இயேசுவின் திரு இருதய வணக்கம் மாதம் ஜூன் -12-ம் தேதி.

மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம்.

பூங்காவனத்தில் நமது மீட்புக்காகத் தமது பிதாவுக்குத் தம்மைப் பலியாக ஒப்புக்கொடுத்த இரட்சகரை இயேசுவின் திருஇருதய அன்பர்கள் தாங்கள் அவர்பேரில் வைத்த அன்பால் ஏவப்பட்டு நினைவின் வழியாய் பூங்காவனத்தில் நுழைந்து, அவருக்கு ஆறுதல் வருவிக்க ஆசைப்படுவார்கள். இந்த ஒலிவேத்மலைத் தோட்டத்தில் விசேஷமாய் இயேசுவின் திருஇருதயமானது தாம் மனிதர்கள் பேரில் வைத்த அணைகடந்த அன்பைக் காண்பிக்கிறது.

இயேசு மனிதர்களுடைய பாவங்களையெல்லாம் தமது மேல் சுமந்து கொண்டு தமது பிதாவின் கோபத்தை குறைத்து மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் பண்ண அவருக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணங்குகிறார். அச்சமயம் அவருடைய திருஇருதயமானது சகிக்க முடியாத துக்கத்தில் மூழ்கியது. அகோரமான கோபத்தோடும், தளராத நீதியோடும், பயம் வருவிக்கக்கூடிய தோற்றத்தோடும், தமது பிதாவை தமக்கு முன்னால் இருப்பதாக பார்க்கிறார். துரோகியான யூதாஸென்பவன் தம்மை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறதையும், கொடிய யூதர்கள் தமது மாமிசத்தைக் கிழித்துத் தம்மைச் சிலுவையில் அறைகிறதையும், தம்முடைய அப்போஸ்தலர்களும் சீடர்களும் தமது விரோதிகளின் கையில் தம்மை விட்டுவிட்டு ஓடிப்போகிறதையும், கடைசியாய் இலட்சக்கணக்கான ஆத்துமங்கள் தமது பாடுகளால் யாதொரு பலனடையாமல் தாம் காண்பிக்கும் அன்பை சற்றும் உணராதவர்களாய் என்றென்றைக்கும் தண்டனைக்குள்ளாகப் போகிறதையும் கண்டார். இந்தக் காட்சிகளானது அவருடைய அன்பு நிறைந்த திரு இருதயத்துக்குப் பொறுக்க முடியவில்லை . அதனால் உடல் முழுவதும் இரத்த வியர்வையினால் நிரம்ப தரையில் முகங்குப்புற விழுகிறார்.

திவ்விய இயேசுவை இந்த நிலையில் காண்கிற நம்முடைய இருதயமானது பாவத்தை முழுவதும் அவருவருத்துத் தள்ள வேண்டும். பாவியின் வடிவில் மனிதர் பாவங்களைத் தமது பேரில் சுமந்துகொண்ட தமது பரிசுத்த குமாரனை பிதாவானவர் இவ்வளவு கொடுமையாய் நடப்பித்திருக்க பல பாவங்களைக் கட்டிக்கொண்டிருக்கிற நாம் அந்தப் பாவங்களுக்கு இவ்வுலகத்தையே பரிகாரம் பண்ணாவிட்டால் தேவநீதி நம்மைக் கொடூரமாய் நடத்தும்!

சோதனை நேரத்திலும் துன்பவேளையிலும் நாம் நம்பிக்கையோடும் தேவ விருப்பத்திற்கு அமைந்த மனதோடும், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தின் மாதிரியாக அவைகளை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்று திவ்விய இயேசு மரண வேதனைப்படுகிற சமயத்தில் தமது பிதாவை நோக்கி : அப்பா தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும் என்று கூறினார். புனித மாற்கு 14:36)

