ஜுன் 20 : வியாழக்கிழமை. நற்செய்தி வாசகம்.

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போலப் பிதற்ற வேண்டாம்; மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போவதால் தங்கள் வேண்டுதல் கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் அவர்களைப் போல் இருக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.

ஆகவே, நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள். “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்.

மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரை.

நீங்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுங்கள்…

ஒரு நகரில் பக்தியான கிறிஸ்தவக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தில் இருந்த பல நல்ல பழக்கவழக்கங்களுள் இரவுநேர வேண்டுதலும் (Night Prayer) ஒன்று. வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இறைவேண்டல் செய்யத் தொடங்கும் அந்தக் குடும்பம், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தொடங்கி, சிறியவர்கள் வரை எல்லாருக்காகவும் இறைவனிடம் வேண்டும்.

இதை அந்தக் குடும்பத்தில் இருந்த நிலா என்ற ஐந்து வயதுச் சிறுமி கூர்ந்து கவனித்து வந்தாள். நாட்கள் ஆக ஆக அவளாகவே தன்னுடைய அறைக்குள் சென்று, முழந்தாள் படியிட்டுக்கொண்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினாள்: “இயேசுவே! என்னுடைய குடும்பத்தில் உள்ள என் பெற்றோரை நல்ல முறை கவனித்துக்கொள்ளும். ஊரில் இருக்கின்ற என்னுடைய பாட்டி தாத்தாவை நல்லமுறையில் கவனித்துக்கொள்ளும். என் நண்பர்களையும் என்னையும் நல்லமுறையில் கவனித்துக் கொள்ளும்.” இப்படித் தங்களுடைய மகள் அவளாகவே இறைவேண்டல் செய்யத் தொடங்கியதைப் பார்த்த நிலாவின் பெற்றோர்க்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

ஒருநாள் இரவுவேளையில் தன்னுடைய அறைக்குள் நுழைந்த நிலா முழந்தாள் படியிட்டு இறைவனிடம் வேண்டத் தொடங்கினாள். இதைக் கூடத்திலிருந்து (Hall) பார்த்துக்கொண்டிருந்த நிலாவின் பெற்றோர் அவள் இறைவனிடம் என்ன வேண்டுகின்றாள் என்று காதுகொடுத்துக் கேட்டார்கள். அப்பொழுது நிலா இவ்வாறு இறைவனிடம் வேண்டினாள்: “இயேசுவே! என்னுடைய பெற்றோரையும் என்னுடைய பாட்டி தாத்தாவையும் என்னையும் என் தோழிகளையும் கவனித்துக்கொள்ளும். கூடவே உம்மையும் கவனித்துக் கொள்ளும். ஏனெனில், உமக்கு ஒன்று என்றால், எங்களைக் கவனித்துக் கொள்ள வேறு ஆளில்லை. அதனால் உம்மை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்.”

இதைக் கேட்டுவிட்டு நிலாவின் பெற்றோர் தங்களுடைய மகள் இப்படியெல்லாம் இறைவனிடம் வேண்டுவாளா என்று அவளைக் குறித்து மிகவும் பெருமிதம் அடைந்தார்கள்.

‘இறைவேண்டல் என்பது வேறொன்றுமில்லை. அது கடவுட்கும் மனிதர்க்கும் இடையே நடக்கும் உரையாடல்’ என்பார் பில்லி கிரகாம் என்ற மரபோதகர். அவருடைய வார்த்தைக்கு அர்த்தம் தருவதாக இருக்கின்றது இந்த நிகழ்வு. இன்றைய நற்செய்தி வாசகமும் ஓர் இறைவேண்டல் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

மிகுதியான வார்த்தைகளை அடுக்கிக்கொண்டு போவது இறைவேண்டல் அல்ல

நற்செய்தி இயேசு, இறைவனிடம் எப்படியெல்லாம் வேண்டவேண்டும் என்று சொல்வதற்கு முன்னம், எப்படியெல்லாம் வேண்டக்கூடாது என்பதை, “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது பிற இனத்தவரைப்போல் பிதற்றவேண்டாம்” என்ற வார்த்தைகளில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். புறவினத்தார் இறைவனிடம் வேண்டும்பொழுது சாதாரணமாக வேண்டவில்லை. மாறாக, உரக்கக் கத்தினார்கள் (1 அர 18:26) அதனால்தான் இயேசு தன் சீடர்களிடம், நீங்கள் அவர்களைப் போன்று வேண்ட வேண்டாம் என்று சொல்கின்றார். இப்படிச் சொல்லிவிட்டு இயேசு, “நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்” என்று சொல்கின்றார்.

இவ்வார்த்தைகளை நாம் நுட்பமாகக் கவனிக்கவேண்டும். ஏனென்றால், இயேசு இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்லியிருக்கின்றாரே ஒழியே, இதே வார்த்தைகளில் நீங்கள் இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்லவில்லை. இதை நாம் நம்முடைய கவனத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

இறைவனை முன்னிலைப்படுத்தி வேண்டுவதே ‘இறை’வேண்டல் ஆகும்.

இயேசு தன் சீடர்கள் எப்படி இறைவனிடம் வேண்டக்கூடாது என்று சொல்லிவிட்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள் சொல்கின்றார். இயேசு தன்னுடைய சீடர்கட்குக் கற்றுத்தரும் இறைவேண்டலில், ‘உமது பெயர்’, ‘உமது ஆட்சி’, ‘உமது திருவுளம்’ என்று இறைவனே முன்னுரிமை பெறுகின்றார். அப்படியானால் நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது இறைவனுக்கு முதன்மையான இடத்தினைத் தரவேண்டும். அப்பொழுதுதான் அந்த இறைவேண்டல் முழுமைபெறும்.

அடுத்ததாக நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது பொதுநலனுக்காக வேண்டவேண்டுமே ஒழியே தனிப்பட்ட நலனுக்காக வேண்டக்கூடாது. இயேசு கற்றுத்தரும் இறைவேண்டலில் வருகின்ற வார்த்தைகளைக் கவனித்துப் பார்த்தால், எல்லாமே ‘நாங்கள்’ எங்கள்’ என்றுதான் வருகின்றன. ஆகையால், நம்முடைய இறைவேண்டல் பிறர்நலம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இங்கு ஒரு கேள்வி எழலாம். எது என்னவென்றால், நாம் நம்முடைய இறைவேண்டலில் இறைவனுக்கு முதன்மையான இடம் கொடுத்துக் கொண்டிருந்தால், பிறர்க்காக வேண்டிக்கொண்டிருந்தால், நம்முடைய தேவைக்காக எப்போதுதான் மன்றாட்டு? இதற்கான பதிலை இன்றைய நற்செய்தியிலேயே இயேசு கூறுகின்றார். “நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கின்றார் என்பதுதான் அந்தக் கேள்விக்கான பதில்.
ஆகையால், நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது இறைவனை முன்னிலைப்படுத்தியும் பிறர்நலனுக்காகவும் வேண்டுவோம். அப்பொழுது இறைவன் நம்முடைய தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருவார்.

சிந்தனை.

‘கடவுட்கு பிடித்த இறைவேண்டல் எதுவெனக் கேட்பின், அவரது திருவுளம் நிறைவேற வேண்டுவதேயாகும்’ என்பார் பில்லி கிரகாம். ஆகவே, நாம் இறைவனின் திருவுளம் நிறைவேற வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.