இயேசுவின் திரு இருதய வணக்கம் மாதம் ஜுன் 20

இயேசுவின் திருஇருதயம் தேவ சந்நிதானத்தை நாம் நினைக்கக் கற்பிக்கிறது.

பாவத்தில் வாழாதபடி நம்மைக் காப்பாற்றித் தேவ ஊழியத்தில் உத்தமவிதமாய் நம்மைத் தூண்டி ஏவ நம்முடைய நல்ல மனதும், நாம் செய்யும் வஞ்சகமில்லாத தீர்மானங்களும் மட்டும் போதாது; ஆண்டவருடைய அருட்கொடையோடு தேவ சந்நிதானத்தின் ஞாபகத்தையும் நமது ஆத்துமத்தில் காப்பாற்றவேண்டும்.

நமது திவ்விய மாதிரிகையாகிய இயேசுக்கிறிஸ்துநாதர் தமது வாழ்நாளெல்லாம் பிதாவின் பார்வையில் செலவழித்தார். அப்போஸ்தலர்களிடத்தில் ஓயாமல் அவரைப்பற்றி பேசுவார். யாதாமொரு புதுமை செய்த பின்னும் பிதாவுக்கு நன்றியறிதல் காண்பித்து அவரை மகிமைப்படுத்துவார். சாத்தான் தம்மைச் சோதிக்கும்போது கடவுளுக்குரிய ஆராதனையையும் ஊழியத்தையும் அதற்கு ஞாபகப்படுத்தி, அதைத் தைரியத்தோடு கண்டிக்கிறார். திருப்பாடுகளின் நேரத்தில் தமது கண்களை பிதாவின் பக்கமாய் எழுப்பி, உமது சித்தத்தின்படி ஆகட்டும் என்று சொல்லுகிறார். தாம் சிலுவையில் சாகும்போது பிதாவைக் கூப்பிட்டு தமது ஆத்துமத்தை அவர் கையில் ஒப்புக்கொடுக்கிறார்.

இயேசுவின் திரு இருதயப் பக்தர்கள் தங்கள் திவ்விய மாதிரிகையானவரைப் பின்பற்றி ஆண்டவருடைய சந்நிதானத்திலும் அவருடைய பார்வையிலும் தங்கள் வாழ்வை செலவிட வேண்டும். நமக்கு வரும் சோதனைகளை ஜெயித்து கிறிஸ்தவப் புண்ணியங்களைத் தாராள குணத்தோடு அனுசரிக்க உதவிபுரிவதில் தேவ சந்நிதான முயற்சியைவிட அதிக சக்தியுள்ளது எதுவுமேயில்லை. ஒரு சாதாரண மனிதனுடைய சமூகம் முதலாய் நமது கடமையை நாம் நன்றாய்க் கவனித்து நிறைவேற்ற வல்லபமுள்ளதாயிருக்கிறது. ஒரு கண்டிப்பான எஜமானனின் ஊழியர்கள் தங்கள் கடமைகளை அனுசரிப்பதில் கவனக்குறைவாயிருப்பதும், அல்லது வீணான பேச்சிலும் பயனற்ற காரியங்களிலும் நேரத்தைச் செலவழிக்கிறதும் எப்போது? தங்கள் எஜமான் ஆஜராயிருக்கும்போதா? இல்லை, இல்லை. தங்கள் எஜமான் இல்லாதிருக்கும்போது, அவன் தங்களைப் பாராதிருக்கும்போதுதான். ஊதாரிப் பிள்ளை தன் சொந்த வீட்டில் தன் தகப்பன் பார்வையிலிருந்தவரையில் ஒழுங்காய் வாழ்ந்தான். அவரை விட்டுப் பிரிந்ததும் தன் செல்வத்தையெல்லாம் தீயவழியில் செலவழித்தான். மனிதர்களுடைய பார்வை நம்மைத் தீமையினின்று தடுக்க இவ்வளவு சக்தியுள்ளதாயிருந்தால், நமது சிந்தனை, வாக்கு, செயல்களைப் பார்க்கிறவரும், மிகவிரைவில் நமது கண்டிப்பான நியாதியுமாயிருக்கப்போகிற அளவில்லாத சர்வ வல்லபமுள்ள பரலோக இராஜாவாகிய இறைவனுடைய சந்நிதானத்தைப்பற்றி என்ன சொல்லலாம்! அதனால்தான் இந்த தேவ சந்நிதானத்தை நாம் நினையாதபடி தடுக்க சாத்தான் தன்னாலியன்ற முயற்சி பண்ணுகிறது. சாத்தான் இதில் அனுகூலமடையும்போது நமது ஆத்துமத்தின் நித்திய கேட்டை எளிதாய் உண்டுபண்ணலாமென்று அதற்கு நன்றாய்த் தெரியும். தூய ஆவியானவர் , பாவியானவனைப் பற்றி பேசும்போது, “அவன் கண்களுக்கு முன்பாக கடவுள் அவனுடைய வழிகளெல்லாம் அசுத்தமானது, அவனுடைய நினைவு, வார்த்தை , செயல்கள், தீமை நிறைந்தவை என்று சொல்லுகிறார். வேத சாட்சியான புனித இஞ்ஞாசியார் தமது கிறிஸ்தவர்களை நோக்கி, கடவுளை நினையுங்கள், மனது பொருந்தி எந்தப் பாவத்தையும் செய்யமாட்டீர்கள்; ஏனென்றால் கடவுளுடைய நினைவு பாவ வாயிலை அடைக்கிறது” என்றார்.