நமது சோதனை வேளையில் திவ்விய இயேசுவின் மாதிரிகையைப் பின்பற்றி, நம்முடைய துன்பங்களை அவருடைய பாடுகளோடு ஒன்றித்து, நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவைகளை ஒப்புக்கொடுக்க வேண்டும். நம்முடைய சிலுவைகளிலிருந்து நம்மை விடுவிக்க ஆண்டவரை நோக்கிக் கேட்கும்போது, திவ்விய இயேசுவைப்போல், (பிதாவே! உமது விருப்பப்படி நிகழட்டும், என் விருப்பப்படி நிகழவேண்டாம். உமது சித்தப்படியே ஆகக்கடவது. என் மனதின் படி ஆகவேண்டாம்.) என்று நாமும் சொல்லவேண்டும். திருச்சபைத் துவக்கத்தில் முன்னூறு வருடமௗவாய் மறைசாட்சிகள் தங்கள் இரத்தத்தைச் சிந்தும்படி இயேசுக்கிறிஸ்துநாதர் விரும்பினார் அவ்வளவு வேதனையை திவ்விய இயேசு நம்மிடம் இப்போது கேட்கிறதில்லை. நம்முடைய பாவங்களுக்கு நாம் செய்கிற பரிகாரத்தாலும், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தோடு ஒன்றித்து நம்மை முழுவதும் ஆத்தும் மீட்புக்கு கையளிப்பதினாலும் நாம் வேதசாட்சிகளாகும்படி ஆசிக்கிறார்.

கசப்பான கிண்ணக் கடைசித்துளிவரை குடிக்கத் தீர்வையிட்டார்” என்று திருவுளம் பற்றிய பின்னர், புனித மார்க்கரீத் மரியம்மாள் ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்து போது இயேசு அவருக்குத் தோன்றி, புனிதையை நோக்கி : “மகளே, நாம் பூங்காவனத்தில் முழுமனதோடு அனுபவித்த மரண வேதனையை நீயும் வியாழக்கிழமை இரவுதோறும் அனுபவிக்கும்படி செய்வோம். ஆதலால் நமது பிதாவுக்கு நாம் ஒப்புக் கொடுத்த அந்தத் தாழ்ச்சி நிறைந்த ஜெபத்தில் நீயும் நம்மோடு ஒன்றிக்கும்படியாக நள்ளிரவு பதினோரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் இடையில் எழுந்திருந்து மனிதருடைய பாவங்களை ஆண்டவர் மன்னித்து அவர்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், தேவகோபத்தை குறைக்கும்படியாகவும் நீ தரையில் முகங்குப்புற விழுந்து வணங்குவாயாக! நமது திருத்தூதர்கள் நம்மைவிட்டு ஓடிப்போனது நமக்கிருந்த தவிப்பை நீ சிறிதளவாவது தணியச் செய்வாய்.

இதனாலேதான் நம்மோடுகூட ஒரு மணி நேரமுதலாய் விழித்திராதினிமித்தம் அவர்களைக் கண்டிக்கும்படி நேரிட்டது” என்று சொல்லி மறைந்தருளினார்.

சுமார் 120 வருடங்களுக்கு முன் புனித தன்மையிலும் இயேசுவின் திருஇருதயப்பக்தியிலும் மிகவும் சிறந்து விளங்கின லியோனார்து என்னும் ஒரு இயேசுசபைக் குரு இருந்தார். இவர் பிரான்ஸ் நாட்டினர். தமது திவ்விய இரத்தத்தால் மீட்கப்பட்ட ஆத்துமாக்கள் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை மீட்க தேவநற்கருணையில் வீற்றிருக்கும் திவ்விய இயேசுவின் திரு இருதயத்தை நோக்கி இந்தப் பரிசுத்த குருவானவர் மிகுந்த பக்தி சுறுசுறுப்போடு வேண்டிக்கொண்டிருந்தார். அப்போது, திவ்விய இயேசு தமது திரு இருதயத்திற்கு மிக்க மகிழ்ச்சியும், ஆத்துமாக்களுக்கு மிக்க பிரயோசனமுமான ஒரு சபையை ஏற்படுத்தும்படியும், அச்சபை கீழே கூறப்படும் இரண்டு கருத்துக்களுக்காக ஏற்படுத்தப்படவேண்டுமென்றும் தெரிவித்தார். முதலாவது, வாழ்நாள் முழுவதும் விசேஷமாய்ப் பூங்காவனத்தில் மனித மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட தமது திவ்விய இருதயத்துக்கு வணக்கம் வருவித்தல். இரண்டாவது இலட்சக்கணக்காய் உலகமுழுவதிலும் சாகிற சகலருக்கும் நன்மரண வரம், மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம் கொடுக்க இரந்து மன்றாடுதல்.

