இளையோரே, திருஅவைக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள்
இளையோர் மாமன்றத் தந்தையர் மிகவும் விரும்பியது போன்று, மேய்ப்புப்பணியில் மனமாற்றம் கொண்டுவருவதில் இளையோர் முதன்மைக் கருவிகளாக உள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று ஓர் இளையோர் குழுவிடம் கூறினார்.
பொதுநிலையினர், குடும்பம், மற்றும் வாழ்வு திருப்பீட அவை ஏற்பாடு செய்த 11வது உலகளாவிய இளையோர் கூட்டத்தில், 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கலந்துகொண்ட ஏறத்தாழ 350 பிரதிநிதிகளை, ஜூன் 22, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவுஸ் சீடர்களின் அனுபவத்தை மையப்படுத்தி உரையாற்றினார்.
இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா சமயத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுவது இறைபராமரிப்பு என்றே சொல்ல வேண்டும் எனவும், கிறிஸ்துவின் பிரசன்னத்தில் எம்மாவுஸ் சீடர்களின் வாழ்வு சுடர்விட்டது போன்று, இளையோரும், இன்று, இருளான இரவில், ஒளியாகத் திகழ அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் திருத்தந்தை கூறினார்.
நாம் மற்றவரை எந்த அளவுக்கு ஆண்டவரிடம் கொண்டு வருகிறோமோ, அந்த அளவுக்கு, நம் வாழ்வில் அவரின் பிரசன்னத்தை உணர்வோம் என்றும், கடவுளின் இன்றையப் பொழுது நீங்களே, திருஅவையின் இன்றையப் பொழுதும் நீங்களே என்றும், திருஅவைக்கு நீங்கள் தேவைப்படுகின்றீர்கள் என்றும், இளையோரிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
2022ல் லிஸ்பனில் உலக இளையோர் நாள்
“மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார் (லூக்.1,39 )”என்ற தலைப்பில், 2022ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு லிஸ்பனில், உலக இளையோர் நாள் சிறப்பிக்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.
பானமாவில் நடைபெற்ற உலக இளையோர் நாள் பற்றி நினைவுபடுத்திய திருத்தந்தை, அடுத்த உலக இளையோர் நாளுக்குத் தயாரிப்பாக, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு (லூக்.7,14)”, “எழுந்து நிமிர்ந்து நில். நீ என்னைக் கண்டது பற்றி சான்று பகர வேண்டும் (தி.பணி.26,16)” ஆகிய இரு விவிலியப் பகுதிகளைத் தியானிக்குமாறு இளையோரைக் கேட்டுக்கொண்டார்.
லிஸ்பன் இளையோர் நாளுக்கும், இளையோர் பற்றிய உலக ஆயர் மாமன்றத்திற்குப்பின் தொடரும் பயணத்திற்கும் நல்ல தொடர்பு உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளின் உலக இளையோர் நாள்களின் தயாரிப்புகளுக்கு, இந்த விவிலியப் பகுதிகள் உதவும் என்றும், இவை, 2022ம் ஆண்டின் லிஸ்பன் இளையோர் நாள் தலைப்புக்கு இட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தார்.
ஆண்டவர் உங்களுக்கென தயார் செய்துள்ள பாதைகளை, எழுந்து பின்தொடர உந்தித்தள்ளும் கடவுளின் குரலை அணைத்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அன்னை மரியாவைப் போன்று, அவரோடு ஒன்றித்து, உங்களின் அன்பையும் மகிழ்வையும் மற்றவர்க்கு ஒவ்வொரு நாளும் வழங்குங்கள் என்று, இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.
Comments are closed.