ஜுன் 22 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்

நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 24-34

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்: உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?

வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதும் இல்லை; அறுப்பதும் இல்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதும் இல்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா!

கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை. ஆனால் சாலமோன்கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப்போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணி செய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாய்ச் செய்ய மாட்டாரா? ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். ஏனெனில் பிற இனத்தவரே இவற்றை எல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும்.

ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரை.

கடவுளைப் பற்றிக்கொண்டு கவலையை விட்டொழி.

குரு ஒருவர் இருந்தார். அவர்க்கு ஏராளமான சீடர்கள் இருந்தார்கள். ஒருநாள் குரு தன் சீடர்கட்குப் போதித்துக் கொண்டிருக்கும்பொழுது சீடர் ஒருவர் எழுந்து, “குருவே! எனக்கு அடிக்கடி மனக்கவலைகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றிலிருந்து என்னால் மீளவும் முடியவில்லை. அந்தக் கவலைகளிலிருந்து மீள்வதற்கு எனக்கொரு வழி சொல்லுங்கள்” என்றார். உடனே குரு அவரிடம், உனக்கு ஏற்படுகின்ற மனக்கவலையிலிருந்து மீள்வதற்கான வழியை ஒரு கதை வழியாகச் சொல்கிறேன், கேள்” என்று சொல்லிவிட்டுக் கதையைத் தொடர்ந்தார்.

ஒரு காட்டில் குரங்குக் கூட்டம் ஒன்று இருந்தது. அக்குரங்குக் கூட்டத்தில் ஒரு சுட்டிக் குரங்கும் இருந்தது. ஒருநாள் அது காட்டில் தனியாக அலைந்துகொண்டிருந்தபோது, பாம்பு ஒன்றைக் கண்டது. உடனே அது அந்தப் பாம்பை தன் கையில் பிடித்துக்கொண்டு விளையாடத் தொடங்கியது. சிறிதுநேரத்திற்குப் பிறகுதான் தெரிந்தது, அது சாதாரண பாம்பு இல்லை, விஷப்பாம்பு என்று. எனவே, அது அந்தப் பாம்பை கீழே விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்று முடிவுசெய்தது. அதேநேரத்தில் அதற்கு, ‘இந்தப் பாம்பைக் கீழே விட்டால், அது நம்மைக் கொத்திவிடும்’ என்ற பயம் அதைத் தொற்றிக்கொண்டது. இதனால் அது அந்தப் பாம்பைத் தன் கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்படியே இருந்தது.

அந்நேரத்தில் அந்த சுட்டிக் குரங்கினுடைய கூட்டத்தைச் சார்ந்த ஏனைய பெரிய குரங்குகளெல்லாம் அந்த வழியாக வந்தன. அவற்றிடம் அது உதவி கேட்க, அவைகளோ, “எங்களால் உன்னைக் காப்பாற்ற முடியாது, அப்படியே நாங்கள் உன்னைக் காப்பற்றினோமெனில், அது எங்களுடைய உயிர்க்குத் தான் ஆபத்து” என்று சொல்லிவிட்டுக் கடந்துபோயின. அவை அங்கிருந்து போகிறபோதே, “இவனுக்கு இதுவும் இன்னமும் வேண்டும்” என்று சொல்லிவிட்டுக் கடந்துபோயின.

‘தன்னுடைய இனத்தைச் சார்ந்த குரங்குகளே தன்னைக் காப்பாற்றவில்லையே’ என்று அந்த சுட்டிக் குரங்கிற்குப் பெரிய வருத்தமாக இருந்தது. இருந்தாலும் பிடியைத் தளர்த்திவிட்டால் பாம்பு தன்னைக் கொத்திவிடும் என்ற பயத்தில் இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டது. நேரம் ஆக ஆக, அது மிகவும் களைப்படையத் தொடங்கியது. நா வேறு வறண்டுபோனது. இந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு ஞானி வந்தார். அவரிடம் உதவிகேட்கலாம் என்று அந்த சுட்டிக்குரங்கு ஞானியைப் பார்த்துக் கையசைத்தது. ஞானியும் குரங்கு தன்னை நோக்கிக் கையசைப்பதைப் பார்த்துவிட்டு அதனருகே வந்தார்.

