புலம் பெயர்ந்தோரில், பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள்

புலம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டு 7 கோடியே 8 இலட்சமாக உயர்ந்துள்ளது என்றும், இது, கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அதிகமான எண்ணிக்கை என்றும் புலம் பெயர்ந்தோரின் உயர்மட்ட ஐ.நா. அவையான UNHCR அறிக்கையொன்றை, ஜூன் 19 இப்புதனன்று வெளியிட்டது.

ஜூன் 20, இவ்வியாழனன்று புலம்பெயர்ந்தோர் உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, UNHCR வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், புலம் பெயர்ந்தோரில் பெரும்பான்மையான மக்கள், செல்வம் மிகுந்த மேற்கத்திய நாடுகளைக் காட்டிலும், வளரும் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டின் நிலவரப்படி, ஒவ்வொரு நாளும், 37,000 மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறினர் என்று குறிப்பிடும் UNHCR அறிக்கை, நாட்டிற்குள் புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை, 2018ம் ஆண்டு, 4 கோடியே 13 இலட்சமாக இருந்தது என்றும் கூறியுள்ளது.

புலம் பெயர்ந்து செல்லும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும், இவர்கள் வளமான வாழ்வைத் தேடி தங்கள் இல்லங்களையும் ஊர்களையும் விட்டு வெளியேறவில்லை, மாறாக, சூழ்ந்துள்ள ஆபத்துக்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள புலம் பெயர்ந்து செல்கின்றனர் என்று, UNHCR தலைமை அதிகாரி Filippo Grandi அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments are closed.