தையும் நம்பிக்கையோடு உட்கொண்டு, அதன்படி வாழமுற்படுவோம்.

சிந்தனை.

‘கடவுள் மானிடர்க்கு மிகப்பெரிய கொடையைக் கொடுக்க நினைத்தார். அதனால் அவர் நற்கருணையை கொடுத்தார்’ என்பார் புனித ஜான் மரிய வியான்னி. ஆகவே, கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரும் கொடையான நற்கருணையை (இயேசுவின் திருவுடல் திருஇரத்தைத்தை) நம்பிக்கையோடு உட்கொண்டு, அது குறித்துக் காட்டும் விழுமியங்களின் படி வாழமுற்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.