நற்செய்தி வாசக மறையுரை (ஜூன் 18)

பொதுக்காலம் பதினோறாம் வாரம்
செவ்வாய்க்கிழமை
மத்தேயு 5: 43 – 58

அன்பு மானுடசமூகத்தை ஒன்றுசேர்க்கும்

நிகழ்வு

இந்த பூமியில் பல நல்ல தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களுள் முக்கியமான ஒருவர் நெல்சன் மண்டேலா. தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காகப் (அமைதியான முறையில்) போராடியதற்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் இவர், சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் அந்நாட்டின் அதிபராக உயர்ந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவின் அதிபராக உயர்ந்தபிறகு ஒருநாள் ஒருசில முக்கியப் பிரமுகர்களோடு ஓர் உணகத்திற்கு உணவருந்தச் சென்றார். உணவகத்திற்குச் சென்றபின், என்னென்ன உணவுவேண்டும் என்று அங்கிருந்த பணியாளரிடம் சொல்லிவிட்டு கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவர்க்கு முன்பாக ஒரு மனிதர் என்னென்ன உணவுவேண்டும் என்று பணியாளரிடம் சொல்லிவிட்டுத் தனியாக அமர்ந்திருந்தார். அவர் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த நெல்சன் மண்டேலா தன்னோடு வந்திருந்த ஒரு காவலரை அழைத்து, “அங்கு தனியாக உட்கார்ந்திருக்கின்றாரே அவரை எங்களோடு வந்து சாப்பிடச் சொல்” என்றார். காவலரும் அவ்வாறே சொல்ல, அந்த மனிதர் நெல்சன் மண்டேலாவோடு அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார்

அந்த மனிதர் சாப்பிடும்போது நெல்சன் மண்டேலாவோடு இருந்தவர்கள் அவரை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். ஏனெனில், அவர் சாப்பிடும்போது அவருடைய கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன. இருந்தாலும் அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட்டார்கள். எல்லாரும் சாப்பிட்டு முடித்தபின்பு அந்த மனிதர் மட்டும் தான் சாப்பிட்ட சாப்பாட்டிற்குரிய கட்டணத்தைச் செலுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.

அப்பொழுது நெல்சன் மண்டேலாவோடு இருந்தவர்கள் அவரிடம், “அந்த மனிதரை உங்கட்கு ஏற்கனவே தெரியுமா? அவர்க்கு ஏதாவது பிரச்சினை இருக்குமோ, சாப்பிடும் கைகள் நடுங்கிக்கொண்டே இருந்தன” என்றார்கள். அதற்கு நெல்சன் மண்டேலா அவர்களிடம், “அந்த மனிதரை எனக்கு ஏற்கனவே தெரியும். நான் சிறையில் இருந்தபோது அவர்தான் சிறையதிகாரியாக இருந்தார். சில சமயங்களில் நான் எனக்குத் தாகம் எடுக்கின்றபோது ‘தண்ணீர், தண்ணீர்’ என்று கத்துவேன். அப்பொழுது அவர் என்மேல் சிறுநீர் கழித்துவிட்டு, ‘இந்தா தண்ணீர் குடித்துக் கொள்’ என்பார். இப்பொழுது நான் இந்நாட்டில் அதிபராகிவிட்டேன் அல்லவா… அதனால்தான் நான் ஏதாவது செய்துவிடுவேன் என்ற பயத்தில் அவருடைய கைகள் நடுங்குகின்றன” என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவர்கள், “உங்களை எப்படியெல்லாமோ அவர் சித்ரவதை செய்திருக்கின்றார். அப்படியிருந்தும் நீங்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டுருக்கிறீர்களே! உண்மையிலே பெரியவர்” என்றார்கள்.

தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு அவர் தன்னை துன்புறுத்தியவரையும் எந்தளவுக்கு மன்னித்து, அன்புசெய்திருக்கின்றார் என்ற உண்மையை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது. நெல்சன் மண்டேலாவைக் குறித்துச் சொல்லப்படுகின்ற இன்னொரு செய்தி, அவர் தன்னுடைய நாட்குறிப்பில், ‘பகைமை மானுடத்தைச் சிதைக்கும். அன்பு மட்டுமே மானுடத்தை ஒன்றுசேர்க்கும்’ என்ற வரியை எழுதி வைத்து, அதைத் தான் போகுகிற இடங்களிலெல்லாம் எடுத்துரைத்து வந்தார் என்பாகும்.

உண்மைதான், ‘பகைமை மானுட சமூகத்தைப் பிரிக்கும். அன்பு மட்டும்தான் மானுட சமூகத்தை இணைக்கும். இத்தகைய செய்தியைத்தான் இன்றைய நற்செய்தி வாசகமும் தாங்கி வருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

பகைவர்க்கு வெறுப்பு அல்ல, அன்பு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயா’ என்ற பழைய கட்டளையை மாற்றி, ‘பகைவரிடம் அன்புகூருங்கள்’ என்ற புதிய கட்டளையைத் தருகின்றார். முதலில் பகைவர்கள் யாரெனச் தெரிந்துகொள்வது நல்லது. யார் யாரெல்லாம் நம்மைச் சபிக்கின்றார்களோ, நம்மை வெறுக்கின்றார்களோ, நம்மைத் துன்புறுத்துகிறார்களோ அவர்களெல்லாம் பகைவர்களாவர். இப்படிப்பட்டவர்களை நாம் அன்புசெய்யவேண்டும். அந்த அன்பின் வெளிப்பாடாக அவர்கட்காக இறைவனிடம் வேண்டவேண்டும் என்று இயேசு குறிப்பிடுகின்றார். நம்மைத் துன்புறுத்தும் பகைவர்கட்காக நாம் வேண்டுகின்றபோது, நம்முடைய உள்ளத்தில் இருக்கும் வெறுப்பு மறையும். அதன்மூலம் நாம் அவரை அன்பு செய்ய முடியும். அதைத்தான் இயேசு, ‘உங்களைத் துன்புறுத்துவோர்காக மன்றாடுங்கள்’ என்கின்றார்.

பகைவரை அன்புசெய்வதால் நாம் என்னவாகின்றோம்

பகைவரை அன்புசெய்யவேண்டும் என்று சொன்ன இயேசு, பகைவரை அன்பு செய்வதால் ஒருவர் என்னவாகின்றார் என்பதை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றார். நாம் பகைவரை அன்பு செய்வதால் முதலில், கடவுடைய மக்களாகின்றோம். இரண்டாவதாக, நாம் மற்றவர்களை விட சிறந்தவர்களாகின்றோம். மூன்றாவதாக, நாம் விண்ணகத்தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாகின்றோம். ஆகவே, இத்தகைய சிறப்புகளை நாம் பகைவர்களை அன்பு செய்கின்றபோது கிடைப்பதால், இயேசு சொல்வதுபோல் பகைவர்களை அன்பு செய்து வாழ்வது மிகவும் நல்லது.

சிந்தனை

‘மக்கள் சுயநலவாதிகளாகவோ, புரிந்துகொள்ள முடியாதவர்களாகவோ, தீயவர்களாவோ கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் நாம் அவர்களை அன்பு செய்வோம்’ என்பார் அன்னைத் தெரசா. ஆகவே, மக்கள் எப்படியிருந்தாலும் அது நம்முடைய பகைவர்களாகக்கூட இருந்தாலும் நாம் அவர்களை அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.