ஜுன் 16 : ஞாயிற்றுக்கிழமை. நற்செய்தி வாசகம்.

நற்செய்தி வாசகம்.

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேச மாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் `அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ ” என்றேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரை.

மூவொரு கடவுள் விழா.

(நீதிமொழிகள் 8: 22-31; உரோமையர் 5: 1-5; யோவான் 16: 12-15)

நல்லுறவுக்கு இலக்கணமான மூவொரு கடவுள்.

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் (Dublin) பேராயர் ஒருவர் இருந்தார். அவர் அதே நகரில் இருந்த சீர்த்திருத்த சபைச் சகோதரர்கள் (Protestant) நடத்திவந்த மிகவும் புகழ்பெற்ற ட்ரினிட்டி கல்லூரில் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் யாரும் சேரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார். அவரது உத்தரவையும் மீறி ஒரு கத்தோலிக்கக் கிறிஸ்தவர் அந்த ட்ரினிட்டி கல்லூரியில் நுழைந்தார். இது நடந்து ஓரிரு நாட்களிலேயே பேராயரின் உத்தரவை மீறி ட்ரினிட்டி கல்லூரில் நுழைந்த அந்த மனிதர் இறந்துபோனார். இதைப் பார்த்துவிட்டு மக்களெல்லாம், ‘பேராயரின் உத்தரவை மீறி ட்ரினிட்டி கல்லூரில் நுழைந்ததால்தான், அவர்க்கு இப்படியொரு நிலைமை நேர்ந்தது’ என்று பேசத் தொடங்கினார்கள்.

இதற்குப் பின்பு அந்த மனிதர் விண்ணகத்திற்குச் சென்றார். விண்ணக வாசலில் நின்றுகொண்டிருந்த பேதுரு, “நீ என் வழியாக வரும் பேராயரின் உத்தரவையும் மீறி, ட்ரினிட்டி கல்லூரில் நுழைந்தவன்தானே! அதனால் உனக்கு விண்ணகத்தில் இடமில்லை. நீ பாதாளத்திற்குப் போ” என்று விரட்டினார். அப்பொழுது தற்செயலாக அங்கு வந்த கடவுள்விடம் பேதுரு, “நாமே மூவொரு கடவுள். அப்படியிருக்கும்போது இவர் ட்ரினிட்டி கல்லூரியில் நுழைந்தார் என்பதற்காக விண்ணகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பது எந்தவிதத்தில் நியாயம்!. அதனால் தயவுசெய்து இவரை உள்ளே அனுப்பிவிடுங்கள்” என்றார். பேதுருவும் கடவுள் சொன்னதற்கு ஏற்ப அவர் விண்ணகத்திற்குள் செல்ல அனுமதித்தார்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், பேரன்பிற்கும் நல்லுறவிற்கும் இலக்கணமாக விளங்கும் மூவொரு கடவுள் யாரையும் புறம்பே தள்ளிவிடுவதில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குறித்து. இன்று அன்னையாம் திருஅவை மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்லநாளில் மூவொரு கடவுள் விழா நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

மூவொரு கடவுளுக்கு புனிதர்கள் கொடுக்கும் விளக்கம்.

குருக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படுகின்ற, ஜான் மரிய வியான்னி மூவொரு கடவுளைக் குறித்துச் சொல்லும்போது, “மூவொரு கடவுளை ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். எப்படி ஒரு மரத்தில் ஆணிவேர், தண்டு, கிளைகள் என்று மூன்று பகுதிகள் இருந்தாலும் அவை மரம் என்று அழைக்கப்படுகின்றதோ, அதுபோன்று தந்தை, மகன், தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாக இருந்தாலும், மூவொரு கடவுள் என்றே அழைக்கப்படுகின்றார்கள்” என்பார்.
இதுபோன்று அயர்லாந்தின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற தூய பேட்ரிக் மூவொரு கடவுளைக் குறித்துச் சொல்லும்போது, “மூவொரு கடவுளை ஷாம்ரோக் (Shamrock) என்ற செடியில் உள்ள இலைக்கு ஒப்பிடலாம். இவ்விலையில் மூன்று இதழ்கள் இருந்தாலும் அவை, ஷாம்ரோக் இல்லை என்றே அழைக்கப்படுவதுபோல, தந்தை, மகன், தூய ஆவியார் என்று மூன்று ஆட்களாக இருந்தாலும், மூவொரு கடவுள் என்ற அழைக்கப்படுகின்றார்கள்” என்று விளக்கம் தருவார். இவ்விளக்கங்களில் ஒருசில குறைபாடுகள் இருந்தாலும், மூவொரு கடவுளை எளிய வகையில் புரிந்துகொள்வதற்கு இவை வழிவக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை.