இயேசுவின் திரு இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு அந்த இயேசுசபைக் குருவானவர் சில ஞானவேகமுள்ள மனிதர்களைக் கேட்டுக்கொண்டதின் பேரில், அவர்களெல்லோரும் ஒரு சபையாகச் சேர்ந்து பின்வரும் ஜெபத்தை ஜெபித்து வருகிறார்கள்.

“கருணாம்பர இயேசுவே! ஆத்துமங்களை நேசிக்கிறவரே, தேவரீருடைய ஆராதனைக்குரிய இருதயமானது பூங்காவனத்திலும் சிலுவையிலும் பட்ட மரண துன்பதுயரங்களையும், உம்முடைய மாசில்லாத திருத்தாயார் அனுபவித்த வியாகுலங்களையும் பார்த்து இன்றுதானே பூமியில் எங்காவது அவஸ்தைப்பட்டு மரிக்கப்போகிற ஆத்துமங்களை உமது திவ்விய இரத்தத்தால் சுத்திகரித்தருளும். மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயமே! இன்று மரிக்கிற பாவிகளின் பேரில் இரக்கமாயிரும். ஆமென்.”

விசேஷமாய் மரண அவஸ்தைப்படுகிற பாவிகள் மனந்திரும்படியாக, நாமும் மேற்சொன்ன செபத்தை வேண்டிக்கொள்வோமாக.

வரலாறு:

இயேசுவின் திரு இருதயத்தின் பேரில் பக்தியுள்ள ஒரு மனிதன் ஒரு நாள் ஒரு சோதனைக்குட்பட்டு கனமான பாவத்தில் விழுந்துவிட்டான். ஆனால் இயேசுவின் திரு இருதயமானது அப்பாவியின்மேல் இரங்கி, தமது அருட்கொடையால் அவனுடைய இருதயத்தை எவ்வளவு இளகச் செய்தாரென்றால், அப்பாவி உடனே ஒரு குருவானவரைத் தேடிப்போய் அவர் பாதத்தில் விழுந்து அழுது, மிக்க துக்க மனஸ்தாபத்தோடு ஒப்புரவு செய்து, தன் பாவத்தைப் பரிகரிக்கக்கூடிய ஒரு பெரிய தவமும் கொடுக்கும்படி கேட்டான். பாவியானவன் ஏழு வருடம் தவம் செய்யும்படி குருவானவர் கட்டளையிட்டார். சுவாமி, ஏழு வருடங்கள் நான் செய்த பாவங்களுக்கு என் வாழ்நாளெல்லாம் பரிகாரம் செய்தாலும் போதாதே என்று சொல்லி அழுதான். குருவானர் அப்பாவியிடம் விளங்கிய மிகுந்த உத்தமமனஸ்தாபத்தைக் கண்டு, மகனே, மூன்று நாளைக்கு மட்டும் ஒரு சந்தி உபவாசம் செய் என்றார். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத அந்த மனிதன் முன்னிலும் அதிகமாய் அழுது மிகக் கடினமான தவமுயற்சி தனக்குக் கட்டளையிடும்படி கெஞ்சிக் கேட்டான். குருவானவர் மனந்திரும்பிய பாவியை நோக்கிச் சொல்வார். “இனி என்னிடம் அதிகமாய்க் கேட்காதே. இதுதான் கடைசித் தீர்மானம்; உன் பாவத்துக்கு அபராதமாக ஒரு கர்த்தர் கற்பித்த ஜெபம் சொல்” என்று கற்பித்தார். அத்தருணத்தில் பாவியானவனுடைய இருதயம் பொறுக்க முடியாத துக்க மனஸ்தாபத்தாலும், இயேசுவின் திரு இருதய அன்பினாலும் எவ்வளவு நிறையப் பெற்ற தென்றால், அதைத் தாங்கமாட்டாமல் உடனே இறந்துபோனான். இவ்வகையாய் இயேசுவின் திரு இருதயத்தை என்றென்றைக்கும் புகழ்ந்து பாட மோட்ச இராட்சியத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்.