“ஐயா! என்னுடைய கையிலுள்ள இந்தப் பாம்பைத் தெரியாமல் பிடித்துவிட்டேன். இப்பொழுது இதிலிருந்து தப்பிப்பதற்கு எனக்கு வழிதெரியவில்லை. உங்கட்கு ஏதாவது வழி தெரிந்தால், அதைச் சொல்லுங்கள்” என்று அந்த சுட்டிக்குரங்கு மிகவும் பாவமாகக் கேட்டது. உடனே ஞானி அந்தக் குரங்கிடம், “இந்தப் பாம்பிடமிருந்து தப்பிக்கவேண்டும் என்றால், அதைக் கீழே விட்டுவிடு” என்றார். “பாம்பைக் கையிலிருந்து கீழே விட்டுவிட்டால், அது என்னைக் கொத்திவிடுமே!. அப்பொழுது நான் என்ன செய்வது? என்று கேட்டது குரங்கு. “ஐயோ! அந்தப் பாம்பு செத்துப் பலமணிநேரம் ஆகிவிட்டது. அதனால் பயப்படாமல் கீழேவிட்டுவிடு” என்றார். ஞானி. அவர் இவ்வாறு சொன்னபின்புதான் குரங்கு தன் கையில் இருந்த பாம்பை உற்றுக் கவனித்தது. அப்பொழுதுதான் பாம்பு செத்து பலமணிநேரம் ஆகிவிட்டது என்ற உண்மை அதற்கு விளங்கியது.

இந்த நிகழ்வைச் சொல்லிவிட்டு குரு தன்னுடைய சீடரிடம் சொன்னார், “எப்படி அந்தக் குரங்கு தன் கையில் பிடித்துவைத்திருந்த பாம்பை விட்டுவிட்டு உயிர் பயத்திலிருந்து மீண்டதோ, அதுபோன்று உன்னுடைய மனக்கவலையிலிருந்து மீளவேண்டும் என்றால், அதை அப்படியே வைத்திருக்காமல், உதறித் தள்ளிவிடுவதே சிறந்தது.”

கவலையிலிருந்து மீள்வதற்கு மிகச் சிறந்த வழி, அதை மனத்திற்குள் வைத்துக்கொண்டு வருந்திக்கொண்டிருக்காமல், உதறித்தள்ளுவதே சிறந்தது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

கவலைகள் மறைய இயேசு சொல்லும் மூன்று முத்தான வழி.

நற்செய்தியில் இயேசு மனிதர்க்கு வரும் கவலைகளிலிருந்து விடுபட மூன்று முத்தான வழிகளைச் சொல்கின்றார். அதில் முதலாவது வழி, கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைப்பது. வானத்துப் பறவைகள், காட்டு மலர்செடிகள் கடவுள்மீது நம்பிக்கையோடு இருப்பதால் அவை கவலையில்லாமல், மகிழ்ச்சியாக இருக்கின்றன. மனிதர்களாகிய நாமும் கடவுளின் பாராமரிப்பில் நம்பிக்கை வைத்தால் எதைக் குறித்தும் கவலைப்படத் தேவையில்லை. கவலையிலிருந்து மீள்வதற்கு இயேசு சொல்லும் இரண்டாவது வழி, கடவுட்கு ஏற்புடைய காரியங்களை முதலில் நாடுவது. எவர் கடவுட்கு உகந்த காரியங்களை முதலில் நாடுகின்றார்களோ, அவர்களைக் கடவுள் பார்த்துக் கொள்வார். அதனால் அவர்கள் எதற்கும் கவலைப்படவேண்டிய தேவையில்லை.

கவலையிலிருந்து மீள இயேசு சொல்லும் மூன்றாவது வழி, நிகழ்காலத்தில் வாழ்வது ஆகும். பலர் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்துக் கவலைப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழலில் நிகழ்காலத்தில் வாழ்வதன் மூலம் கவலையிலிருந்து மீண்டுவிடலாம் என்று இயேசு மிகவும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார். நாம் நிகழ்காலத்தில் வாழவேண்டும் என்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அது என்னவெனில், நம்முடைய கடவுள் வாழ்வோரின் கடவுள் (விப 3:14). ஆகவே, நாம் நிகழ்காலத்தில் வாழக் கற்றுக்கொண்டோம் என்றால், கவலையிலிருந்து எளிதாக மீண்டுவிடலாம் என்பது உறுதி.

சிந்தனை.

‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் உங்கள்மேல் கவலையாக இருக்கிறார்’ (1பேது 5:7) என்பார் பேதுரு. ஆகையால், ஆண்டவர் நமக்குத் துணையிருக்கின்றார், நம்மைப் பராமரிக்கின்றார் என்ற நம்பிக்கையில் அவரிடம் நம்முடைய கவலைகளை இறக்கிவைத்துவிட்டு, அவர்க்கு உகந்ததை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.