அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க

இயக்கத்தில், பயனற்றவர்கள் என்று  யாருமே கிடையாது, இவ்வியக்கத்தில், அனைவரும் நாயகர்களே என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியக்கத்திற்கு வழங்கிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட வறிய குழந்தைகளுக்கு கல்வி வழங்கும் வண்ணம் இயேசு சபையினரால் உருவாக்கப்பட்ட Fe y Alegría அமைப்பைச் சேர்ந்த உயர் மட்டப் பிரதிநிதிகள், ஜூன் 17, இத்திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்த வேளையில், அப்பிரதிநிதிகள் வழியே, இவ்வமைப்பினருக்கு, ஒரு குறுகிய காணொளிச் செய்தியை திருத்தந்தை அனுப்பிவைத்தார்.

Fe y Alegría இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானோர், இளையோர் என்று இச்செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை வருங்காலத்தில் உருவாக்குவது, இளையோரின் கரங்களில் உள்ளது என்று வலியுறுத்தியுள்ளார்.

ஒருவர் ஒருவரிலிருந்து பிரிந்து வாழும் கலாச்சாரத்தை இன்றைய உலகம் வளர்க்கிறது என்பதை இச்செய்தியில் வருத்தத்துடன் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கலாச்சாரத்திற்கு ஒரு சவாலாக, Fe y Alegría இயக்கம் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை உருவாக்குவது முக்கியம் என்று கூறியுள்ளார்.

“நம்பிக்கையும் மகிழ்வும்” என்று பொருள்படும் Fe y Alegría இயக்கத்தை, 1955ம் ஆண்டு, சிலே நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் José María Vélaz அவர்கள், வெனிசுவேலா நாட்டின் கராக்காஸ் நகரில் உருவாக்கினார்.

பத்து ஆண்டுகளில், இவ்வியக்கம், தென் அமெரிக்காவின் ஈக்குவதோர், பானமா, பெரு, பொலிவியா, கொலம்பியா ஆகிய நாடுகளில் பரவி, தற்போது, ஒரு சில ஆப்ரிக்க நாடுகள் உட்பட, உலகின் 19 நாடுகளில் பணியாற்றி வருகிறது

Comments are closed.