விவிலியத்தில் மூவொரு கடவுள்.

மூவொரு கடவுளுக்கு ஒருசில புனிதர்கள் கொடுத்த எளிய விளக்கத்தை அறிந்துகொண்ட நாம், இப்பொழுது விவிலியத்தில் மூவொரு கடவுளைக் குறித்து என்ன சொல்லப்பட்டிருகின்றது என்பதைத் தெரிந்துகொள்வோம்.

கடவுள் மானிடரைப் படைக்கும்போது, “மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம்’ (தொநூ 1:26) என்பார். இங்கே குறிப்பிடப்படும் ‘நம்’ என்ற வார்த்தை தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்களும் படைப்பின்போது செயலாற்றியிருகின்றார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றது. மூவொரு கடவுள் சேர்ந்து செயல்பட்ட இன்னொரு நிகழ்வு இயேசுவின் பிறப்பாகும். இதை வானதூதர் கபிரியேல் மரியாவிடம் சொல்லக்கூடிய, “தூய ஆவியார் உம்மீது வருவார். உன்னத கடவுளின் வல்லமை உன்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் என அழைக்கப்படும்” (லுக் 1: 35) என்ற வார்த்தைகளில் கண்டுகொள்ளலாம்.

மூவொரு இறைவன் ஒன்றாகச் செயல்படும் இன்னுமோர் இடம், இயேசுவின் திருமுழுக்கு ஆகும். இங்கு இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றுவிட்டு வெளியே வரும்போது, தூய ஆவியார் அவர்மீது இறங்கி வருகின்றார். தந்தைக் கடவுளோ, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத் 3: 13-17) என்கின்றார். இப்படி மூவொரு இறைவன் ஒன்றாக இணைந்து செயல்பட்டதற்கான எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். மூவொரு கடவுள் அன்றைக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் நம் மத்தியில் செயல்படுகின்றார் (மத் 28: 19,20) என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நல்லுறவுக்கு இலக்கணமான மூவொரு கடவுள்.

மூவொரு கடவுளைக் குறித்து புனிதர்கள் சொன்னதையும் விவிலியத்தின் மூவொரு செயல்பாட்டினையும் அறிந்துகொண்ட நாம், இந்த மூவொரு கடவுள் நல்லுறவுக்கு எப்படி இலக்கணமாக இருக்கிறார்? நாம் எப்படி நல்லுறவோடு இருப்பது? என்று சிந்தித்துப் பார்ப்போம்.

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு இவ்வாறு கூறுவார்: “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் தாமாக எதையும் பேசமாட்டார்; அவர் தாம் கேட்பதையே பேசுவார்.” இவ்வார்த்தைகளை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் தந்தை, மகன், தூய ஆவியார் ஆகிய மூன்று ஆட்கட்க்கும் இடையே இருக்கும் நல்லுறவு புரிந்துவிடும். தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துபவராக இருந்தாலும்கூட, அவர் தாமாக எதையும் பேசாமல், தந்தைக் கடவுள் வெளிப்படுத்துவதை வார்த்தையாம் இயேசுவின் வழியாக சொல்கின்றார் என்றால், அங்குதான் அவர்கட்க்கு இடையே இருக்கும் நல்லுறவானது முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தகைய நல்லுறவு ஒருவர் மற்றவர் அன்பு கொள்வதாலும் ஒருவர் மற்றவர்க்கு மதிப்பளிப்பதாலும் ஒருவர் மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலும் மட்டுமே நிகழும். மூவொரு கடவுளிடம் அவை இவையெல்லாம் இருந்தது.

ஆகையால், மூவொரு கடவுளிடம் நல்லுறவு நிலவ அவர்கள் எப்படி அன்போடும் மதிப்பளித்தும் இருந்தார்களோ, அதுபோன்று நாமும் இருந்தால், நாம் வாழும் குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி நல்லுறவு ஏற்படும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.

சிந்தனை.

‘துணிவு, மனசாட்சி, இரக்கம் ஆகிய மூன்றுதாம் ஓர் அறிவார்ந்த சமூகத்தில் தமதிருத்துவமாகும்’ என்பார் அபிஜித் நஷ்கர் (Abhijit Naskarr) என்ற எழுத்தாளர். ஆகவே, மூவொரு கடவுளின் விழாவைக் கொண்டாடும் நாம், மூவொரு கடவுளிடம் விளங்கும் நல்லுறவையும் பேரன்பையும், மேலே நாம் பார்த்த துணிவு, மனசாட்சி, இரக்கம் ஆகியவற்றையும் நமதாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.