கெட்ட விஷயத்துக்குச் சம்மதிக்கும்படி பக்தியும் பரிசுத்ததனமுமுள்ள சூசானாள் என்பவரைத் தூண்டி ஏவும்போது, அக்கன்னிகை, நான் கடவுளுடைய சமூகத்தில் துரோகஞ் செய்து நித்திய நியாதிபதியாகிய அவர் கையின் கீழ் விழுகிறதைவிட மனிதர்கள் கையில் அகப்பட்டுச் சாகிறது நலம் என்னும் அழகான மறுமொழி சொல்லி கடவுளுக்குப் பிரமாணிக்கமாயிருந்தாள். சாவான பாவத்தால் கடவுளுக்குத் துரோகம் செய்ய பசாசும், நம்முடைய ஆசாபாசமும் நம்மைத் தூண்டும்போது, கடவுளுடைய சந்நிதானத்தை நினைவுகூர்ந்து, கடவுள் என்னைப் பார்க்கிறார். அவருடைய நீதியான சிம்மாசனத்துக்கு முன் என்னை அவர் உடனே கூப்பிடலாம். அவருடைய கண்ணுக்கு முன்பாக அவரை நான் நிந்திக்கமாட்டேன் என்று உறுதியாய் மறுமொழி சொல்.

பாவத்தினின்று நம்முடைய ஆத்துமத்தைக் காப்பாற்றி பரிசுத்ததனத்தில் நிலைநிறுத்த தேவ சந்நிதான ஞாபகம் இவ்வளவு சக்தியுள்ளதாயிருக்க, கிறிஸ்தவப்புண்ணியங்களை அனுசரித்து தேவ ஊழியத்தில் பிரமாணிக்கமும் சுறுசுறுப்புமுள்ளவர்களாய் நடக்கும்படி நம்மைத் தூண்ட அதன் சக்தி குறையுமா? உத்தம பாதையில் பிரவேசிக்க ஆபிரகாம் என்பவரை கடவுள் அழைத்தபோது, ஆபிரகாமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு (தொநூ 17 : 1 என்று திருவுளம்பற்றினார். தாவீ தென்கிற தீர்க்கத்தரிசியும் உம் நியமங்களையும் ஒழுங்கு முறைகளையும் நான் கடைபிடிக்கி றேன். ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை (திருப்பாடல்கள் 119 : 168) என்று பாடியிருக்கிறார்.

கடவுளுடைய அருட்கொடைகளும் அவருடைய ஞாபகமுமே வேதசாட்சிகள் தங்கள் பயங்கரமான துன்பங்கள் மத்தியில் பிரமாணிக்கமாயிருக்கும்படி செய்தது.

இயேசுவின் திருஇருதய அன்பர்கள் எல்லோரும் தங்கள் சிந்தனைகளையும் செயல்களையும் பார்க்கிற தேவ சந்நிதானத்தை அடிக்கடி நினைக்கும் படி தங்கள் விசுவாசத்தைத் தூண்டி எழுப்பவேண்டும். பக்தி ஆகாரத்தோடு ஜெபம் பண்ணவும், சுத்த கருத்தோடு வாழவும், அடக்க ஒடுக்கத்தோடு நமது உடலையும் ஐம்புலன்களையும் நடத்தவும், தேவசந்நிதான ஞாபகம் மிகவும் உதவிபுரியும். உன் மேலதிகாரிகளைக் கொண்டு உனக்கு திவ்விய இயேசு உத்தரவு கொடுக்கிறாரென்றும், உன் மீட்புப் பாதையில் உன்னை நடத்துகிற குருக்கள் ஆயர்களிடமும் இயேசுக்கிறிஸ்து இருக்கிறாரென்றும் நினைத்துக்கொள்வாயாகில் கீழ்ப்படிதல் மிக எளிதாயிருக்கும்.

நம்முடைய திவ்விய இரட்சகர் உன்னைப் பார்க்கிறாரென்றும், நீ அனுபவிக்கிற சிலுவைகளுக்கெல்லாம் சம்பாவனை அளிப்பாரென்றும் நீ நினைத்தால் . தாராள குணம் உன்னிடத்தில் பிறக்கும். மனது பொருந்தி கட்டிக்கொள்ளும் குற்றங்களைத் தவிர்க்கவும், உன் வீண் மகிமையையல்ல, சொந்த திருப்தியையல்ல, ஆண்டவருடைய மகிமையையும் அவருடைய அன்பையுமே உன் செயல்களில் தேடவும் முயற்சிப்பாய். உன் கடமைகளை யெல்லாம் உத்தமமாய் நிறைவேற்றி இயேசுவின் திரு இருதய ஊழியத்திலும் அன்பிலும் வாழ்ந்து , பாக்கியமான மரணமடைவாய்.

Comments are closed.