தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் (ஜூன் 16)

நாமோ அழகான, ஜோடனை நிறைந்த வார்த்தைகளால் மறையுரை கொடுக்க நினைக்கின்றோம். இவரோ மிகவும் எளிய, சாதாரண வார்த்தைகளில் மறையுரை கொடுக்கின்றார். மக்களும் இவருடைய மறையுரையைக் கேட்க சாரை சாரையாக வருகிறார்கள்”
– யோவான் பிரான்சிஸ் ரெஜிசைக் குறித்து அவருடைய நண்பர் கூறிய வார்த்தைகள்

வாழ்க்கை வரலாறு

இன்று நாம் நினைவுகூரும் யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் 1597 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 31 ஆம் நாள், பிரான்ஸ் நாட்டில் இருந்த ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். இவர் தன்னுடைய தொடக்கக் கல்வியை தனது சொந்த ஊரிலே கற்றார். அதன்பின் இவர் தன்னுடைய மேற்படிப்பை இயேசு சபைத் துறவிகள் நடத்தி வந்த கல்லூரியில் கற்றார். அப்போது அங்கே இருந்த துறவிகளுடைய வாழ்க்கையால் தொடப்பட்டு, தானும் ஒரு துறவியாக மாறவேண்டும் என்னும் ஆசைகொண்டார் இவர். ஆசை கொண்டதும் மட்டுமல்லாமல் 1631 ஆம் ஆண்டு குருவாகவும் அருட்பொழிவு செய்யப்பட்டார்.

யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் குருவாக மாறிய பின்பு ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரைத்து, ஆன்மாக்களை அறுவடை செய்யும் பணியில் மிக மும்முரமாக ஈடுபட்டார். மிகச் சிறந்த மறைபோதகராக விளங்கிய இவர், தன்னுடைய போதிக்கும் திறமையால் பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டு வந்து சேர்த்தார்.

இதற்கிடையில் இவர் இருந்த தூலூஸ் நகரில் பிளேக் நோய் பரவத் தொடங்கியது. இந்த நோய் பரவி பலரது உயிரையும் எடுத்துக்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் மிகச் சிறப்பான முறையில் பணிகளைச் செய்து, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வந்தார். இவர் நோயாளிகள்மீது அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களுக்குப் பணிசெய்து வந்தார். நோயாளிகள் மட்டுமல்லாது கைவிடப்பட்டோர், விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்தோர் மறுவாழ்வு பெறுவதற்காகவும் பாடுபட்டார். அவர்களுக்காக விடுதி ஒன்றைக் கட்டி எழுப்பி, அதில் அவர்களை அமர வைத்து, அதன்மூலம் அவர்களுக்குச் சேவைகள் புரிந்து வந்தார்.

இதன்பிறகு இவர் விவியர்ஸ் நகர் சென்று, அங்கு நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார். இவர் ஆற்றிய நற்செய்திப் பணியினால் பலரும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். இப்படி பல்வேறு பணிகளைச் செய்து வந்த யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் நிமோனியாக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் இவரைக் கடுமையாகத் தாக்கவே இவர் தன்னுடைய 43 ஆம் வயதில் அதாவது 1640 ஆம் ஆண்டு, டிசம்பர் 30 ஆம் நாள், இறையடி சேர்ந்தார். இவருக்கு 1737 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிசின் நினைவுநாளைக் கொண்டாடும் நாம், அவரிடம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

1. எளியரிடத்தில் இரக்கம்

தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிசின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துப் பார்க்கின்றபோது அவர் எல்லா மக்களிடத்திலும் அதிலும் குறிப்பாக எளியவரிடத்தில் கொண்டிருந்த இரக்கம்தான் நம்முடைய நினைவுவுக்கு வந்து போகின்றது. அவர் யாரிடத்திலும் எந்தவொரு வேறுபாடும் பார்க்காமல் எல்லாரிடத்திலும் அன்போடும் இரக்கத்தோடும் சகோதர நேசத்தோடும் இருந்தார். அவர் கொண்டிருந்த அன்பும் இரக்கமும் நம்மிடத்தில் இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பல நேரங்களில் நாம் சமூகத்தில் வலுத்தவர் என்றால் அவரை ஒரு மாதிரியாகவும் வறியவர் என்றால், அவரை ஒரு மாதிரியாகவும் நடத்துகின்றோம். இத்தகைய போக்கு திருச்சபையின் தொடக்க காலக்கட்டத்திலும் நிலவியது. அதைத்தான் தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில், “சகோதர சகோதரிகளே, மாட்சிமிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்து செயல்படாதீர்கள்” என்று (யாக் 2:1). ஆகையால், ஆள்பார்த்து செயல்படுவதை நம்மிடத்தில் இருந்து தவிர்த்து எல்லாரையும் சகோதர சகோதரிகளாகப் பார்க்கக்கூடிய பக்குவத்தில் நாம் வளரவேண்டும். ஏனென்றால், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, யாரையும் ஏழை என்றும் பணக்காரர் என்றும் பிரித்துப் பார்த்து பழகவில்லை. அவர் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று எல்லாரையும் சகோதர சகோதரிகளாக பாவித்து நடத்துவதே மிகச் சிறப்பான ஒரு செயலாகும்.

ஆகவே, தூய யோவான் பிரான்சிஸ் ரெஜிசின் நினைவுநாளை கொண்டாடும் நாம், அவரைப் போன்று ஏழை எளியவரிடத்தில் மிகுந்த அன்போடும் இரக்கத்தோடும் வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.