ஏப்ரல் 10 : நற்செய்தி வாசகம்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர, வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 7-15

அக்காலத்தில் இயேசு நிக்கதேமிடம் கூறியது: “நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.

நிக்கதேம் அவரைப் பார்த்து, “இது எப்படி நிகழ முடியும்?” என்று கேட்டார்.

அதற்கு இயேசு கூறியது: “நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரியவில்லையே! எங்களுக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப்பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும்போது எப்படி நம்பப்போகிறீர்கள்?

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
மறையுரைச் சிந்தனை (ஏப்ரல் 10)

பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்படவேண்டும்!

பெற்றோரோடு கடைத்தெருவுக்கு வந்த ஆறு வயது ஜான், கூட்டத்தில் தன்னுடைய பெற்றோரைத் தொலைத்துவிட்டு, ஓரிடத்தில் நின்றுகொண்டு ஓவென்று அழுதுகொண்டிருந்தான்.

அவனைப் பார்த்த பெரியவர், “தம்பி! உனது பெயர் என்ன?… உன்னுடைய பெற்றோர் யார்?… உன்னுடைய வீடு எங்கே இருக்கின்றது?” என்று கேட்டார். அவனோ எதுவும் பேசாமல் அழுதுகொண்டே இருந்தான். பெரியவர் மிகவும் பொறுமையாக, “அழாதே தம்பி… உன்னுடைய பெற்றோர் யார்? உன்னுடைய வீடு எங்கே இருக்கின்றது என்று நீ சொன்னால்தானே என்னால் உன்னை உன்னுடைய பெற்றோரிடம் ஒப்படைக்க முடியும்” என்றார். அவனோ தன்னுடைய பெயர் மற்றும் பெற்றோருடைய பெயர் என்னென்ன என்று சொல்லிவிட்டு, இருக்கின்ற இடத்தின் பெயர் தெரியாது விழித்தான்.

பெரியவர் அவனுடைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, நகரில் இருந்த ஒவ்வொரு இடமாகச் சொல்லி, இந்த இடத்திற்குப் பக்கத்தில் உன்னுடைய வீடு இருக்கின்றதா என்று கேட்டுவந்தார். எல்லாவற்றையும் இல்லை இல்லையென்று சொல்லிவந்த ஜான், அந்தப் பெரியவர், “சிலுவைக் கோவிலுக்குப் பக்கத்தில் உன்னுடைய வீடு இருக்கின்றதா?” என்று கேட்டதும் “ஆமாம், சிலுவைக் கோவிலுக்குப் பக்கத்தில்தான் என்னுடைய வீடு இருக்கின்றது. நீங்கள் என்னை அங்கே கொண்டு போய் விட்டுவிடுங்கள், நான் என்னுடைய வீட்டிற்குப் போய்விடுவேன்” என்றான். ஜான் சொன்னது போன்றே அந்தப் பெரியவர் அவனை சிலுவைக் கோவிலில் கொண்டுபோய் விட, ஜான் தன்னுடைய வீட்டை எளிதாய் அடைந்தான்.

மேலே சொல்லப்பட்ட நிகழ்வில், வழி தெரியாமல் தவித்த ஜானுக்கு சிலுவைக் கோவில் – சிலுவை – வழிகாட்டியது. திக்குத் தெரியாமல், வாழ்வில் விடிவில்லாமல் ஏங்கித் தவிப்போர் சிலுவையை, அதில் அறியப்பட்டிருக்கும் இயேசுவைக் கண்டால் வாழ்வடைவது உறுதி என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம்.
நற்செய்தி வாசகத்தில் யூதத் தலைவர்களுள் ஒருவரும் பரிசேயருமான நிக்கதேமுக்கும் ஆண்டவர் இயேசுவுக்கும் இடையே உரையாடல் நடைபெறுகின்றது. அந்த உரையாடலில்தான் இயேசு கிறிஸ்து, “பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டதுபோல், மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும் என்கின்றார். இதனை எப்படிப் புரிந்துகொள்வது என்று இப்போது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

எண்ணிக்கை நூல் 21 ஆம் அதிகாரத்தில் இடம்பெறுகின்ற ‘மோசேயால் பாம்பு உயர்த்தப்படுகின்ற’ நிகழ்விற்கு முன்னதாக, இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் தங்களுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை, தாங்கள் சரியாகக் கவனிக்கப்படவில்லை என்று ஆண்டவருக்கு எதிராகவும் மோசேயுக்கும் எதிராகக் கலகம் செய்கின்றார். ஆண்டவராகிய கடவுளோ எகிப்தில் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை விடுவித்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தை வழங்குவதாக இருந்தார். அது புரிந்துகொள்ளாமல் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்ததால், கொல்லிவாய்ப் பாம்புகளை அவர்களிடத்தில் அனுப்புகின்றார். அப்பாம்பு மக்களைக் கடிக்க அவர்கள் இறந்துபோகிறார்கள். இதனைப் பார்க்கும் மோசே ஆண்டவரிடத்தில் சென்று, அவர்கள்மீது மனமிரங்கச் சொல்கின்றார். உடனே அவர் வெங்கலத்தால் பாம்பு ஒன்றைச் செய்யச் சொல்லி, அதனை மக்கள் பார்வைக்கு வைக்கவும், அதனைப் பார்ப்பவர் உயிர்பிழைப்பர் என்று சொல்கின்றார். மோசேயும் அவ்வாறு செய்ய கொள்ளிவாய்ப் பாம்பினால் கடிபட்டவர்கள் உயிர் பிழைத்துக்கொள்கின்றார்.

ஆண்டவர் இயேசு இந்த நிகழ்வினைச் சுட்டிக்காட்டி, எப்படி வெண்கலப் பாம்பினைப் பார்த்தவர்கள் வாழ்வடைந்தார்களோ, அது போன்று சிலுவையில் உயர்த்தப்படுகின்ற மானிட மகனைக் காண்போர் வாழ்வினை, மீட்பினை எல்லாவித நலன்களைப் பெற்றுக்கொள்வர் என்கின்றார். நாம் நம் ஆண்டவரை, அவர் நமக்காகப் பட்ட பாடுகளை எப்படிப் புரிந்துகொள்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல நேரங்களில், இஸ்ரயேல் மக்களைப் போன்று ஆண்டவர் நமக்கு எத்தனை நன்மை செய்தபோதும், தன் ஒரே மகனை இந்த உலகிற்கு அனுப்பி, நம்மை மீட்டுக் கொண்டபோதும் அதனைப் புரிந்துகொள்ளாமல், அவருடைய அன்புக்கு உகந்தவர்களாக இல்லாமல், அவரை உதாசீனப்படுத்துகின்றோம்.

ஆகவே, நாம் செய்யவேண்டியதெல்லாம் இறைவனின் மேலான அன்பையும் அவருடைய திட்டத்தையும் உய்த்துணர்வதுதான். அவர் நமக்காகப் பாடுகள் பட்டு, சிலுவையில் அறியப்பட்டார் என்பதை உணர்ந்து, அவருடைய வழியில் நடக்கும்போது, நாம் அவருடைய அன்பிற்கு உகந்தவர்களாவோம் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.

ஆகவே, நாம் வாழ்வில் சிலுவையின் மகிமையை உணர்ந்து வாழ்வோம், மட்டுமல்லாமல், இறைவன் நம்மீது கொண்டிருக்கும் மேலான அன்பை உணர்ந்து, அதற்கேற்றார் போல் அவருடைய வழியில் நடப்போம்,. அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

மறைத்திரு. மாிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Comments are closed.