போலந்து நாட்டின் 108 மறைசாட்சிகளின் நினைவு

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த வேளையில், போலந்து நாட்டில் மறைசாட்சிகளாக உயிர் துறந்த 108 அருளாளர்களை, போலந்து ஆயர் பேரவை, ஜூன் 12, இப்புதனன்று சிறப்பித்தது என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

1939ம் ஆண்டு முதல், 1945ம் ஆண்டு முடிய நாத்சி வதை முகாம்களிலும், வேறு பல வழிகளிலும் கொல்லப்பட்ட இந்த மறைசாட்சிகளை, 1999ம் ஆண்டு, ஜூன் 13ம் தேதி, திருத்தந்தை, புனித 2ம் ஜான் பால் அவர்கள், வார்சா நகரில் அருளாளர்களாக உயர்த்தினார்.

கொல்லப்பட்ட 108 மறைசாட்சிகளில், மூவர் ஆயர்கள், 52 பேர் அருள் பணியாளர்கள், 29 ஆண் துறவிகள், 8 பெண் துறவிகள் மற்றும், ஒன்பது பொது நிலையினர் அடங்குவர்.

இவர்களில், 20 வயதான Jarogniew Wojciechowski என்ற இளையவர் வயதில் மிகக் குறைந்தவர் என்பதும், இவரைப்போலவே, 20 முதல், 28 வயதுடைய 6 இளையோர் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

கருவுற்றிருந்த ஓர் இளம்தாய் வதைமுகாமில் கொல்லப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில், அவருக்குப் பதிலாக, அவரது மாமியாரான Marianna Biernacka என்ற 55 வயதுடைய பெண்மணி தன்னையே கொலையாளிகளிடம் கையளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அருளாளர்களாக உயர்த்தப்பட்ட 20ம் ஆண்டு நிறைவு, ஜூன் 13, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்டது.

Comments are closed.