வறியோர் உலக நாள் செய்தி தரும் சவால்கள்

வறியோருடன் செலவிடும் சில நிமிடங்கள், அவர்களை எண்ணிக்கைகளாகக் கண்ணோக்காமல், மனிதர்களாகக் கருதி, அவர்களுக்கு தரும் சிறு புன்னகை ஆகிய சிறு விடயங்கள் வறியோருக்கு நம்பிக்கையைக் கொணரும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளது, வறியோர் உலக நாளுக்கென இவ்வாண்டு அவர் உருவாக்கியுள்ள செய்தியின் ஒரு முக்கிய அம்சம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாண்டு நவம்பர் 17ம் தேதி சிறப்பிக்கடவிருக்கும் மூன்றாவது வறியோர் உலக நாளுக்கென திருத்தந்தை உருவாக்கியுள்ள செய்தியை, புதிய வழி நற்செய்தி அறிவித்தல் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிக்கெல்லா (Rino Fisichella) அவர்கள், ஜூன் 13, இவ்வியாழனன்று, செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட வேளையில் இவ்வாறு கூறினார்.

நம் கண் முன்னே, இவ்வுலகில் பெருகிவரும் வறுமையின் கொடுமைகள், மற்றும் இக்கொடுமைகளை நீக்க உழைப்போர் என்ற இரு வழிகளில் திருத்தந்தையின் எண்ணங்கள் இச்செய்தியில் வெளியாகியுள்ளன என்று பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் விளக்கிக் கூறினார்.

நம்மைச் சுற்றி நிகழும் வறுமை என்ற கொடுமையைக் காண மறுக்கும் நிலையையும், அதைக் கண்டாலும், பல்வேறு கருத்தியல்கள் கொண்டு அவற்றை நியாயப்படுத்தும் போக்கையும் திருத்தந்தை தன் செய்தி வழியே நம்முன் சவால்களாக படைக்கின்றார் என்று பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.

சென்ற ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும், வறியோர் உலக நாளையொட்டி, ஏழைகளுக்கு ஆற்றக்கூடிய பணிகள் கூடுதலாக இருக்கும் என்று குறிப்பிட்ட பேராயர் பிசிக்கெல்லா அவர்கள், புனித பேதுரு வளாகத்திலும், அதைச் சுற்றிலும், வறியோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் முயற்சிகள் இவ்வாண்டு கூடுதலாக மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

நவம்பர் 17ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், 1500க்கும் மேற்பட்ட வறியோருடன், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், மதிய உணவை அருந்துவார் என்பதையும், பேராயர் பிசிக்கெல்லா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Comments are closed.