புனிதத்துவத்தில் வாழ உதவும் வழிகள் விவிலியத்திலேயே உள்ளன‌

இன்றைய உலகில் புனிதத்துவத்திற்கான அழைப்பு குறித்து GAUDETE ET EXSULTATE என்ற தலைப்பில், ஒரு திருத்தூது அறிவுரை ஏட்டினை, இத்திங்களன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

‘மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்’ என்று இயேசு விடுக்கும் அழைப்பு, அவருக்காக அவமானப்படுத்தப்பட்டு, துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்காக விடுக்கப்பட்டுள்ளது  என தன் ஏட்டின் துவக்கத்தில் கூறியுள்ள திருத்தந்தை, இன்றைய உலகில் புனிதத்துவத்திற்கான அழைப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரையே இத்திருத்தூது அறிவுரையின் முக்கிய நோக்கம் என அதில் எழுதியுள்ளார்.

புனிதத்துவத்திற்கான அழைப்பு என்று தலைப்பிடப்பட்டுள்ள முதல் பிரிவில்,  நம்மோடு உடன் நடந்து நமக்கு ஊக்கமூட்டிவரும் புனிதர்கள், நம் அருகாமையில் வாழும் புனிதர்கள், ஆகியோரைக் குறித்து கூறியுள்ள திருத்தந்தை, நாமும் உயிரூட்டம் உடையவர்களாக, மனிதாபிமானம் மிக்கவர்களாக வாழ்ந்து, புனிதத்துவத்தில் நுழைய இறைவன் அழைப்பு விடுக்கிறார் என அதில் கூறியுள்ளார்.

இரண்டாவது பிரிவில், புனிதத்துவத்தின் எதிர் சக்திகள் எவை என்பதை பட்டியலிட்டுள்ள திருத்தந்தை, கடவுள் நம்பிக்கையின்மை, தாழ்ச்ச்சி மனப்பான்மை இல்லாமை ஆகியவை குறித்து எடுத்துரைத்துள்ளார்.

இயேசுவின் ஒளியில் புனிதத்துவத்தைக் கண்டுகொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கும் மூன்றாவது பிரிவு, இயேசுவின் மலைப்பொழிவை முன்வைத்து,  கிறிஸ்தவ மதிப்பீடுகள் குறித்து விவரிக்கிறது.

திருத்தந்தை வழங்கியுள்ள திருத்தூது அறிவுரையின் நான்காம் பிரிவு, இன்றைய உலகில் புனிதத்துவத்தின் அறிகுறிகள் குறித்து விவரிக்கிறது. எத்தகையப் பண்புகள், புனிதத்துவத்தை எடுத்துரைக்கின்றன என்பதைக் கூறும் இப்பிரிவைத் தொடர்ந்துவரும் ஐந்தாவது பிரிவு, தீயோனுக்கு எதிரான ஆன்மீகப் போராட்டம், விழித்திருத்தல், பகுத்துணர்தல் போன்றவை குறித்து விளக்கம் அளிக்கிறது.

Comments are closed.