இயேசுவின் திருஇருதய இரக்கமானது நமது பேரிலும், உலகிலுள்ள சகல பாவிகள் பேரிலும், விசேஷமாய் இச்சமயம் மரிக்கப்போகிற பாவிகள் பேரிலும் இறங்கிவரும்படி நாமும் மன்றாடுவோமாக. ஆத்தும் மீட்புக்காக மரண அவஸ்தைப்பட்ட திரு இருதயமானது, மரண அவஸ்தைப்படுகிற சகல பாவிகளுக்காக நீங்கள் மன்றாடவும், உங்கள் அன்றாட செயல்களை ஒப்புக்கொடுக்கவும், கேட்கின்றது.

நித்திய நரகாக்கினையிலிருந்து பாவியானவன் தப்பிக்க தேவையானது ஒப்புரவு அருட்சாதனம். இது இல்லாவிட்டால் உத்தம் மனஸ்தாபம். இந்த இரண்டு வாரங்களில் ஒன்றை மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயத்தை நோக்கிக் கேட்போமாக. ஆதலால் கால தாமதமின்றி உடனே திருஇருதயத்தைப் பார்த்து வேண்டிக்கொள்ளுங்கள். ஏனென்றால் நாளை என்பது பல ஆத்துமங்களுக்குக் கிடைக்காது. ஆதலால் வேண்டிக்கொள்ளுங்கள். அந்த ஆத்துமங்களை அன்பு செய்கிற திவ்விய இயேசு உங்களை ஆசீர்வதித்து உங்களுக்கு பலனை அளிப்பார். உங்களுடைய வேண்டுதலால் நாள்தோறும் ஒரு ஆத்துமத்தை மீட்பீர்களேயாகில், ஒரு வருடத்தில் 365 ஆத்துமங்களை மீட்பீர்களே! இது உங்களுக்கு மோட்சத்தில் எவ்வளவு பெரிய பலன் ! இந்த ஆத்துமங்களெல்லாம் நித்தியத்துக்கும் உங்களுடைய மகிழ்ச்சியாகவும், மகிமையாகவுமிருக்கும். உங்களால் மீட்கப்பட்ட இந்த ஆத்துமங்கள் உங்களுடைய மீட்புக்கு அஸ்திவாரமாயிருக்கும். இந்த விஷயத்தில் அப்போஸ்தலராகிய புனித யாகப்பர் சொல்லுவது என்னவென்றால் துன்மார்க்கத்திலிருந்து ஒரு பாவி மனந்திரும்பக் காரணமாயிருக்கிறவன் சாவிலிருந்து தன் ஆத்துமத்தை மீட்டு அநேக பாவங்களுக்குப் பொறுத்தலடைவான் என்பதாம்.

நீயும் ஒருநாள் மரண அவஸ்தைப்படுவாய் பயங்கரமான இந்தக் கடைசி யுத்தத்தில் உன் வாழ்க்கையில் நீ செய்ததுபோல் அநேக பக்தியுள்ள ஆத்துமாக்கள் உனக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறார்கள் என்று நீ நினைக்கிறது உனக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும்! ஆதலால் நாள்தோறும் துன்பப்படுகிறவர்களுக்காக வேண்டிக்கொள். தினமும் தவறாமல் “கருணாம்பர இயேசுவே” என்கிற ஜெபத்தைச் சொல்.

சிந்தனை :

ஆத்தும் மீட்புக்காக நம்மாலான சகலமும் செய்யவேண்டும். எல்லாவற்றையும் பொறுமையோடு அனுபவிக்க வேண்டும். பரித்தியாகமும் செய்ய வேண்டும். மிதமிஞ்சிய எல்லாப்பற்றுதல்களையும் தூர அகற்றிவிட வேண்டும். பாவிகள் மனந்திரும்பவும், உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் வேதனை குறைந்து மோட்சபாக்கியம் சேரவும் நாள்தோறும் வேண்டிக்கொள்வோமாக.

செபம் :

மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திரு இருதயமே! இன்று மரிக்கிறவர்கள் பேரில் இரக்கமாயிரும்.

Comments are closed.